"அடையாளத்தை தந்தது!'
பென்சிங் என்ற கத்திச் சண்டைப் போட்டியில், ஆசிய அளவில் முத்திரை பதித்துள்ள கார்த்திக்: என் அண்ணன் மாநில அளவில், தடகளத்தில் கலக்கியவர். அவருடன், பயிற்சிக்குப் போகும் போது தான், எனக்கும் தடகளத்தில் ஆர்வம் வந்தது. அதிலும், நிறைய பதக்கங்கள் வாங்கியிருக்கிறேன். திடீரென்று ஒரு நாள், அண்ணனிடம், அவரின் பயிற்சியாளர், பென்சிங் பற்றியும், அதைக் கற்றுக் கொள்ளவும் கூறினார். என் அண்ணன் மறுக்கவே, நான் முயற்சி செய்து கற்றுக் கொண்டேன். இரண்டு ஆண்டில், தேசிய அளவில், என் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். தொடர்ந்து ஆறு முறை மாநில சாம்பியன், தேசிய போட்டியில் தங்கம், தெற்காசியப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் என்று வேகமாக முன்னேறினேன். பழைய சினிமாக்களில் உள்ள கத்திச் சண்டை போலத்தான், இந்த விளையாட்டிற்கும் அடிப்படை. ஆனால், இந்த விளையாட்டில் கூர்மையான வாளுக்கு பதில் கம்பி இருக்கும். உடம்பில் பட்டால், வலி தாங்க முடியாது. இதில் எப்பி, பாயில், சேபர் என்று, மூன்று பிரிவுகள் உண்டு. பாயிலில் கழுத்துக்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியைத் தாக்குவர். எப்பியில், ஒட்டுமொத்த உடம்பையும் தாக்குவர். சேபரில், இடுப்பிற்கு மேல், கைகளைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் தாக்குவர். இவற்றில், சேபர் தான் மிக வேகமான பிரிவு; துல்லியம் தேவை. மொத்த ஆட்டமுமே, ஒன்பது நிமிடத்தில் முடிந்துவிடும். இந்த விளையாட்டிற்கான மின்சார இணைப்புள்ள ஆடை, கவசத்தின் விலை மட்டும், 25 ஆயிரம் ரூபாய். விளையாடும் போது, ஆடையைப் பலமுறை மாற்ற வேண்டிவரும். கொஞ்சம் செலவு பிடிக்கும் விளையாட்டாக இருந்தாலும், அதுதான் எனக்கு, அடையாளத்தை உருவாக்கியது. பென்சிங் விளையாட்டு ஒலிம்பிக்கில், 48 பதக்கங்களைக் கொண்ட விளையாட்டு. வரும் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில், தங்கம் வெல்ல வேண்டும்; அது தான் கனவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக