ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இனிமம் (சாக்லேட்) சாப்பிட்டால் தசைகள் வலுப்பெறும்: ஆய்வில் தகவல்

சாக்லேட் சாப்பிட்டால் தசைகள் வலுப்பெறும்: ஆய்வில் தகவல்

First Published : 16 Sep 2011 12:54:47 AM IST


லண்டன், செப்.15: சாக்லேட் சாப்பிட்டால் உடல் தசைகள் வலுப்பெறும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் உடலுக்கு சக்தியளிக்கும் மைட்டோகாண்ட்ரியா (உடல் செல்லின் சக்தி உலைகள் என்று மைட்டோகாண்ட்ரியாவைக் குறிப்பிடுவர்) பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது சாக்லேட்டில் காணப்பட்ட எபிகேட்டசின் என்ற தாவரச் சேர்மம், மைட்டோகாண்ட்ரியாவின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ததைக் கண்டறிந்தனர். சாக்லேட்டில் உள்ள எபிகேட்டசினும் மைட்டோகாண்ட்ரியாவை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் மோ மலேக் தெரிவித்தார். குறிப்பாக இதயத் தசைகளிலும், எலும்புத் தசைகளிலும் கூடுதல் சக்தி கிடைப்பதாக அவர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்த கோகோவிலுள்ள எபிகேட்டசினை, பரிசோதனைக்கூடத்திலுள்ள சுண்டெலிகளுக்கு 15 நாள்கள் தொடர்ச்சியாகக் கொடுத்து பரிசோதனை மேற்கொண்டனர். எலிகளுக்கு நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. எபிகேட்டசின் சாப்பிட்ட எலிகள் சுறுசுறுப்பாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.இதன்மூலம் வயதாவதால் தசைகளில் ஏற்படும் சோர்வும் தளர்ச்சியும் எபிகேட்டசினால் நீக்கப்படுவது உறுதியாவதாக மலேக் தெரிவித்தார். மேலும் தசைகள் நீடித்துழைக்கும் ஆற்றலைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பலன்கள் மனிதர்களிடத்தும் உருவாகும் என்பது மகிழ்ச்சிகரமான உண்மையென்றாலும், அதை உறுதிப்படுத்த மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மலேக் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக