நல்ல வேண்டுகோள். ஆனால், நாட்டு வரலாறு அறியாமல் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மண்ணாக இருந்த நிலப்பகுதிதான் மொழிக்கலப்பால் பிறக் கலப்பும் ஏற்பட்டுக் கன்னடமண்ணாக மாறியது. எனவே, ௧௦ ஆம் நூறறாண்டு முதல் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தவறான செய்தி. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட, பெங்களூர்,மைசூர், கோலார் முதலான பல பகுதிகளில் தமிழர்களே பெருமபான்மையராக இருந்துள்ளார்கள் என்பதையும் குறிக்க வேண்டும்.
செம்மொழித் திட்டத்தின் கீழ் எல்லாப் பகுதிகளிலும் தமிழ் கற்பிக்கப்பட வழிவகை செய்யலாமே! தினமணி எழுப்பும் தமிழோசை உரியவர்கள் செவிகளிலும் விழும்; தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கருநாடகத் தமிழர்கள் ஏக்கம்
First Published : 24 Jan 2012 01:29:32 AM IST
பெங்களூர்: கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா என்று கர்நாடக தமிழர்கள் ஏங்கி வருகின்றனர். திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்குத் தக்கவர்களாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இனத்தவர் தமிழர்கள். இதற்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல. தென் கர்நாடகத்தின் பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம், ராமநகரம், மைசூர், கோலார், ஹாசன், மண்டியா, சாமராஜ்நகர், வட கர்நாடகத்தின் ஷிமோகா, பெல்லாரி, ஹூப்ளி போன்ற மாவட்டங்களில் 10-ம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். காலங்காலமாக கர்நாடகத்தில் பிறந்து வாழ்ந்திருந்தாலும், தமிழையும், அதன் பெருமையையும் என்றைக்கும் மறவாமல் இதயமுற்றத்திலும், இல்லமுற்றத்திலும் உயிர்ப்புடன் அடைகாப்பவர்கள் தமிழர்கள். பெங்களூர், கோலார் மாவட்டங்களில் தமிழர்களின் ஆதிக்கமும், தமிழின் வீச்சும் பரவலாகக் காணப்பட்டது. காலவெள்ளத்தில் இதில் வீழ்ச்சி தென்பட்டாலும், எழுச்சி குறையவில்லை என்பதற்கு தமிழர்கள் இன்னும் வீடுகளில் தமிழ் பேசுவதே சாட்சி. கர்நாடக தமிழர்கள் அண்மைக் காலமாக எதிர்கொண்டுள்ள கேள்வி, அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதுதான். இதற்கு ஒரே பதில் தமிழ்மொழியை ஒருமொழிப்பாடமாக கற்பிப்பதுதான். ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே இல்லாத பட்சத்தில் இது எப்படி சாத்தியமாகும். இதற்குத் தீர்வாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை நிறுவ வேண்டுமென்று பெங்களூர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன. சில கல்லூரிகளில் தமிழ்த்துறைகள் செயல்பட்டாலும், முதுகலைப்பட்டம் படிக்க, ஆராய்ச்சி மேற்கொள்ள வழியில்லாததால் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படிக்க ஆர்வம் கொண்டவர்கள் குறைந்து வருகிறார்கள். தமிழர்களுக்கு குறைவில்லை என்றாலும், தமிழுக்கு இடமில்லாதபோது தமிழ் எப்படி தழைக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்ப் பேராசிரியர் ஒருவர். தமிழக அரசு நிதியுதவி செய்தால் தமிழ்த்துறை தொடங்குவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குவதில் தடையிருக்காது என்கிறார். பெங்களூர் தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க வேண்டுமென்பது எங்கள் நீண்ட நாளைய கோரிக்கை. கர்நாடக தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக ஆட்சியில் வழி பிறக்கும் என்று நம்புகிறோம் என்றார். பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கினால், அது பல நூற்றாண்டுகளாக நீண்டு கொண்டிருக்கும் தமிழர்-கன்னடர் உறவில் புதிய மைல் கல்லாக அமையும். இதற்கு தமிழக அரசு மனது வைக்க வேண்டுமே என்று ஏங்குகிறார்கள் கர்நாடகத் தமிழர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக