மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்
இலங்கையின் முன்னணி
நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு சென்னையில்
ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.
இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
இலங்கையின் பழம் பெரும் நடிகரான
கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு
பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன அவருக்கு
நிகர் அவரே என்பதை மெய்ப்பிக்கும். அவரது துயரால் கலை உலகே கலங்கிப்போயிருக்கின்றது. தமிழ், சிங்கள மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் மறைந்த மரிக்கார் எசு. இராமதாசு.
இலங்கையில் ஒரு காலத்தில்
தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு நிகராகப் படங்களை உருவாக்கி 100 நாட்கள்
இலங்கைத் திரையரங்குகளில் ஓட்டி அருந்திறல் படைத்தவர் மறைந்த மரிக்கார்
எசு. இராமதாசு. குறிப்பாக, அவருடைய நடிப்பில் வெளிவந்த
வி.பி.கணேசன் எழுதி உருவாக்கிய ‘நான் உங்கள் தோழன்’ அவருடைய சொந்தஆக்கமான
‘கோமாளிகள்’, ‘ஏமாளிகள்’ போன்ற திரைப்படங்களை இலங்கை நேயர்கள் இன்றும்
மறக்கவில்லை.
மறைந்த மரிக்கார் எசு. இராமதாசு. வானொலி,
மேடை நாடகங்களில் பெரும் புகழ்பெற்று விளங்கிய ஒரு நடிகர். இந்திய
மரபுவழித் தமிழரான நடிகர் எசு. இராமதாசு. இலங்கை வானொலியில் தனக்கென ஒரு
தனியிடத்தைப் பதித்திருந்தவர். வானொலி மூலமாகப் பல நாடகங்களை
அரங்கேற்றியவர். மரிக்கார் எசு. இராமதாசு என்றால் அவருக்கென்றே
ஒரு தனி அன்பர்கள் கூட்டம் இருந்தது. இன்று அவர் இலங்கையில் இருக்கின்ற
பொழுது இறந்திருப்பாராக இருந்தால் இந்த அன்பர்கள் அவர் மீது
வைத்திருக்கும் பாசமும் மதிப்பும் தெரியவந்திருக்கும். அவருடைய நடிப்புகள்;
இன்றும் எம் கண் முன் தெரிகின்றது. அவருடைய இழப்பு என்றுமே ஈடுசெய்ய
முடியாத ஓர் இழப்பு
இவ்வாறு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
நன்றி இரிசுவான் சேகுமுகைதீன், தினகரன், இலங்கை
பா.திருஞானம் – 07777375053
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக