சனி, 24 செப்டம்பர், 2011

Save Heart! Save Life! : இதயத்தைக் காத்திடுவீர்! வாழ்நாளைப் பெருக்கிடுவீர்!

உலக இதய நாள் – செப்டம்பர் 29

பதிவு செய்த நாள் : 24/09/2011



மருத்துவர். வெ. சொக்கலிங்கம்,
MD,DM(Cardiology)FACC(USA)D.Sc
Mobile. 98410 91717
25,டெய்லர்சு சாலை,
சென்னை-600 010

இந்த வருட உலக இதய நாள் 29 செப்டம்பர் 2011 கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் “ஓர் உலகம், ஒரு வீடு, ஓர் இதயம்”.  இவ்வுலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்துகொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29 விழுக்காடு ஆகின்றது. அதிலும் 82விழுக்காடு வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும்தான் காணப்படுகிறது.
உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான்.
இந்த அணுகுமுறை இந்தியர்களுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில், நம்மிடம்தான் அமெரிக்க, ஐரோப்பியர்களைவிட 4 மடங்கும், சீனர்களைவிட 10 மடங்கும், சப்பானியர்களைவிட 20 மடங்கும் காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 30 மில்லியன் மக்கள் மாரடைப்பால் தாக்கப்பட்டு , அதில் மூன்றில் ஒரு பங்கு , ஓரிரு நிமிடங்களிலேயே இறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் செய்தி 25 முதல் 30 வயதுள்ள இளைஞர்களை இந்நோய் தாக்குவதுதான்.
உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.
“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான்.
எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் :


ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது.
உடல் எடை கூடுவது.
உடற் பயிற்சியைத் தவிர்ப்பது.
இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மதுஅருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது.
பதற்றம் , உடல் நடுக்கம் , அதிக வியர்வை.
இதயத் துடிப்பு அதிகரித்தல்.
இரத்த அழுத்தம் கூடுதல்.
கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது.
இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல்.
இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய விபரீதச் சுழற்சியிலிருந்து விடுபட ஒரே வழி – வாழ்க்கை முறையைச் சீராக்குவது மட்டும் தான்.
சிந்தனை, சொல், செயல் சீராக இயங்கும் பொழுது மூளையின் அலைகள் ஆல்பா நிலையில் செயல்பட்டு, என்டார்பின், செரடோனின், மெலடோனின் போன்ற நல்ல ஆர்மோன்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இரத்தத்தில் கலப்பதால் மேற்கூறிய விபரீதச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இதய மூளை இரத்தக்குழாய்களில் அடைப்பு வருவதைத் தடுப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஒரு வருடத்தில் கரைத்துப் பூரண குணமடைய ஏதுவாகிறது.

சீரான வாழ்க்கை முறை அமைய 10 கட்டளைகள்:
கட்டளைகள்: தவிர்க்க / கட்டுப்படுத்த
1. மன அழுத்தம்.
2. கொழுப்பு உணவு வகைகள்.
3. புகை பிடித்தல், மது அருந்துதல்.
4. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்தல்.
5. இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தல்.
கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள்:
6. எந்நிலையிலும் சீரான மனநிலை.
7. சீரான உடல் எடை.
8. யோகாசனமும் தியானமும்.
9. உணவில் அதிக அளவில் காய்கறி, பழங்களைச்                சேர்த்தல்
10. சீரான உடற்பயிற்சி.
இந்தப் பத்துக் கட்டளைகளினால் அடையும் பயன்கள்:
இரத்த அழுத்தம் 100mm Hg க்குக் குறைவாகும்.
இரத்தச் சர்க்கரையின் அளவு 100mgm க்குக் குறைவாகும்.
இரத்தக் கெட்ட கொலசுட்ரால் (LDL – C) 100 mgmக்குக் குறைவாகும்.
இடுப்புச் சுற்றளவு 100cmக்குக் குறைவாகும்.
இவை அனைத்தும் வாழ்க்கை எனும் இனிய பயணத்தை நூறு ஆண்டுகளை கடந்து செல்ல வழி செய்யும்.
சுருக்கமாக, ஒரு வருடத்திற்கு நூறு மணி நேரம் உடற்பயிற்சியிலும் நூறு மணி நேரம் தியானத்திலும் செலவிடுவதை இன்றியமையாததாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இதயம் காக்கமூன்று மந்திரங்கள்:
1.         சீரான எண்ணம்
2.         சீரான உணவு
3.         சீரான உடற்பயிற்சி
இதயத்தைக் காத்திடுவீர்! வாழ்நாளைப் பெருக்கிடுவீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக