சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – நெல்லையில் கனிமொழி
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துச் சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பின்வருமாறு பேசினா் :
சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
எதிராகப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டா என்று
ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.
கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது.
சமூக நீதியைக் காக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்.
இனி அதைக் கீழ் இறங்க விடமாட்டோம். கல்வியில் உலகத் தரம் வேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் உலகத் தரம் வாய்ந்த கல்வி
எத்தகையது என்பது முதன்மையானது. எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில்
உலகத் தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமற்கிருத மொழியில் உலகத் தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா? புதிய கல்விக் கொள்கையின் படி 10- ஆம் வகுப்பில் தோல்வியுறும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குலக் கல்வித் திட்டம் போல் உள்ளது. குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்த இராசாசியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த காமராசரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.
இன்று மத்திய அரசு அதே குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது. தற்போது மத்திய அரசின் கல்விக் குழுவில் ஆர்.எசு.எசு. அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்தக் கல்விக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.
இந்தப் போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும்.
சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக
எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைத்
திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக