தனித்தமிழ் விழா- புதுவைத் தமிழ்க்கழகம்
பதிவு செய்த நாள் : 23/01/2012
தனித்தமிழ்இயக்கம் ஆண்டுதோறும் சுறவ(தை)த் திங்களில் தனித்தமிழ் விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு 2043 சுறவம்(தை) 6ஆம் நாள் (20.1.2012) வெள்ளியன்று அவ்விழாவை முன்னாள் ஆணையர் தியாகராசன் தலைமையில் புதுவைத் தமிழ்க்கழக(சங்க)த்தில் நடத்தியது. கலைமாமணி மணிக்கண்ணன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆசிரியை தமிழிசைவாணி வரவேற்றுப் பேசினார். தனித்தமிழ் இயக்கத்தின் 13 வகையான செயற்பாடுகளை அவர்தம் உரையில் எடுத்துக் கூறினார்.
தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளாரின் படத்தைப் பாவலர் இலக்கியன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாட்டரங்கில் வில்லியனூர் பழனி வடமொழியை நீக்கு என்னும் தலைப்பிலும் பாவலர்தமிழியக்கன் தனித்தமிழ்ப்பெயரிடு என்னும்தலைப்பிலும் பாவலர் மு.பாலசுப்பிரமணியன் பெயர்ப்பலகைத் தமிழாக்கு என்னும் தலைப்பிலும் பாவலர் அசோகா சுப்பிரமணியன் தனித்தமிழ் இதழ்படி என்னும் தலைப்பிலும் பாவலர் தமிழ் உலகன் ஆங்கிலத்தைப்போக்கு என்னும் தலைப்பிலும் பாடல்கள் வழங்கினர்.
உரையரங்கில் முனைவர் மறைமலை இலக்குவனார், இலக்குவனாரின் தனித்தமிழ்ப்பணி குறித்தும் முனைவர் அ.அறிவுநம்பி பாவாணரின் திருக்குறள் ஆய்வுகள் குறித்தும்
முனைவர் க.தமிழமல்லன் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் என்பது குறித்தும் உரைகளை நிகழ்த்தினர். க.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
தனித்தமிழ் விழாவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புயலாலும் மழையாலும் தீங்கடைந்த புதுச்சேரியை விரைந்து சீரமைத்து உதவித்தொகை வழங்கிய புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமியைத் தனித்தமிழியக்கம் பாராட்டுகிறது.
1. புயலாலும் மழையாலும் தீங்கடைந்த புதுச்சேரியை விரைந்து சீரமைத்து உதவித்தொகை வழங்கிய புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமியைத் தனித்தமிழியக்கம் பாராட்டுகிறது.
2. முப்பது ஆண்டுகளுக்குமேல் வலியுறுத்தப்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றைப் புதுச்சேரி அரசு உடனே அமைக்க வேண்டும்.
3. கலை,பண்பாட்டுத்துறை அளித்து வரும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் தமிழ்மாமணி கலைமாமணி விருதுகளையும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் திருவள்ளுவர் திருநாளில் விழா நடத்தி வழங்குமாறு தனித்தமிழ் இயக்கம் புதுச்சேரி முதல்வரைக் கேட்டுக்கொள்கிறது. மூன்றாண்டுகளாக வழங்கப்படாத அவற்றை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.
4. காரைக்கால் புதுச்சேரிக் கிளை நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வழக்கம்போல் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களில் 144 படிகள் வாங்கும் முறையைத் தவறாமல் செயற்படுத்த வேண்டும். வாங்கும் நூல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் வாங்காமல் தவிர்ப்பதும் மிகவும் வருந்தத் தக்கது.
5. வரும் ஆண்டுகளில் வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
5. வரும் ஆண்டுகளில் வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
நிரப்பப் படாத நூலகர் பணியிடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.
6. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இயல்பாக இயங்குவதற்கான இடத்தை உடனடியாக வழங்க வேண்டும். விரைவில் அதற்காகத் தனி வளாகம் கட்ட ஆவன செய்ய வேண்டும்.
7. புதுச்சேரிப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு வங்கக் கடலில் – குமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப்போல், சிலைஅமைத்துப் படகுப் போக்குவரத்து நடத்திப் புதுச்சேரியை நாகரிகமான இலக்கியச் சுற்றுலா இடமாக்கி வருவாயைப் பெருக்க ஆவன செய்யுமாறு புதுச்சேரி அரசைத் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக