செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

dinamani editorial about tamil fishermen: தலையங்கம்: என்று தணியும் இந்த சோகம்?


எல்லாமே சரியாகத்தான் உள்ளன.  <இனி அவர்கள் சுட மாட்டார்கள் என்பது உறுதி.>என்னுமிடத்தில் தமிழகத் தேர்தல் முடியும் வரை என்று சேர்த்திருந்தால் மிகவும் சரியாக  இருந்திருக்கும். தமிழக மீனவர்களைக் கொன்றது யார் எனத் தெரியவில்லை என்ற நடித்த சிங்கள நாடகத்தின் ஒரு பகுதியாக இலங்கைத்தமிழ் மீனவர்கள் மீது பழி போடும் நாடகக் காட்சி அரங்கேறுகிறது. நாடகத்தால் சிங்களத்திற்கும் இந்தியத்திற்கும் பொழுது போகும். இனியும் மீனவர்களின் உயிர்களும் போகும்! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தலையங்கம்: என்று தணியும் இந்த சோகம்?


இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 136 பேரும் தமிழ்நாடு வந்து சேர்ந்துவிட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளும் கரை திரும்பின. ஆனால், இன்னும் கடலிலேயே திக்குத் தெரியாமல் மிதக்கிறது பிரச்னை!  இம்முறை நடைபெற்ற சம்பவங்களில் இரண்டு புதிய போக்குகளை நாம் கவனித்தாக வேண்டியுள்ளது. முதலாவதாக, இலங்கைக் கடற்படை நம்மவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்த கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைவர், "இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அவர்களைக் கைது செய்தது வரவேற்கத்தக்கது. இதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இரண்டாவதாக, கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை நடைபெற்ற கைது நடவடிக்கைகளில், தமிழக மீனவர்களே ஒப்புக்கொள்வதைப்போல, இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டுபோய் இலங்கை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இலங்கை ராணுவம் நேரடியாக இந்தப் பிரச்னையில் தலையிடாது என்பதையும், தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்களைக் கொண்டே மடக்கிக் கொண்டுவரும் புதிய போக்கினை இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது என்பதும் வெளிப்படை. இவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களா அல்லது அந்தப் போர்வையில் மறைந்துவரும் ராணுவத்தினரா என்கிற சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும்கூட, இனி அவர்கள் சுட மாட்டார்கள் என்பது உறுதி.  உலக அளவில் நன்மதிப்பைப் பெறுவதற்காக இத்தகைய மென்மையான நடவடிக்கையை இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொள்ளக்கூடும். இந்த மென்மையான நடவடிக்கைகள் தமிழக அரசியல் ஆவேசங்களை மழுங்கடித்துவிடும்போது, கைது செய்யப்படும் மீனவர்கள் உடனே விடுவிக்கப்படும் கட்டாயங்களும் மெல்ல மறைந்துபோகும். மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல்கூட, அவர்கள் ஊர் திரும்பும்வரை, காணாமல்போனதாகவே கருத வேண்டிய சூழல்களும்கூட உருவாகலாம்.  இது மிகமிக மோசமான நிலைமை. இலங்கை ராணுவத்தால் வெளிப்படையாகச் சுடப்பட்டு இறக்கும்போது, குடும்பத்துக்கு இழப்பீட்டுப் பணம் கிடைக்கும், அரசு வேலை கிடைக்கும். காணாமல் போனால் எதுவுமே கிடைக்காது.  தங்களை வலுக்கட்டாயமாக எஜமானர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சொன்னதாகவும் அதனால்தான் தாங்கள் எல்லை கடந்து சென்றதாகவும் கரைதிரும்பிய மீனவர்கள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில், நாகை அக்கரைப்பேட்டையில் நடந்த மீனவ கிராமத்தார் பஞ்சாயத்தில் ஒரு தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை வாழ் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு நாகை தாலுகா மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளக்கூடாது. மீறினால், இலங்கைக் கடற்பரப்பில் பிடித்த மீன்களின் மொத்த விற்பனைத் தொகையை மீனவப் பஞ்சாயத்தில் அபராதமாகச் செலுத்த வேண்டும். அந்தப் படகு ஒரு மாத காலம் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதுதான் அது.  இது முழுக்க முழுக்க மீன்படகு உரிமையாளர்கள் தொடர்பான தீர்மானங்கள் என்பதும், இப்படியொரு கிராமப் பஞ்சாயத்து நடைமுறையில் இருக்கிறது என்றால், இவர்கள் ஏன் இதுவரை இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி செய்ய முன்வரவில்லை என்பதும், இப்படியாக அவர்களாகவே தீர்மானித்துக்கொள்ளவும் அபராதம் போட்டுக்கொள்ளவும் முடியும் என்றால், தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. வெறுமனே ரூ. 5 லட்சத்தை அமைச்சர்கள் மூலமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுவது மட்டும்தான் தமிழக அரசின் பணியாக இருக்க முடியுமா?  இப்படியொரு மீனவ கிராமப் பஞ்சாயத்துத் தீர்ப்புகள் குறித்து அரசுக்குத் தெரியுமா, தெரியாதா? கட்டுப்பாடும் அபராதமும் தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையா அல்லது பஞ்சாயத்தின் அல்லது சங்கத்தின் வேலையா? திருப்பிக் கொடுக்கப்பட்ட படகுகள் அனைத்திலும் கண்ணாடிக் கதவுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படகு உரிமையாளர்கள் கூக்குரல் எழுப்பவில்லை. ஆழிப்பேரலைத் துயரத்தின்போது தெரியவந்த கசப்பான உண்மை, மிகச் சில மீன்பிடி படகுகள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டவை என்பதாகும். இந்தப் படகுகளிலும் பெரும்பாலானவை காப்பீடு செய்யப்பட்டிருக்காது. ஆனால், இதுகுறித்து அவர்கள் எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை என்றால், மீன்பிடி படகு உரிமையாளர்களால்தான் அப்பாவி மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குச் சென்று உயிரிழந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்தப் படகு உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஏன் இதுவரை ஆர்வம்காட்டவில்லை?  இலங்கை அரசு புதிய நடைமுறையைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழக அரசு உடனடி நடவடிக்கையாக பெரிய மீன்பிடி படகுகள், சிறு மீன்பிடி படகுகள் எவையெவை என்று இனம் பிரித்து, அவற்றுக்கு ஜிபிஎஸ் பொருத்திக் கண்காணிக்க வேண்டியதும், இந்தப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்தால் "பீப்' ஒலிக்கும் கைப்பேசி வசதிகளை அளிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கச்சத்தீவை மீட்கும் போராட்டம் ஒருபுறம் இருக்க, இந்திய மீன்பிடி கடற்பரப்பை இலங்கை சில கடல் மைல்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்தியா மூலமாக நிர்பந்திக்க வேண்டிய அவசியம் தமிழகத்துக்கு இருக்கிறது.  அறிக்கைகள் விடுவதும், கடிதங்கள் எழுதுவதும் கடலில் விடப்படும் காகித ஓடங்கள்தான் என்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேர்தல் வர சில மாதங்கள்தான் இருக்கின்றன. இந்த அரசு தனது ஐந்தாண்டுப் பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்யும்போது, அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்த பெருமையுடன் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தால், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் வாழ்த்தும்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக