சொல்கிறார்கள்
ஹெப்டாதலன் விளையாட்டில், 25 ஆண்டு சாதனையை முறியடித்துள்ள கலைவாணி: என் வீட்டிற்கு நான் தான் மூத்த பெண். மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், "ஜவுளிக் கடையில் போய் வேலை பாருன்னு' அம்மா சொல்லிட்டாங்க! எனக்கு ஒரு தம்பி இருக்கான்; குடும்பக் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, படிப்பை பாதியில் விட்டு விட்டு, கூலி வேலைக்குச் செல்கிறான். அவ்வளவு குடும்பக் கஷ்டத்திலும், கடுமையாகப் படித்து, பிளஸ் 2வில், 1,050 மார்க் எடுத்தேன். ஆனாலும், என் அம்மா மேற்கொண்டு படிக்க அனுமதிக்கவில்லை; தேர்வு முடிவு வந்ததும், வேலைக்குச் சேர்ந்து விட்டேன். என் அம்மா மேலயும் வருத்தப்பட முடியாது; வீட்டின் வறுமையான சூழ்நிலை அப்படியிருந்தது. கூலி வேலை பார்த்து வரும் வருமானத்தில், என்னை படிக்க வைக்க முடியுமா என்று தயங்கினார். என் பள்ளி ஆசிரியர்கள் தான், எனக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தையும், விளையாட்டிலுள்ள திறமையையும் அம்மாவிடம் எடுத்துக் கூறி, சென்னைக்கு படிக்க அனுப்பினர். இந்த ஆண்டு, சென்னை பல்கலைக் கழக அளவிலான, ஏ.எல்., முதலியார் போட்டியில் ஹெப்டாதலன் விளையாட்டில், தனிநபர் பிரிவில், சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த, 1987ல், மீனா கோபால் பெற்ற சாதனையை முறியடித்துள்ளேன். 100 மீட்டர் அடல்ஸ், மும்முறை தாண்டுதல் என, ஏழு தனித்தனிப் போட்டியில், ஏழு தங்கப் பதக்கங்களை வென்றுள் ளேன். இவ்வளவு சாதித்து என்ன பயன்... என்னால் வீட்டிற்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது. இந்த ஆண்டு இந்தியன் வங்கி நடத்திய போட்டியில், எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்போது எனக்கிருந்த லேசான மூட்டுப் பிரச்னை அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்யுமளவிற்கு சீரியஸ் ஆகிவிட்டது. இப்போது, நடந்தாலே போதும் என்ற நிலைமையில் இருக்கிறேன். அப்பா பொறுப்பில் இருந்து என் கோச் நாகராஜ் தான், என்னை பார்த்துக் கொள்கிறார். இன்னும் ஆறு மாதம் முழு ஓய்விற்குப் பின், நிச்சயம் நான் சாதிப்பேன்! தொடர்புக்கு: 99406-99728
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக