வெள்ளி, 8 ஏப்ரல், 2011

D.M.K. will fight ever for Ilangai thamizhs!! - imagination of kalaignar: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்றைக்கும் போராடும்:கருணாநிதி

தமிழ் ஈழ வீரத்தாய் மருத்துவம் நாடி வந்தபொழுது விரட்டியதும் இலங்கைத்தமிழர்களுக்கான போராட்டம்தானா? அவரது திருச்சாம்பல் கரைக்கும் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதும் அதற்குத்தானா?  ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் அமைப்புகளை ஒடுக்குவதும் தொடர்பான பேச்சுரிமையைப் பறிப்பதும் தளையிடுவதும் அதற்குத்தானா? தமிழ்ஞாலத் தேசியத்தலைவரின்  பெற்றோர் மறைவுகளின் பொழுது இரங்கல் தெரிவிக்காததும் அதற்குத்தானா?பொய்யான தகவல்களைக்கூறி உள்ளத்தைப் புண்படுத்துவதை விட அவற்றை நினைவுபடுத்தாமல் தமிழ்நாட்டைப்பற்றி மட்டும் பேசினால் போதாதா? கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால்  இனப்படுகொலை நடக்க விட்டிருப்பாரா? மலர்ந்த  ஈழம் மடிவதைப் பொறுத்திருப்பாரா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்றைக்கும் போராடும்:கருணாநிதி





சென்னை, ஏப்.7: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க.வினர் என்றைக்கும் போராடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  தென்சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:  "அடுத்த ஆட்சி எந்த ஆட்சி? வேற ஆட்சி வரப்போகிறதா அல்லது தி.மு.க. ஆட்சியே தொடரப்போகிறதா என்ற கேள்விக்கு விடைகாண நீங்கள் எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள்.  இந்த எழுச்சியை நான் நேற்று (புதன்கிழமை) மதுரையில் கூட பார்க்கவில்லை. மதுரையில் உள்ள கூட்டத்தை வெல்லக்கூடிய அளவுக்கு நீங்கள் குழுமியுள்ள காட்சியைப் பார்க்கும்போது நான் மனதாரச் சொல்லிக்கொள்கிறேன், வெற்றி நிச்சயம்.  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தீவுத்திடலில் வந்து உரையாற்றினார். தொகுதி நிலவரங்கள், தேர்தல் நிலவரங்கள், யார், யாரை நிறுத்தியிருக்கிறோம் என்ற விவரங்கள் இவைகளையெல்லாம் பற்றிப் பேசவில்லை. தமிழர்களின் நலனுக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிய தேவைகளையெல்லாம் எடுத்துரைத்தேன்.  இலங்கையில் வாழும் தமிழர்களைப் பராமரிப்பதில் இன்னமும் காலதாமதம் ஆகிறது. இலங்கை அரசு அவர்களின் தேவையை முழுமையாக இன்னமும் நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களர்களும், தமிழர்களும் சமமாக வாழ்வதற்கு சட்ட திருத்தத்தைக் கொண்டுவருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச சொல்லியிருந்தார். அந்தத் திருத்தத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினேன்.  இலங்கைப் பிரச்னையைப் பற்றி நான் இப்போதுதான் கவலைப்படுவதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுகிறவர்கள் யார், ஒதுங்கியிருந்தவர்கள் யார், அவர்கள் கொல்லப்பட்டபோது சரி, சரி என்று சொன்னவர்கள் யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்கள் அங்கே வாழவைக்கப்பட வேண்டும். அவர்களின் ஊர்களில் இருந்து விரட்டப்படும் தமிழர், அங்கு நடைபெறும் போரால் விரட்டப்படும் தமிழர் அந்த ஊருக்கு வர வேண்டும். அதற்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினோம்.  பேரவையில் தீர்மானம்: தமிழகப் பேரவையில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் என்ன? இலங்கையில் இருந்த பிரபாகரனை கைதுசெய்து, இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை; நடுநிலை வகித்தோம்.  இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் கண்ணீர்விட்டு கவிதைகள் எழுதினேன். போர் என்றால் ஜனங்கள் செத்துமடிவது சகஜம் என்றார் ஜெயலலிதா.  இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே பேசிய, பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு இப்போது அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார். விடுதலைப் புலிகளைப் பொருத்தவரை ஜெகன், குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் என்னைச் சந்தித்து அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.  ஏக்கம் உள்ளது: சகோதர யுத்தத்தால் ஒரு லட்சியப் போராட்டம், பெரும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உள்ளது.  அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பிரதமரைக் காணும்போதெல்லாம், சோனியா வரும்போதெல்லாம் அவர்களிடம் நான் பகிரங்கமாகவும், தனியாகவும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எடுத்துச் சொல்வேன்.  அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் என்று கருதாமல், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று இன்றைக்கும் கோரிக்கை வைக்கிறேன்.  தி.மு.க. தலைவர் என்ற முறையில் நான் இந்தப் போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதைய அதிமுக ஆட்சி விளைவித்தது என்பதையும் தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையான தமிழன் - தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் - கருணாநிதி, அழிந்தாலும் அதைவைத்து அரசியல் லாபம் சம்பாதிக்கலாம் என்று எண்ணியவர்கள் சிலர் இன்று எழுதுகிறார்கள்.  அந்தத் தமிழனுக்கும், இந்தத் தமிழனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, தி.மு.க.வில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துப்பேசக்கூடியவர்கள்; போராடுவார்கள் என்பதை உணர்ந்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  

1 கருத்து:

  1. தினமணியில் இதுவரை கருத்தை வெளியிட வில்லை. வாழ்க தினமணியின் நடுவுநிலைமை!

    பதிலளிநீக்கு