தமிழ் நாட்டு மேடையில் தமிழில் கூட எழுதி வைக்க விருப்பமில்லாத இவர்கள் ஆடசிக்குவந்தால் தமிழுக்குக் கேடு. தமிழினக் கொலையாளி, தமிழ்மொழிப் பகையாளி காங்.கட்சியை அரசியலில் இருந்தே துரத்துவோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார் ராகுல்காந்தி.
ஈரோடு, ஏப்ரல் 6: தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் அங்கம் வகிக்க இருக்கும் அரசு ஏழை மக்களின் அரசாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தெரிவித்தார். ஈரோட்டில் ஐனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்தான் இந்தியாவின் வலிமை. மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசு இந்த மக்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் மத்திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. 100 நாள் வேலைத் திட்டம் மூலமாக ஏழை மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி அளித்துள்ளது. தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ஈரோட்டில் ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் வகையில், அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் 16 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இதனால்தான் இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்க இருக்கும் அரசு, ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இளைஞர்களுக்காக உழைக்கும் அரசாக இருக்கும். தமிழக மக்கள் இந்தக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் ராகுல். காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்கும் அரசு என்று கூறியதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை ராகுல்காந்தி கோடிட்டுக் காட்டியுள்ளார் என்றனர் காங்கிரஸ் கட்சியினர். ராகுல்காந்தி பேச்சை, முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தமிழில் மொழிபெயர்த்தார். திமுக வேட்பாளர்கள் எஸ்.முத்துசாமி, ராஜா, காங்கிரஸ் வேட்பாளர்கள் யுவராஜா, விடியல்சேகர், ஆர்.எம்.பழனிச்சாமி, கொமுக வேட்பாளர்கள் எஸ்.சிவராஜ், கேகேசி.பாலு, பாமக வேட்பாளர் எஸ்.மகேந்திரன் ஆகியோரை வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி அறிமுகப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக