புதன், 6 ஏப்ரல், 2011

Dinamani editoriyal about qualifying test for doctors: தலையங்கம்: படித்தால் மட்டுமே போதுமா?

நல்ல கருத்துகள்! பாராட்டுகள்!ஆனால், அனைத்து இந்தியத் தகுதித் தேர்வு என்பது மொழித் திணிப்பிற்காகவும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராவும் அமையக் கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தலையங்கம்: படித்தால் மட்டுமே போதுமா?


இளநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெற தனியாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே, சட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்வதற்குத் தகுதி பெற, அகில இந்திய அளவிலான பார் கவுன்சில் தேர்வை எழுத வேண்டும் என்று சென்ற ஆண்டு அறிவித்தது. அதே வழித்தடத்தில் இந்திய மருத்துவக் கழகமும் அறிவித்துள்ளது.சட்டப் படிப்பைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வு சென்னையில் நடைபெறவில்லை. சட்டக் கல்வியை முடித்த மாணவர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தியதால் இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, மருத்துவக் குழுமமும் இதேபோன்று தகுதித் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவிப்பு வந்த நிலையிலேயே சில மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இன்னும் நிறைய எதிர்ப்புகள் வரக்கூடும்.இந்த நடைமுறையை எதிர்ப்பவர்கள் எழுப்பும் ஒரே கேள்வி, "சுமார் 5 ஆண்டுகளாகப் படித்து, தேர்வு எழுதி, தேர்ச்சியுற்று பட்டம் வாங்கிய பிறகு இன்னொரு தகுதித் தேர்வு என்பது, ஐந்து ஆண்டுகள் படித்த படிப்பையே கேலி செய்வதுபோல இருக்கிறது. மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றால், அந்த மாணவர் இதுவரை படித்த படிப்புக்கு என்ன அர்த்தம்?' இது நியாயமான கேள்விதான்.இவ்வளவு எளிமையான, நியாயமான கேள்வியை அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவக் குழுமம் அறிந்திருக்காதா? அல்லது அரசுக்கு இதுபற்றிய அக்கறையே கிடையாதா என்று கேட்டால், அவர்களும் சில காரணங்களைச் சொல்கிறார்கள்.இந்தியா முழுவதிலும் தனியாரால் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்கள், எந்த முறையில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் வெறும் காகிதத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே தவிர, இவற்றின் தரம் குறித்து பல கருத்து மாறுபாடுகள் உள்ளன.மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி இவற்றில் படிப்பை முடித்து வெளிவரும் எல்லா மாணவர்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. ஆகவே, ஓர் அளவுகோல் அவசியமாகிறது. அதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்துவதும் அவசியமாகிறது.ஒரு மருத்துவருக்கான தொழில் உரிமம் என்று மட்டுமே இதை அணுக முடியாது; கூடாது. இது அப்பாவி நோயாளிகளின் உயிருடன் தொடர்புடையது என்பதால் மருத்துவர்களின் தரம் மிகவும் இன்றியமையாதது.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், மருத்துவத் தொழில் உரிமம்பெற வேண்டுமென்றால் அதற்கான தனித்தேர்வு எழுத வேண்டும். இந்தியாவிலிருந்து ரஷியா போன்ற வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இங்கே தொழில்புரிய வரும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் அவர்களுக்கான சிறப்புத் தேர்வு எழுதியாக வேண்டும். அவர்களும் சுமார் 7 ஆண்டு படித்துவிட்டுத்தானே வருகின்றனர். அவர்களை அப்படியே ஏன் மருத்துவராகத் தொழில்புரிய அனுமதிப்பதில்லை! ரஷியாவில் மருத்துவப்படிப்பு உலகத்தரத்தில் இல்லை என்பதால்தானே!இந்திய மருத்துவக் குழுமத்தின் இந்த வாதம், எதிர்ப்பாளர்களின் வாதத்தைவிட ஆழமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய சூழ்நிலையில், மருத்துவக் கல்வி என்பது அதிக பணம் கொழிக்கும் தொழில் என்பதாகத்தான் இருக்கிறது. வசதி படைத்தவர்களும், ஏற்கெனவே மருத்துவர்களாக இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்கி தங்கள் கார்ப்பரேட் மருத்துவமனையை நிர்வகிக்கச் செய்வதில் ஆர்வம் காட்டுவது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது.இவர்கள் எத்தனை லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தாகிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே ஆர்வத்துடன் படிக்கின்றார்களா? அல்லது தேர்வுகளில் வெற்றி பெறும் உத்திகள் மட்டுமே அறிந்திருக்கிறார்களா என்பது அந்தந்தக் கல்லூரிகளின் தரத்தைப் பொறுத்தது. இந்நிலையில் அவர்கள் படிப்பை முடித்தவுடன் மருத்துவர்கள் என்ற அங்கீகாரத்துடன் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்குவது அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக அல்லவா முடியும்? அவர் உண்மையாகவே மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாரா, நோயாளியுடன் அவரது அணுகுமுறை எவ்வாறு உள்ளது என்பதைச் சிறு தேர்வு மூலம் சோதித்து அவருக்கு உரிமம் வழங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?படிப்பும், பட்டமும் மட்டுமே ஒருவர் ஒரு தொழிலில் முழுமையான திறமையுடையவருக்கான தகுதியாக இருக்க முடியாது. படித்துப் பட்டம் பெறும் எல்லா மருத்துவர்களுமே நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றவர்களா, என்ன? நமது புராதன இந்திய மருத்துவ முறையில் பல ஆண்டுகள் தேர்ந்த வைத்தியரிடம் உதவியாளராக இருந்தவர் மட்டுமே தனியாக வைத்தியம் செய்யும் தகுதியைப் பெறுவதாக இருந்தது. இப்போது ஏட்டுப் படிப்புப் படித்தாலே போதும் என்கிற நிலையில், மருத்துவம் படித்தவர்கள், குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது மருத்துவப் பயிற்சிபெற்ற பிறகு, அவர்கள் தரம் தேர்வு மூலம் பரிசோதிக்கப்பட்டு உரிமம் வழங்குவதுதான் முறையாக இருக்க முடியும்.மருத்துவர்கள் இவ்வாறு தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், குறைந்தது கட்டாயமாக இரண்டாண்டுகளாவது கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினால் மட்டுமே மருத்துவர்களாக அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்கள் உயர்படிப்புக்கும் தகுதி பெற்றவர்களாக முடியும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அரசியல் பின்புலமுடையவர்களால் புற்றீசல்போல தொடங்கப்பட்டு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து, நன்கொடை கொடுத்து மருத்துவர்களாகிவிட முடியும் என்கிற நிலைமையால் ஏற்படும் விபரீதங்களால் பாதிக்கப்படப்போவது அப்பாவி நோயாளிகள். அவர்களைப் பாதுகாப்பதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக