திங்கள், 9 மே, 2016

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

[இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட  இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.]

இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு முகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பின்னர் என்ன நடந்தது? எங்கே கொண்டு செல்லப்பட்டீர்கள்?
து.வரதராசா: என்னை அங்கிருந்து திரும்பவும் கண்ணைக் கட்டி, படையினரின் (இராணுவத்தினரின்) ஒரு வண்டியில் ஏற்றி வவுனியாவிற்குக் கொண்டு சென்றார்கள். வவுனியாவில் இருந்த காவல் நிலையம் ஒன்றில் கொழும்பு நான்காம் மாடியினுடைய கிளை இருந்தது. அங்கு என்னை ஒப்படைத்திருந்தார்கள். அந்த இடத்தில் அவர்களுக்கிடையில் நடைபெற்ற ஓர் உரையாடலில் – என்னைக் கொண்டு சென்ற படைப்பிரிவினருக்கும் காவலர்களுக்கும் ஓர் உரையாடல் நடைபெற்றது. “ஏன் இவரை வைத்திருந்தீர்கள்? ஏன் முதலில் தரவில்லை?” என்று. படையினரும் காவல்துறையினரும் – இரண்டு பேரும் வேறு விதமான நிலைமைகளைக் கையாண்டு கொண்டிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஏனென்றால், மற்றைய மருத்துவர்கள் ஏற்கெனவே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். அப்பொழுது என்னையும் ஏன் தொடக்கத்தில் ஒப்படைக்கவில்லை என்று அவர்கள் கேட்டார்கள். அந்த – ஒரு செய்தி – நிகழ்வைப் பகிர்ந்து கொள்ளாமல்தான் என்னை வைத்திருந்தார்கள். குற்றப்புலனாய்வுப் பிரிவினர், காவல்துறையினர் எல்லாம் பல இடங்களில் என்னைத் தேடியிருந்தார்கள் – ஏற்கெனவே கைது செய்வதற்கு. அஃது அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
பின்பு நான் – எனக்கு அந்தக் காயம் கூட ஒரு பெரிய காயம் – பெரிய கண்டத்தில் (ஆபத்தில்) இருந்தேன். அப்பொழுது வவுனியா மருத்துவமனையில் என்னைப் பண்டுதத்துக்காக (சிகிச்சைக்காக) விடும்படி நான் கேட்டிருந்தேன். அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். கொழும்புக்குக் கொண்டு போவதாகக் கூறியிருந்தார்கள். அப்பொழுது எனக்கு அந்தக் காயத்தின் தன்மை மிகவும் வேதனையாக இருப்பதாகவும் – அந்தக் காயம் சீழ் பிடித்திருந்தது – அதற்குப் பண்டுதம் (சிகிச்சை) செய்யுமாறும் கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். கொழும்பில் உள்ள தலைமையகத்திற்கு உடனடியாகக் கொண்டு போக வேண்டும் என்று காரி(சனி)க்கிழமை இரவு – அதாவது ஒன்பதாவது நாள் இரவு – அவர்களுடைய ஊர்தியில் என்னைக் கொண்டு போனார்கள். அவர்கள் தொடக்கத்தில் அது தமது தலைமைச் செயலகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, நான்காம் மாடி என்று சொல்லவில்லை. எனக்கு அஃது ஓர் அச்சமாக இருந்தது. நான்காம் மாடியா அல்லது வேறு இடமா என்று அறிய முடியாமல் இருந்தது. அங்கு போய் இறங்கி அவர்கள் மின்தூக்கியில் (lift) ஏறிக் கதவைத் திறந்த பிறகுதான் புரிந்து கொண்டேன் அது நான்காம் மாடிதான் என்று.
இர.சிறீகந்தராசா: அங்கு எவ்வாறான ஒரு சூழல் இருந்தது? நீங்கள் எவ்வாறான சூழலில் இருந்தீர்கள்?
து.வரதராசா: என்னை அங்கு கொண்டு செல்லும்பொழுது – நான் நினைக்கிறேன் -கிட்டத்தட்ட ஒரு மணி அப்படியிருக்கும். அந்த இடத்திற்குப் போகும்பொழுதே அச்ச மயமான ஓர் உணர்வு இருந்தது. இருட்டாக, சுரங்கக் குகை ஒன்றுக்குள் போவது போன்று இருந்தது. ஓர் அமைதி – அந்த அமைதி ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. நான்காம் மாடி என்ற சொல்லைப் பார்த்தவுடன் பெரும்பாலான ஆட்களுக்குத் தெரியும் இலங்கையின் நான்காம் மாடி என்பது கொடுமைகளின் உச்சக்கட்டமாக நடக்கும் சித்திரவதைகள் – மிகப் பெரிய சித்திரவதைகள் – நடக்கும் இடம் என்று. இலங்கையில் அதுதான் ஆகவும் கடுமையான சித்திரவதைகள் நடக்கின்ற இடம். அந்த இடத்திற்குப் போன உடனே எனக்கு ஓர் அச்ச உணர்வு இருந்தது. நான்காம் மாடிக்குப் போனாலே உயிர் இருக்கும் உடம்பில், வேறு ஒன்றுமே இல்லாமல் இருக்கும் ஓர் உணர்வுதான் தமிழ் ஆட்கள் மத்தியில் இருந்தது. அதைவிட, எனக்கு ஏற்கெனவே காயம் இருந்தது – நுரையீரலுக்குள் ஏறத்தாழ ஒரு புதுப்படி (இலிட்டர்) அளவில் குருதி இருந்து என்னால் மூச்சு விட முடியாமல் ஒரு சிரமம் இருந்தது. கைக்கு உணர்ச்சி இல்லாமல் – காயப்பட்ட தாக்கம் கூட எனக்கு மிகவும் வலியையும், சித்திரவதையையும் தந்து கொண்டிருந்தது. பிறகு, அங்கு அவர்களுடைய – அங்கும் ஒரு கம்பிக் கூடுதான் – சிறை. அதற்குள் கொண்டு போய் விட்டதும் பக்கத்தில் இருப்பவர்கள் யார், எவர் எனப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில்தான் பார்த்தால் பக்கத்தில், முன்னால் எல்லாம் எங்களுடன் வேலை செய்த மற்றைய மருத்துவர்களும் இருந்தார்கள்.
இர.சிறீகந்தராசா: அங்கு உங்களுக்கு உடலளவிலான சித்திரவதைகள் ஏதாவது நடந்தனவா? அல்லது முழு அளவிலான உளவியல் சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டீர்களா?
து.வரதராசா: அன்று எனக்கு அங்கு உசாவல் (விசாரணை) ஒன்றும் தொடங்கவில்லை. உடலளவிலான சித்திரவதைகள் எனக்கும் மற்றைய மருத்துவர்களுக்கும் இருக்கவில்லை.
அடுத்த நாள் என்னை மருத்துவமனைக்குப் பண்டுதத்துக்குச் சேர்த்திருந்தார்கள். அங்கு மருத்துவமனையில் வைத்து உசாவல் தொடங்கிற்று. உசாவலில் அவர்களுடைய தொனி, கருத்து எல்லாமே நாங்கள் விடுதலைப் புலிகளின் மருத்துவராகவும், விடுதலைப் புலிகளினுடைய படைப் பிரிவினருக்கும், தலைமைக்கும் நாங்கள் மருத்துவம் செய்ததாகவும்தான் இருந்தன. அப்படிக் கருதிக் கொண்டுதான் அவர்களிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்திருக்கிறோம். உசாவல் தொனி எல்லாம் அங்கிருந்துதான் தொடங்கினார்கள். எடுத்துக்காட்டாக, தலைவர் பிரபாகரனுக்கு மருத்துவம் செய்வதில் இருந்துதான் எங்களுக்கான கேள்விகளே இருந்தன. பிறகு, அவர்களுக்கு நாங்கள் அரசு மருத்துவர், அரசினுடைய சட்டத்திட்டங்களுக்கு அமைய அரசு மருத்துவமனையில்தான் வேலை செய்தோம், அதற்குரிய முறையான இசைவளிப்புகளும் (அனுமதிகளும்) சரி, முறையான ஆவணங்களும் சரி – எல்லாம் எங்களுக்கு இருந்தன, உரிய முறைப்படிதான் நாங்கள் செய்தோம் என்பதை விளக்குவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. பிறகு, ஏறத்தாழ ஒரு கிழமை (வாரம்), இரண்டு கிழமை அந்த உசாவலுக்குப் பின்புதான் அவர்கள் எங்களுடைய சேவையை முற்று முழுதாகப் புரிந்து கொண்டார்கள்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
    நன்றி: ஈழமுரசு
https://it-it.facebook.com/1706337189599614/videos/1789730747926924/
தரவு: பதிவு
http://www.tamilarul.com/?p=23541
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக