வியாழன், 4 பிப்ரவரி, 2010

செங்கல்பட்டு ஏதிலிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்கு பழ.நெடுமாறன் கண்டனம்

பதிந்தவர்_கனி on February 3, 2010
பிரிவு: செய்திகள்

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த ஏதிலிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக ஏதிலிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 ஏதிலிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. ஏதிலிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..

தமிழ்நாட்டில் உள்ள ஏதிலிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாநிலை இருந்த ஏதிலிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.

படுகாயமடைந்த அனைத்து ஏதிலிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 15 times, 15 visits today)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக