வியாழன், 26 ஜனவரி, 2012

seventh sense of differently abled girl: மாற்றுத் திறனாளிச் சிறுமியின் "ஏழாம் அறிவு':





திருச்சி: கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி என்ன கிழமை என்று கேட்டால், "புதன் கிழமை' என்று பளிச்சென்று சொல்லி, திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.

கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி, என்ன கிழமை என்று கேட்டால், நாம் அனைவரும் காலண்டரை புரட்டுவோம் அல்லது மொபைல் போனில் உள்ள காலண்டரை பார்ப்போம். ஆனால், திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி பிரியங்காவிடம், 2010, 2011, 2012, 2013 ஆகிய நான்கு ஆண்டுகளில் மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டால், சரியான கிழமைகளைச் சொல்லி அசத்துகிறார். திருச்சி, தீரன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 47; சென்னையில், செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பானு; உறையூர் சிவாலயா பாலானந்தா பள்ளியில் சிறப்பு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும், "கேர் டேக்கராக' வேலை பார்க்கிறார். இவர்களது மகள் பிரியங்கா, 11. புத்தூர் நால்ரோட்டில் உள்ள ஆல்-சைன்ட்ஸ் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

பிரியங்காவுக்கு, மற்ற குழந்தைகளை காட்டிலும் தனித்திறன் உள்ளது. பிரியங்கா பிறக்கும்போது, மாறுகண் ஏற்பட்டது. இடது கை செயல்படவில்லை. இடது கால் வளர்ச்சி குன்றி காணப்பட்டது. அவர் வளர்ந்த பிறகு சற்று திக்கி... திக்கித் தான் பேசினார். மனம் தளராத தாய் பானு, குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி இரவு 11 மணிக்கு அவரது தாய் பானு, "ஆகஸ்ட் 13ம் தேதி "லீவு' போடணும். "லீவு' கிடைக்குதா? என்னானு தெரியலை' என்று புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது, பிரியங்கா, "ஆகஸ்ட் 13ம் தேதி சனிக்கிழமை உனக்கு "லீவு' தானே அம்மா?' என்று சாதாரணமாக கூறியுள்ளார். இதைக் கேட்ட பானு, காலண்டரை புரட்டி பார்த்து, ஆச்சர்யமானார். சிறுமி சொன்னது சரியாக இருந்தது.

இதுகுறித்து பிரியங்காவின் தாய் பானு கூறியதாவது: பிரியங்காவுக்கு இப்படி ஒரு, "சூப்பர் பவர்' இருப்பது, கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி தான் தெரியும். 2010, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் எந்த மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டாலும் சரியாக கிழமையை சொல்லிவிடுவாள். அதேபோல், குறிப்பிட்ட மாதத்தில் எந்தெந்த தேதியில் எத்தனை முறை ஒரே கிழமை வருகிறது என்று கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவாள். ஆறு வயதுக்கு மேல் தான் நடக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் தான் காலில் ஆபரேஷன் செய்தோம். தற்போது ஓரளவு காலை ஊன்றி நடக்கிறாள். கை தான் இன்னும் சரியாகவில்லை. இவ்வாறு பானு கூறினார்.

சிறுமி பிரியங்கா கூறுகையில், ""எனக்கு டியூஷன் எடுக்க வரும் ராஜாத்தி, "மிஸ்' தான் காலண்டரை படிக்கும்படி கூறினார். அன்றிலிருந்து காலண்டரை பார்த்து படித்து பழகினேன். எந்த தேதி கேட்டாலும் சொல்வேன்,'' என்றார். மாற்றுத் திறனாளிகள் மிகவும் திறமை யானவர்கள் என்பதற்கு பிரியங்கா ஒரு நல்ல உதாரணம். மாற்றுத் திறனாளி குழந்தை களிடம் நாம் எதிர்பார்க்காத பல திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வெளிக்கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக