எஸ்.அச்சுதகண்ணன், கம்பத்திலிருந்து எழுதுகிறார்: 1956, நவம்பர் 1ம் தேதி, உருவான கேரள மாநிலத்தில் உள்ளடங்கி போன தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய பகுதிகள், தமிழின் தொன்மை வரலாற்று காலம்தொட்டு, சேர மன்னனின் ராஜ்யங்களே! இன்றைய மூணாறு அருகே, மறையூரில் உள்ள முனியறை குகைகளில், தமிழின் வட்டெழுத்துகள் இன்றும் காணப்படுகின்றன. இன்று, தாய் தமிழகத்திலிருந்து பிரிந்துபோன இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இம்மூன்று பகுதிகளில், 1957ம் ஆண்டு வரை, 92 சதவீத தமிழர்கள் வாழ்ந்தனர். இன்றோ, அங்கே, 40 சதவீதத்திற்கும் கீழ் சென்றுக் கொண்டிருக்கிறோம்.ஏனெனில், 1957 வரை இருந்த பட்டம் தாணுபிள்ளை என்ற கேரள முதல்வரால் குடியமர்த்தப்பட்ட கேரள ஆயுள் கைதிகளின் அட்டகாசத்தால், சேற்றுக்குழி, கொச்சர உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு, இன்று கூலிகளாக வாழ்கின்றனர். ஏன், இன்று வாழும் தமிழர்களில், 30 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களின் பூர்வீகம், திருநெல்வேலி மற்றும் விருதுநகர், ராமநாதபுரம் பகுதியே!சிவகங்கைக்கு அருகிலுள்ள, தேவகோட்டை வாழ் மக்களில் பெரும்பாலோர், ஏலத்தோட்ட அதிபர்களாக இருந்தது வரலாறு. பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை இழந்து, சில சமூக விரோத கேரளவாசிகளின் செயலால், தங்களது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, இன்னும் தேவகோட்டையில் எண்ணெய் கடை வைத்து, பிழைப்பு நடத்துபவர்களும் உள்ளனர்.தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், கேரளத்திற்கு மகுடம் சூட்டும் தேக்கடி, மூணாறு போன்ற உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களும், இன்று இடுக்கி அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள, 5 அடி வெட்டினாலும் தண்ணீர் வரக்கூடிய உடும்பன் சோலை தாலுகாக்கள் அடங்கிய பகுதி. நறுமண பொருட்களின் உலக வர்த்தக மையமாக திகழக்கூடிய பகுதிகள். மேலும், தமிழகத்தின் ஐந்து மாவட்டத்தின் தாயான முல்லைப் பெரியாறு அணை அடங்கிய பகுதி இது.இப்பகுதியின் பெருமையை உணர்ந்து, இப்பகுதி மக்களின் துயரைத் தீர்க்க வழி உண்டா எனத் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக