புதன், 21 செப்டம்பர், 2011

ஏன் எதிர்க்க வேண்டும் மரணத் தண்டனையை?

ஏன் எதிர்க்க வேண்டும் மரண தண்டனையை?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 

செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி குறிக்கப்பட்டிருக்கிற மூன்று பேருக்கான மரண தண்டனை குறித்த விடயம் இது.
உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவரின் மரணதண்டனையை நிறைவேற்றுவது நாகரிக உலகத்தில் நமது நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும்.
தண்டனை என்பது சமூகத்தைப் பயமுறுத்துவதற்காகவோ அல்லது எதிர் காலச் சந்ததியினர் எப்படி வாழ வேண்டும் என்கிற படிப்பினைக்காக மட்டும் என்றால், நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம்.
தண்டனை பல படிநிலைகளைக் கொண்டது. ஒரு ரூபாய் திருடுனவனுக்கும், ஒரு கோடி திருடுனவனுக்கும் வித்தியாசம் இருக்கு – அடிப்படையில் திருட்டு என்பது ஒன்றுதான் என்றாலும். கொலை செய்தவனையும் கொலைக்கு உதவி செய்தவனையும், எதற்கு என்று தெரியாமலேயே உதவி செய்தவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா. பல இஸ்லாமிய நண்பர்கள் இப்படித் தான் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் – சில உதவிகள் வேண்டும் என்று செய்யப் போய் / எதுக்குன்னு தெரியாம செய்யப் போய் கடைசியில மிகப் பெரியத் திட்டம் தீட்டி செயல் பட்டதா ...
கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு அதிக பட்ச தண்டனை மரணம் என்றால் – திரு. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து போய் விட்டார்கள். இறந்தவர்களைத் தூக்கில் இட முடியாது என்பதற்காக மற்றவர்களைத் தூக்கில் இடுவது – ஒரு கோடிக்கும் தூக்கு ஒரு ரூபாய்க்கும் தூக்கு என்கிற விதத்தில் வந்து விட்டால் நமக்கு நீதிமன்றங்களே தேவையில்லையே – வெறும் காவல் துறை மட்டும் போதும். இந்தத் தவற்றுக்கு இந்தத் தண்டனை என்கிற அளவில் சட்டம் இருந்தால் மட்டும் போதுமே. எதற்கு நீதிமன்றங்கள், எதற்கு ஒரே மாதிரி வழக்குகளுக்கு வேறு வேறு மாதிரியான தண்டனை? வெறும் காவல் துறை மட்டும் தண்டனையை நிறைவேற்றலாமே.
சரி - தண்டனையில் வித்தியாசம் இருக்கிறது என்றால் – இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கிப்பட்டிருக்கிற மூவருக்கும், கொலையில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் தண்டனையில் வித்தியாசம் வேண்டாமா? பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஒருவனுக்கும் மரண தண்டனை – ஒருவரைக் கொன்றதற்காக பலருக்கு மரண தண்டனை என்பது சரியா?
அல்லது இந்த வழக்கு என்பது தடாச் சட்டத்தில் வராது என்கிற போது [இதைத்தான் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் எல்லாத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்], எப்படி அதில் பெற்ற வாக்குமூலம் மட்டும் செல்லுபடியாகும்? – எப்படி அந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தைக் கொண்ட தீர்ப்பு செல்லுபடியாகும்?
அல்லது அப்படியே அவர்கள் குற்றவாளிகள் என்றாலும் – ஏற்கனவே ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சிறைச்சாலைக்குள் முடங்கிக் கிடந்த ஒருவருக்கு இப்போது மரணம் என்கிற தண்டனை வேறு தேவையா?
நண்பர்களே – உணர்ச்சிப் பிழம்புகள் கொதிக்க இதற்குப் பின் உள்ள அநியாயங்கள் குறித்தெல்லாம் யோசித்து இந்த மரண தண்டனையை எதிர்க்க வேண்டியதில்லை. மனித நேயம் உள்ள யாரும் எதிர்க்கலாம். இருபது ஆண்டுகள் சிறைக்குள் ஏற்கனவே ஆயுள தண்டனை முடிந்து இரண்டாவது ஆயுள் தண்டனையில் பாதியை முடித்தவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை தானே என்கிற பார்வையில் யோசித்தால் போதும். மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்.
குறிப்பு
மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான் என்பதற்கான மிகப் பெரிய அடையாளம் போர், மனித இழப்பு, வன்முறை இவைகளெல்லாம் வெறுக்கத்தக்கவை என்ற நிலையை அடைந்ததுதான். அந்த நிலையை மானிட சமூகம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் அடைந்தது – அதற்குப் பிறகுதான் மனித உரிமையும், மனிதன் ஒருபோதும் ஒரு பொருளாக நடத்தப்படக்கூடாது என்பது மட்டுமல்ல, மனிதன் ஒவ்வொருவனும் மதிப்பு மிக்கவன் என்கிற சித்தாந்தம் வெகுவாக ஊன்ற ஆரம்பித்தது.
பல போர்களுக்குப் பிறகு – உயிரிழப்பிற்குப் பிறகு ஞானோதயம் வந்து – எல்லாரையும் மதிக்க உறுதியோடு இருக்கிறார்கள். இது நடைமுறையில் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும், எந்த அளவுக்கு அரசியல் ஆதாயத்தோடு மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன, மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கப்படுகின்றன என்பதும் விவாதத்துக்குள்ளாக்கப் படவேண்டியதுதான் – ஆனாலும் அதையும் தாண்டி இன்றைக்கு பல நாடுகள் சாதித்திருக்கிற மனித உரிமை பற்றிய கருதுகோள்களும் மனித மாண்பு மதிக்கப்பட மேற்கொண்டிருக்கிற முயற்சிகளையும் பார்க்கிறபோது அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் மரண தண்டனை ஒழிப்பு என்பது.
நாம் நாகரீகவாதிகளா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக