சனி, 28 ஜனவரி, 2012

woman snatched the robber: கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கமுயன்றவரைப் போராடி பிடித்த பெண்




பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், குழந்தைக்காக சுடுதண்ணீர் கேட்பது போல நடித்து, கொள்ளையடிக்க முயன்றவருடன் கை அறுபட்ட நிலையிலும் போராடி, போலீசில் பிடித்துக் கொடுத்தார் வீரப்பெண் சாந்தி.பரமக்குடி பாசிபவளக்காரத் தெருவை சேர்ந்தவர் சாந்தி, 40. கணவர் அர்ச்சுனன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். வீட்டில் சாந்தி தனியாக இருந்தபோது, நேற்று காலை 10.30 மணிக்கு ஒருவர் வந்தார். தனது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், பால் பாட்டிலை காட்டி, கழுவ சுடுதண்ணீர் வேண்டுமென கேட்டார். சாந்தி, சுடுதண்ணீர் வைக்க சமையலறைக்கு சென்றார். பின்னால் ஓடி வந்த அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, நகையை தருமாறு மிரட்டினார்.

தாலிச்சங்கிலி உட்பட நகைகளை கழற்றுவது போல பாவனை செய்த சாந்தி, திடீரென கொள்ளையன் வைத்திருந்த கத்தியை பிடித்துக்கொண்டு, அவனை சமையலறையில் இருந்து வீட்டு வராண்டா வரை இழுத்து வந்தார்.இதில் அவரது கை அறுபட்டது. விடாமல் வீட்டின் வெளியே இழுத்து வந்த போது, நிலைதடுமாறிய கொள்ளையன் கீழே விழுந்தான். பின்னர் சாந்தி கூச்சலிட்டார். இதை கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து, கொள்ளையனை பிடித்து, அருகில் உள்ள மரத்தில் கட்டிவைத்து உதைத்தனர். தகவல் தெரிவித்தும் அரைமணிநேரம் கழித்து, டவுன் போலீசார் வந்தனர். கொள்ளையடிக்க பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி, இளையான்குடி அருகே அம்முகுடியை சேர்ந்த கொள்ளையன் ரமேஷை, 32, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சாந்தி கூறுகையில், ""உழைத்த பணத்தில் வாங்கிய நகையை பறிகொடுக்க மனமில்லை. இந்த நினைப்பே எனக்கு வீரத்தை வரவழைத்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை, என துணிந்து போராடினேன். துணிச்சல் எனது நகையை காப்பாற்றியது, என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக