First Published : 18 Sep 2011 12:00:00 AM IST
ஆக்ரா என்றால் தாஜ்மஹாலும், தாஜ்ஹால் என்றால் காதலும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பேரழகுப் பெட்டகமாகத் திகழ்ந்த தனது மனைவி மும்தாஜுக்காக மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்வதில் வியப்பேதுமில்லை. பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனான ஷாஜகான் கட்டடங்களை அழகாக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். எனவேதான் தாஜ்மஹால் இன்றும் சரித்திரக் கதாநாயகனாகத் திகழ்கிறது. இந்நிலையில் உயரத்திலும், அகலத்திலும், அழகிலும் தாஜ்மஹாலைப் போலவே ராமநாதபுரத்தில் இன்னொரு தாஜ்மஹால் செட்டிங்ûஸ உருவாகியுள்ளது. ஆக்ரா தாஜ்மஹாலைக் காணமுடியாதவர்கள் இந்த ராமநாதபுர தாஜ்மஹால் செட்டைக் கண்டு ஆனந்தம் அடைகின்றனர். கண்களைக் கவரும் வண்ண விளக்குகளும், செயற்கை நீருற்றுகளும் காண்போரின் இதயத்தை வருடுகின்றன. குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வருகை தந்து இந்த தாஜ்மஹால் செட்டைக் கண்டுகளித்துப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். நெல்லை சரவணா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், ராமநாதபுரம் அபிராமி சில்க்ஸ் நிறுவனமும் இணைந்து தாஜ்மஹால் போன்ற அரங்கத்துடன் தொடங்கியுள்ள பொருட்காட்சிதான் மக்களை இப்படிக் குதூகலிக்க வைத்துள்ளது. இந்த தாஜ்மஹால் அரங்கு குறித்து பொருட்காட்சி அமைப்பாளர் டி. சமுத்திரத்திடம் பேசினோம்: ""வணிக நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஆக்ராவுக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த தாஜ்மஹாலைப் பார்த்து சந்தோஷம் அடைகின்றனர். சிறந்த பொழுது போக்குத் தலமாகத் திகழ்கிறது இந்த தாஜ்மஹால். சுமார் பத்தாயிரம் சவுக்குக்கம்புகள், இரும்பு பைப்புகள், பைபர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள், பிளைவுட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொடர்ந்து இரு மாதங்களாகப் பணியாற்றி இந்த தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளனர். உட்புறம் 48க்கு 48, வெளிப்புறம் 80க்கு 80 என்ற சதுர அடியில் வடிவமைத்துள்ளோம். பொருட்காட்சித் திடலின் உருவாக்கத்தில் மொத்தம் 150 பேர் பணியாற்றியுள்ளனர். இதேபோன்ற பொருட்காட்சியை நடத்திட சுமார் இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படும். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி, சென்னையில் இதே போன்று செய்திருக்கிறோம். திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் பொருட்காட்சியாக மட்டும் நடத்தினோம். மாவட்ட அளவில் முதன் முறையாக ராமநாதபுரத்தில்தான் தாஜ்மஹாலை உருவாக்கியிருக்கிறோம். டைட்டானிக் கப்பல், நாடாளுமன்றக் கட்டடம், செங்கோட்டை, மைசூர் அரண்மனை, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை போன்றவற்றைப் போலவும் செட் அமைக்க விரும்புகிறோம்'' என்றார். அடுத்து நம்மிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. மணிகண்டன்: ""இந்தப் பொருட்காட்சித் திடலில் மொத்தம் 226 ஃபோக்கஸ் லைட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை தாஜ்மஹாலின் முன்புறமும், பின்புறமும் வைத்துள்ளோம். ஐந்து வகையான ராட்சத ஜெனரேட்டர்கள் மூலமாக மின் தேவையைச் சமாளிக்கிறோம். தினசரி இரவு 6 மணி முதல் 10 மணி வரை செலவாகும் மின்சாரத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டீசல் செலவாகிறது. எந்த ஊராக இருந்தாலும் எந்தக் கட்டட அமைப்பிலும் செட் அமைக்கத் தயாராக இருக்கிறோம். அரிமா, ரோட்டரி போன்ற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து பொருட்காட்சிகளை "ஷேர்' அடிப்படையில் நடத்த விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றார். சி.வ.சு. ஜெகஜோதி படங்கள் : எல். ஆனந்தராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக