புதன், 6 ஏப்ரல், 2016

அடிமைப்படக் காரணம் அரசர்களே!




இராசாமுகமது உரை : rasamohammed

நம் நாடு அடிமைப்படக் காரணம் நம் அரசர்களே! – தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர்

    “நம் நாட்டை ஐரோப்பியர்களுக்கு அடிமைப்படுத்தியவர்கள் நம் அரசர்கள்தாம் என்றார் தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர் செ.இராசா முகமது அவர்கள்.
  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விசயநகரக் காலம் முதல் குடியேற்றஆதிக்கக்(காலனியாதிக்க) காலம் வரையிலான கடல்சார் வரலாறு என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
  “தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலம் 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. விசயநகரப் பேரரசுக் காலத்தைக் கடல்சார் வரலாற்றுக் கல்வெட்டு, அரேபிய நாட்டின் பயணக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
  செஞ்சி நாயக்கர், மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர் ஆகியோரிடையே சண்டை இருந்தாலும், ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு வணிகர்களைக் காக்கும் போட்டி மிகுதியாக இருந்தது. இதற்குக் கடல்சார் பகுதியில் கிடைத்த வருமானமே காரணம்.
  போர்த்துக்கீசியர்கள் இங்கு நறுமணப் பொருட்கள், துணிகளை வாங்கிச் சென்று தங்கம், வெள்ளியைக் கொடுத்தார்கள். அவர்களுக்கு இங்குள்ள அரசர்கள் எதிர்ப்புக் காட்டவில்லை. இதனால், போர்த்துக்கீசியர்கள் தங்களது விருப்பம் போல இடத்தைக் கையகப்படுத்தினர். மேலும், சமய மாற்றமும் செய்தனர்.
  இடச்சுக்காரர்கள் (Dutch), இடேனீசுக்காரர்கள் (Danish) போன்றவர்களுக்கும் நம் அரசர்கள் ஆதரவு அளித்தனர். இது போல, நம் நாட்டை ஐரோப்பியர்களுக்கு அடிமைப்படுத்தியதே நம் அரசர்கள்தாம் என்பது கடல்சார் வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.
  ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு ஆந்திரம், தமிழகத்தில் ௩௮ (38) துறைமுகங்கள் இருந்துள்ளன. ஐரோப்பியர்களின் வருகையின் மூலம் நம் நாட்டின் வளம் வெளிப்பட்டாலும், அவையெல்லாம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் பொருளியல் (Economy) வளர்ச்சி அடைந்தாலும், அவை மேலை நாடுகளுக்குச் சென்றன.
  1498 முதல் 1947 வரையிலான ஐரோப்பிய வணிக ஆவணங்களைப் படித்தாலே அரசியல், குமுக (சமூக), பொருளியல் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தமிழகக் கடல்சார் வரலாறு ஆழ்கடல் போன்றது. அதை ஆராய்ந்தால் நிறையத் தகவல்கள் கிடைக்கும்”.
பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக