தலைப்பு-மாணவத்தோழர்களே,வே.ஆனைமுத்து :thalaippu_maanavthozhargale_anaimuthu

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே!

தமிழைக் காப்போம் வாருங்கள்!
தமிழால் வாழ்வோம் வாருங்கள்!
அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே!
18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை.
தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி.
இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர்.
தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும்.
தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்.
தமிழிலக்கணம் அறிவியல் அடிப்படையில் அமைந்தது.
தமிழை அடுத்துப் பழமையான மொழி சமற்கிருதம். “சமற்கிருதம்” என்றாலே, ‘செப்பம் செய்யப்பட்ட மொழி’ என்று பொருள்.
இந்தியாவிலுள்ள மக்கள் 126 கோடிப் பேருள், 50 இலக்கம் பேரால்கூட சமற்கிருதம் பேசப்படவில்லை.
ஏன்?
குப்தர் காலத்துக்குப் பிறகு சமற்கிருதம் ஆட்சிமொழியாக இல்லை. வேதபாட சாலைகளில் பிராமணர் மட்டுமே சமற்கிருதம் படிக்க முடியும். வேதம், உபநிடதம், சமற்கிருதம் தவிர்த்து வேறு எந்தப் பாடமும் வேதபாடசாலையில் கற்கமுடியாது. எனவே அதுவெறும் சடங்குமொழி ஆகிவிட்டது.
வெள்ளைக்காரர்கள் வருகிற வரையில் இந்தியாவில், எங்கும் எல்லா மக்களும் படிக்கக்கூடிய பொதுப்பள்ளிகள் இல்லை. ஆங்காங்கே மேல்சாதிக்காரர்கள் திண்ணைப் பள்ளிகள் நடத்தினார்கள். அப்பள்ளிகளில் கீழ்ச்சாதிக்காரர்களும் ஏழைகளும் படிக்க முடியாது.
இந்நிலையில், இங்கு எல்லா மக்களும் படிக்கக் கூடிய அரசுப் பொதுப் பள்ளிகளில் 1920 வரையில், தீண்டப்படாத வகுப்பு மக்கள் சேர்க்கப்பட முடியாது. இது பெரிய குறை; அவலம்.
அடுத்து இந்தியா முழுவதிலும் எல்லா அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1835 முதல், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் அவரவர் தாய்மொழி வழியில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
சென்னை மாகாணத்தில், 1938 வரையில், தமிழ்நாட்டில் தமிழ் வழியிலும்; தெலுங்கு நாடு, கருநாடகம், கேரளத்தில் அவரவர் தாய்மொழி வழியிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
இதே சென்னை மாகாணம் முழுவதிலும் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு, கல்லூரியில் முதல்நிலை (F.A..), பட்டப்படிப்பு (B.A.), பட்ட மேற்படிப்பு (M.A.), பொறியியல் (B.E.), பட்டயப் படிப்பு (D.E.); மருத்துவம் ( L.I.S., L.I.M., M.B.B.S.) ஆகிய எல்லாப் படிப்புகளிலும் எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியிலேயே 1938 வரையில் கற்பிக்கப்பட்டன.
1937-1939ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண முதன்மையராக (Premier) இருந்த இராசகோபாலாச்சாரியார் – மாகாணம் முழுவதிலும் 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகத் திணித்தார்.
1300 ஆண்களும் பெண்களும் சிறைப்பட்ட பிறகும் கூட அவர் கட்டாய இந்தியை அகற்றவில்லை.
அதே ஆச்சாரியார், சென்னை மாகாணம் முழுவதிலும் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையில் (VI Std. to XI Std.) எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் எல்லாப் பாடங்களும் தமிழ்நாட்டில் தமிழ் வழியில், ஆந்திரத்தில் தெலுங்கு வழியில், கருநாடகத்தில் கன்னட வழியில், கேரளத்தில் மலையாளம் வழியில் கற்பிக்கப்பட வழிவகுத்தார்.
(நான், 1942-46இல், 9, 10, 11, வகுப்புப் பாடங் களைத் தமிழ் வழியில் படித்தேன்)
சட்டைக்காரர்கள் என்னும் ஆங்கிலோ-இந்தியர்கள் படிப்பதற்கான பதின்நிலைப் பள்ளிகளில்‘(மெட்ரிகுலேசன்’) ஆங்கில வழியில் படிப்பதற்கு வழிசெய்தார்.
கீழைக்கலைப்பள்ளிகளில் (Oriental Schools) சமற்கிருதம் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வழிசெய்தார்.
12 இலக்கம் உரூபா அரசுச் செலவில் சமற்கிருதக் கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.
இது வெள்ளையர் ஆட்சிக்காலம்.
வெள்ளையர் 1947இல் வெளியேறினர்.
காங்கிரசுக் கட்சி 1947 முதல் 1967 வரை சென்னை மாகாணத்திலும், தமிழகத்திலும் ஆட்சி செய்தது.
1-11-1956இல் சென்னை மாகாணம் – நான்கு மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது கு. காமராசர் முதலமைச்சர்.
இடையில், 1948 முதல் சென்னை மாகாணம் முழுவதிலும் இந்தி, தேர்வுக்கு உரிய பாடமாகக் கற்பிக் கப்பட்டது. 1954-56இல் காமராசர் ஆட்சிக் காலத்தில், தந்தை பெரியார் இந்தியை எதிர்த்து 1954, 1955, 1956ஆம் ஆண்டுகளில் மாபெரும் இந்தி அழிப்புக் கிளர்ச்சிகளை நடத்தினார். 1955இல் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். காமராசர் இந்தியைப் படிப்போர், தேர்ச்சி பெறுவதற்கு உரிய மதிப்பெண் பெறவேண்டியதில்லை என அறிவித்தார். கொடி எரிப்புப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
காமராசர் 1963 அக்டோபரில் பதவி விலகினார். எம். பக்தவத்சலம் முதலமைச்சராக வந்தவுடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு (Section) ஆங்கில வழியில் கற்பிக்கப்பட வழிவகுத்தார். ஆங்கிலம் மீண்டும் படிப்பு மொழி ஆனது.
6-3-1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது.
1.இந்திப் பாடத்தில் தேர்வு எழுதினாலும், தேர்ச்சிக்கு உரிய மதிப்பெண் பெறவேண்டியதில்லை என்ற தன்மையில் இருந்த இந்தி, உயர்நிலைப் பள்ளிகளில் ஒழிக்கப்பட்டது.
  1. தன்மதிப்பு(சுயமரியாதை)த் திருமணம் – இந்துச் சட்டப்படியே, செல்லுபடியாகும் சட்டத்தை தி.மு.க. அரசு இயற்றியது.
3.“சென்னை மாநிலம்” என்ற பெயரைத் “தமிழ் நாடு” என மாற்றுவதைச் சாதித்தது.
ஆனால், உயர்நிலைக் கல்வி கற்பிக்கப்படும் பாட மொழியாக – கல்லூரிக் கல்வி கற்பிக்கப்படும் பாட மொழியாகத் தமிழ் மட்டுமேதான் இருக்கும் என்ற சட்டத்தை உறுதிப்பாட்டுடன் ஒருபோதும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
அத்துடன் கல்விதரும் தருமத்தை – அறப்பணியைச் செய்யப் போவதாகக் கூறிய எல்லாப் பணக்காரர்களும் ஆங்கில வழியில் – தமிழக அரசுப் பாடத் திட்டங்களை வைத்து, பாடங்களைக் கற்பிக்கிற பதின்நிலைப்பள்ளி தொடங்கிட தி.மு.க. அரசு வழிவிட்டது.
இடைநிலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்வி இயல் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், பட்டயத் தொழிற் படிப்புகள், பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் எனத் தனியார் நிறுவனங்களைத் தொடங்கி நடத்திடத் தாராளமாக இசைவு அளித்தது.
அதே பணியை, அதைவிட விரைந்து செய்திட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 1980-1989இல் எல்லாம் செய்தது. இக்கல்வி நிறுவனங்கள் நன்கொடைகளும், பயிற்சிக் கட்டணங்களும் கொள்ளை கொள்ளையாகக் குவிக்கும் – கள்ளப்பணம் அச்சடிக்கிற தொழிற்கூடங் கள் ஆயின.
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அமைத்திட – தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் முழுத் துணை நின்றன. இன்று தமிழகத்தில் மட்டும் 560 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இந்தியா முழுவதிலும் 7,000 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இந்தி பேசும் உத்தரகாண்ட், உ.பி., ம.பி., பீகார், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களிலும்; பங்களா பேசும் மேற்கு வங்கத்திலும், பஞ்சாபி பேசும் பஞ்சாப் மாநிலத்திலும், மராட்டி பேசும் மகாராட்டிரம், தெலுங்கு பேசும் ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களிலும், கன்னடம் பேசும் கர்நாடகத்திலும், தமிழ் பேசும் தமிழ்நாட்டிலும், மலையாளம் பேசும் கேரளத்திலும்; 7 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலும்
பொறியியல் கல்வி
மருத்துவக் கல்வி
வேளாண் கல்வி
சட்டக் கல்வி
என்கிற எல்லாத் தொழிற்கல்விகளும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன.
அதாவது அவரவர் தாய்மொழி வழியில் பொறி இயல், மருத்துவம் கற்பிக்கப்படவில்லை.
இவற்றில், இந்தியாவில், பொறியியல் கல்லூரிகளில் 2015-16ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட வேண்டிய மொத்தம் இடங்கள் 16.5 இலக்கம்.
இவ் இடங்களில், 9 இலக்கம் இடங்களில் மட்டும மாணவர்கள் சேர்ந்தனர்.
ஏன்?
இந்தியாவில் பொறியியல் படித்தவர்கள் உலகத்தரம் உள்ள தகுதியைப் பெற முடியவில்லை; வேலை தேடும் உலகச் சந்தையில் இவர்கள் போட்டிபோடக்கூடிய திறமையைப் பெற இயல வில்லை. இதை நாம் சொல்லவில்லை.
ஆண்டுதோறும், உலகத்தில் தரம் வாய்ந்த  பல்கலைக் கழகங்களின் பட்டியலை எடுத்து, அந்தத்தரத்தில் 300இல் இந்தியாவில் எத்தனைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன என்கிற விவரத்தை மூன்று தடவைகள் வெளியிட்டார்கள்.
அண்மையில், உலகத்தரம் வாய்ந்த 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலையும் – அந்த 200இலேயே மிக மிகத் தரம் வாய்ந்த 17 பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் தனித்தனியே வெளியிட்டார்கள்.
அப்பட்டியலில் இடம்பெறத் தகுதி வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம்கூட இந்தியாவில் இல்லை.
401-500 தரம் வாய்ந்த உலகப் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற இந்திய நிறுவனங்கள் சென்னை ஐ.. ஐ.டி., தில்லி ஐ.. ஐ.டி., கரக்பூர் ஐ.ஐ..டி., 351-400 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றது, மும்பை ஐ. ஐ.டி.,  251-300 இல் இடம் பெற்றது, பெங்களூர் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (டைம்சு ஆஃப் இந்தியா, சென்னை, 1-10-2015) உலகத்தரம் வாய்ந்த 100 பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் பெங்களூர் அறிவியல் கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பெற்றது. (“விடுதலை”, சென்னை, 13.11.2015)
ஏன்? ஏன்? ஏன்?
1.இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களிலும், எந்தத் தொழிற் படிப்புக் கல்லூரியிலும் அவரவர் தாய்மொழி வழியில் கல்வி கற்பிக்கப்பட வில்லை. ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இது ஒன்றே மூலகாரணம்.
அது ஏன் அப்படி?
எந்த இந்திய மொழியையும் எல்லாத் தொழில்நுட்பக் கலைச் சொற்களும் நிறைந்ததாக வளர்த்தெடுக்க – இந்திய அரசு எதுவும் செய்யவில்லை.
அதே நேரத்தில், சமற்கிருதத்தைக் கற்றுத்தரவும், அம்மொழியில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், வடமொழி அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கவும்; மற்றும் இந்தி மொழியை ஆட்சிமொழி ஆக்கிடத் தகுதிப்படுத் தவும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாவை காங்கிரசு அரசும், பாரதிய சனதா அரசும் வாரி வழங்கி வருகின்றன.
எந்த மொழி மாநில அரசும், தன்தன் மாநில மொழியைப் பல்துறை அறிவியல் கலைச் சொற்கள் நிறைந்ததாக வளப்படுத்த ஆவன செய்யவில்லை.
தமிழக அரசு, போதிய அளவில், ஒருபோதும் செய்யவில்லை.
அத்துடன் தமிழகத்திலுள்ள தனிப்பட்ட பொறியியல் – மருத்துவ – வேளாண் – சட்ட அறிஞர்கள் வருந்தி முயன்று 1960களில் தாமே உருவாக்கிய தொழிற் படிப்புக்கான பாட நூல்களைத் தமிழக அரசே வெளியிட்டுத், தமிழ் வழியில் எல்லாத் தொழிற் கல்வியையும் கற்பித்திடத் தமிழக அரசினர் தவறிவிட்டனர். இது மன்னிக்க முடியாத தமிழ்மொழிப் பகைச் செயல் ஆகும்.
  1. இந்தியாவில், பொறியியல் கற்பவர்களுக்கு, எந்தத் தொழிற்சாலையிலும் பணியறிவுப் பயிற்சி பெறுகிற ஏற்பாட்டை, எந்த இந்தியத் தனியார் பல்கலையும், அரசுப் பல்கலையும் எப்போதும் செய்யவில்லை.
அமெரிக்காவில் உள்ள 30 இலக்கம் இந்தியர்களில் கணிணிப் பயிற்சி பெற்ற 10 இலக்கம் பேர் அடிமை வேலை செய்கிறார்கள்; இங்கிலாந்தில் 7 இலக்கம் இந்தியர்கள் கணிணிப் பண்ணை வேலை செய்கிறார்கள்.
இந்தியாவுக்குள் ஆண்டுக்கு ரூபா 2 இலக்கம் முதல் 15 இலக்கம் வரையில், ஊதியம் சம்பாதிக் கிறவர்கள் சில இலக்கம் பேர் இருக்கிறார்கள்.
இவர்களுள் பாதிப் பேர் மேல்சாதியினர். ஆங்கில வழிக்கல்வி அவர்களுக்குக் கை கொடுத்தது.
இவர்கள் அனைவருக்கும் தத்தம் வயிற்றைக் கழுவ இந்த ஆங்கில வழிக் கல்வி பயன்பட்டதே தவிர, இந்தியாவில்-தமிழகத்தில் தரமான தொழிற்கல்வியைத் தரவும், புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யவும் இவர்கள் பெற்ற ஆங்கில வழிக்கல்வி பயன்பட ஏற்ற தாக இல்லை. அப்படிப் பயன்படாது; பயன்படவும் முடியாது. ஏன்?
அமெரிக்கனுக்கும், இங்கிலாந்துக்காரனுக்கும், ஆத்திரேலியனுக்கும் ஆங்கிலம் தாய்மொழி.
அங்கெல்லாம் எல்லா நிலைக் கல்வியையும் ஆங்கில வழியில் கற்கிறார்கள்.
அதேபோல் சீனாக்காரன் சீனமொழியிலும், சப்பானியன் சப்பான் மொழியிலும், இரசியன் இரசிய மொழியிலும் எல்லா நிலைக் கல்வியையும் கற்கிறான். கற்பிக்கப்படுகிற எல்லாப் பாடங்களையும் அவனவன் தெளிவாகப் புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்கிறான். அதுதான், உலகத் தரம் வாய்ந்த கல்வி பெற்றவனாக, அந்த ஒவ்வொருவனையும் உருவாக்குகிறது.
அதுமட்டுமா?
1961 முதல் 2014 முடிய 50,000 இந்தியர்கள் இரசியாவில் மருத்துவம் படித்தார்கள். அவர்கள் இங்கே கற்றுக்கொண்டுபோன ஆங்கிலம் வழியிலா இரசியாவில் பாடம் கற்றார்கள்? இல்லை. அது முடியாது.
அங்கே மருத்துவம் படிக்கப் போகும் ஒவ்வொரு வெளி நாட்டானும், முதலாவது ஓராண்டில் இரசிய மொழியைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, இரசிய மொழியிலேயே மருத்துவக் கல்வியைக் கற்க வேண்டும். வேறு வழியே இல்லை. அதுவே பாடம் கற்பிப்பவனுக்கும், கற்பவனுக்கும் புரிதலுடன் பாடம் சொல்லித்தரவும், படிப்பதை மாணவன் நன்கு புரிந்து கொள்ளவும் உரிய ஒரே வழி.
சுவிட்சர்லாந்து, செர்மனி, சப்பான் என்கிற எந்த நாட்டுக்கு எந்த அயல்நாட்டு மாணவன் படிக்கப் போனாலும் – முதலில் அந்தந்த நாட்டு மொழியைக் கற்றுக்கொண்டுதான், பிறகு படிக்க முடியும்.
தமிழகத்திலுள்ள கல்வியாளர்கள், பன்மொழிப் புலமையாளர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஏடெழுதுவோர், கட்சிகளின் தலைவர்கள், மக்கள் நலன் நாடுவோர் – குறிப்பாக மாணவச் செல்வர்கள், உயிர்கல்வி கற்ற ஆடவர் – மகளிர் எல்லோரும் – அருள்கூர்ந்து – முற்சாய்வுஎண்ணம்(Prejudice) இல்லாமல், மனந்திறந்து இவைபற்றிச் சிந்தியுங்கள்!
தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பெரியபுராணம், கம்பராமாயணம் இவற்றுக்கு உரைகள் எழுதுவதை அடியோடு ஒத்தி வைத்துவிட்டு, இவற்றுள் புதைந்து கிடக்கும் அறிவியல் – கலை – பொருளியல் – அரசியல் – பண்பியல் பற்றிய பல்துறை வேர்ச் சொற்களைத் திரட்டித் தாருங்கள்!
இவற்றில் புலமை பெற்றோர் சிலரையும் – மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, அரசியல் – பொருளியல் – வணிக இயல் இவற்றுள் துறை போகக் கற்ற சிலரையும் தனித்தனிக் குழுக்களாக அமைத்து – தமிழ் வழியில் எல்லாத் துறைக் கல்வியையும் தர ஏற்ற பல்துறைப் பாடநூல்களை உடனே உருவாக்குங்கள்.
தமிழக அரசினர் மனம் வைத்தால் 2016-2020 க்குள் இவற்றை வெற்றியாகச் செய்திட முடியும்.
ஆங்கிலத்தில் இவை எல்லாம் இருப்பது உண்மை. ஆனால் நம்மில் எவரும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆங்கிலம் கற்றாலும் நம்மில் எவரும் ‘ஆங்கிலேயன்’ ஆகமுடியாது; அப்படி ஆகவும் வேண்டா. அது மாபெரும் இழுக்கு; மானக்கேடு. தமிழனுக்குத் தமிழ்தான் உயிர்; தமிழ் தான் வாழ்வு.
நாம் தமிழில் எல்லாத்துறை அறிவு நூல்களையும் உருவாக்குவோம். அவையே பாட நூல்கள், கருவி நூல்கள். தமிழிலேயே எல்லாம் கற்போம்.
தமிழில் எல்லாக் கல்வியும் கொடுஎனத் தமிழக அரசிடம் கோரிப் போராடுவோம் – வெற்றி பெறுவோம், வாருங்கள்! பேசுங்கள்! போராடுங்கள்! 
பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து
சிந்தனையாளன், திசம்பர் 2015
attai_wraperஅட்டை,சிந்தனையாளன், திசம்பர்2015 : _chinthanaiyaalan,dec2015