புதன், 1 பிப்ரவரி, 2012

சொல்கிறார்கள்                                                                                                                                


இயற்கை ஆர்வலர் ÷ஷாபனா மேனன்: என் அப்பாவின் வேலை காரணமாக கேரளாவிலிருந்து, சென்னைக்கு குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம். சின்ன வயதில், சாலையோரம் முழுக்க மரங்கள் நிறைந்த சென்னையைப் பார்த்து, அனுபவித்து ரசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட சென்னை, இன்று, முழுவதும் கான்கிரீட் காடாக மாறி வருவதைப் பார்த்து சோகமும், கோபமும் எனக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது. பிள்ளைகள் வளர்ந்து, என் பொறுப்புகள் குறைந்த போது, தனி மனுஷியாக என்ன செய்துவிட முடியும் என்று மிரளாமல், நம்மால் முடிந்ததைச் செய்வோமென்று, பசுமைப் பணியில் இறங்கினேன். வீடு, அக்கம் பக்கம், அருகில் உள்ள சாலைகள், பார்க்குகள், மைதானங்கள் என்று முடிந்தளவிற்கு மரக் கன்றுகள் நடுவது, மரங்கள், செடிகளுக்குத் தண்ணீர் விடுவது என்று முயற்சிகள் எடுத்தேன். பசுமை சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டங்களில் பங்கேற்ற போது, இயற்கை ஆர்வலர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைந்த போது, "நிழல்' என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பில் உள்ளவர்கள், தண்ணீர் ஊற்றுவது, செடிகளைப் பராமரிப்பது என்று, அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றனர். இப்படி பொது இடங்களில் ஆரம்பித்து, பள்ளிகள், சாலை ஓரங்கள், குடியிருப்புப் பகுதிகள் என்று, "நிழல்' அமைப்பால் நிழல் தரும் மரங்கள், சென்னைக்குள் நிறைய இருக்கு. சென்னை போன்ற பெருநகரங்களில் பலரும், "குழந்தைகள் கூட செலவழிக்கவே நேரம் இல்லை. இதில் மரங்களை எங்கு பாதுகாப்பது' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், மரங்களுக்காக செலவழிக்கும் நேரம், நம் குழந்தைகளுக்காக சேமிக்கும் இயற்கைச் செல்வம் தான். அடுத்த தலைமுறைக்கு, இயற்கையைத் தவிர, பெரிதாக எதைக் கொடுத்து விட முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக