வியாழன், 24 பிப்ரவரி, 2011

scape goats in election festival , dinamani article: தேர்தல் திருவிழாவின் பலியாடுகள்!


நாட்டு நலம் விருமபிகள் அனைவரின் கருத்தையும் எதிரொலிக்கும் 
நல்ல கட்டுரை.
பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
<தமிழே விழி! தமிழா விழி!>


தேர்தல் திருவிழாவின் பலியாடுகள்!


மாசி மாதம் பெரும்பாலான தென்மாவட்டக் கிராமங்களில் மாசிக்களரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுகின்றன.களரித் திருவிழா நெருங்க... நெருங்க ஆடுகளுக்கு மரியாதை கூடுகிறது. பின்னர் உற்றார் உறவினர் கூடவர கோயிலுக்கு மேள தாள மரியாதையுடன் ஆட்டை அழைத்துச் செல்கின்றனர்.கோயிலின் முன் ஆட்டை நிறுத்தி திடீரென தண்ணீர் ஊற்றுகின்றனர். அப்போது, எதற்காக நம்மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள்? எனத் தெரியாமலே ஏதோ ஓர் உணர்வில் ஆடு தலையை அசைக்கும். ஆடு சந்தோஷமாகச் சம்மதம் சொல்லிவிட்டது. வெட்டுங்கள்..! எனக் கூடியிருப்போர் சத்தமிட... பெண்களின் குலவைச் சத்தம் கேட்கும். இப்படிப்பட்ட வேளையில்தான் அந்த ஆட்டின் கழுத்தை, அரிவாள் பதம்பார்க்கும்.தன்னைப் பலியாக்கவே தனக்கு நல்ல உணவும், மரியாதையும் அளித்துள்ளனர் என்பதை அறிந்து, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அந்த வாயில்லா ஜீவனால் முடியாது.ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் இப்போது தங்களது சுயநலத்தால் தமக்குத்தாமே தீமையைத் தேடிக்கொள்ளும் அவலநிலை உலகளவில் பெருகி வருவதைக் காணமுடிகிறது.மக்களின் அடிப்படைத் தேவையை அறிந்து, ஆள்வோர் அவர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தாமல் சுயநலமிக்கவர்களாக இருந்ததாலேயே எகிப்து, ஏமனில் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டது.நமது மண்ணில் அண்மைக்காலமாக நடப்பது என்ன? ஊழலில் திளைக்கும் அரசுகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தைப் புறக்கணித்துத் தொழிலதிபர்களை அரவணைக்கும் போக்கு, இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிவரும் அப்பாவி மீனவர்கள். இதுபோதாதென மின்தடை. அதனால் பாதிக்கப்படும் சிறு, குறுந்தொழில்கள், இதனால் வேலை இழந்த ஏழைத் தொழிலாளர்கள். பசி, பிணி, பகைவர் அச்சம் இல்லாத தேசமே உண்மையான தேசம் என்கிறார் வள்ளுவர். ஆனால், நமது அரசியல் தலைவர்கள் இந்த மூன்றையும் நிரந்தரமாகப் போக்குவதற்கான திட்டங்களைத் தீட்டுவதில்லை.இந்த மூன்றையும் முன்வைத்து தங்களது தனிப்பட்ட பெயரைப் பிரபலப்படுத்த மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது துரதிருஷ்டமாகும்.பணம் இருப்பவருக்கே தரமான கல்வி! பணம் இருந்தாலே உயிர் பிழைக்க வைக்கும் சிகிச்சை என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறதே! இதற்கு யார் காரணம்?அரிவாள் இன்றி கதிர் அறுக்கப் போகும் விவசாயிபோலத் தான் அரசு மருத்துவர்களின் செயல்பாடு உள்ளது. மருத்துவச் சாதனங்கள் இல்லாத அரசு மருத்துவமனைகள். கிராமப்புறச் சுகாதார மையங்களில் மருத்துவர் இன்றி சிகிச்சைபெற முடியாமல் அவதிப்படும் ஏழை மக்கள்.எக்ஸ்ரே, ஸ்கேன், மருத்துவப் பரிசோதனைகள் அனைத்துக்கும் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளிடம் கட்டணம் வசூல். விபத்தில் தலையில் அடிபட்டவர் குறைந்தது ரூ. 500 இல்லாமல் அரசு மருத்துவமனைக்குப் போனால் அவர் ஆயுள் முடிந்துபோகும் என்பதுதான் இப்போதைய நிலை.ஒரு குடும்பத் தலைவர், தனது மகனின் மருத்துவச் செலவுக்கு அடுத்த வீட்டுக்காரரிடம் பணத்தைக் கொடுத்தா செலவிடச் சொல்வார்? அதுவும் கமிஷனை எடுத்துக்கொள் என்று கூறுவாரா? அப்படிக் கூறினால் அவர் நல்ல தந்தையா?ஆனால், சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அறுவைச் சிகிச்சைக்கு தனியார் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகத்தானே நிதி வழங்குகிறது. அரசு மருத்துவமனைக்குத் தேவையான அத்தியாவசிய சாதனங்களை வாங்க நிதி ஒதுக்கப்படுவதில்லையே...! ஏன் இந்த முரண்பாடு..? அனைத்து நகர்களிலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலும் தினமும் ஆயிரக்கணக்கான குடிநீர் பாட்டில்கள் தனியார் மூலம் விற்கப்படுகின்றன. அப்படி எனில், அந்தந்த மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தில் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க முடியவில்லை என்றுதானே பொருள்.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எந்தச் சாலையாவது மேடு, பள்ளம் இல்லாமல் இருக்கிறதா?தேர்தல் கால அவசரத்தில் வேகவேகமாகப் போடப்படும் சாலைகள், அடுத்த ஆறு மாதத்தில் என்னவாகும் என்பது அந்த ஒப்பந்தக்காரர்களுக்கே தெரியும்.குடிநீர், மருத்துவம், கழிப்பிடம், சாலை வசதி என மக்களின் எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி அடையாத நிலையில்தான், இலவசங்கள் இல்லம் தேடிவரும் என்கிறார்கள். அதேபோல, வாக்களிக்கும் சாமானியரைச் சமாதானம் செய்யவே இலவசத் திட்டங்களும், தேர்தல்நேர வாக்குறுதிகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றால் நமது பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாது.ஆங்கிலேயர் அளித்த பதவி, பணம் உள்ளிட்டவற்றுக்கு மயங்கி நமது முன்னோர் அவர்களை எதிர்த்துப் போராடாமல், நாட்டின் நலனை முன்னிறுத்திச் சிந்திக்காமல் போயிருந்தால் நாம் இப்போதைய சுதந்திரக் காற்றைச் சுவாசித்திருக்க முடியுமா?முன்னோர்கள் நமக்கு அளித்த சுதந்திர உரிமையை, நமது பிற்காலச் சந்ததிகளும் சுவாசிக்க வேண்டாமா?ஆக, வருமுன் காப்போம் என்பதை உண்மையாக்க வேண்டும். அதற்கு நாம் நமது உரிமைகளை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் காலகட்டம் ஏற்பட்டிருப்பதை உணரவேண்டிய தருணமிதுதான்.திருவிழாக்காலப் பலி ஆடுகளைப்போல ஏமாறாமல், எதிர்காலத்தை நினைத்து நமது உரிமையை நிலைநாட்டுவது அவசியம். அப்படி நிலைநாட்ட வேண்டும் எனில் இலவசம் எதற்கும் மனதை அலைபாயவிடாமல், நாட்டு நலனை மட்டுமே முன்னிறுத்தி நமது வாக்கு உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக