செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இராமாயணப் பூமி இலங்கை! – வே.இராதாகிருட்டிணன்

கொழும்பு கம்பன் விழா12 :kambanvizhaa12

இராமாயணப் பூமி இலங்கை!

  “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப் படுகின்றது” எனக் கூறுகின்றார் கல்வி அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் பராமரிப்பு அவைத் தலைவருமான வே.இராதாகிருட்டிணன் அவர்கள்.
  அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ‘கொழும்பு கம்பன் விழா – 2016’ மூன்றாம் நாள் (மார்ச்சு 26) இரண்டாம் அமர்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றும்பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில்,
  “இராமாயணத்தில் சுந்தரக்காண்டம் பற்றி நன்கு அறிந்த பலர் இந்த அவையிலே இருப்பீர்கள். இதற்கு சுந்தரக்காண்டமெனப் பெயர் சூட்டப்பட்ட காரணங்களை அறிஞர்கள் பலவாறாகக் கூறுவார்கள். சுந்தரக்காண்டத்தில் சொல்லப்படும் கதைக்களத்தில் இராமன் நேரடியாகத் தோன்றுவதில்லை. அக்காண்டத்தில் அனுமன் இலங்கை வந்து சீதா பிராட்டியைத் தேடுவதும் – காண்பதும் – இராமனின் கணையாழியைக் காட்டி அறிமுகமாகி, பின் அவளின் சூடாமணியை அடையாளமாகப் பெற்றுத் தனது ஆற்றலை இராவணனுக்கும் அவன் படையினருக்கும் காட்டி விட்டு – அதாவது அரக்கர் தன் வாலில் வைத்த தீயால் இலங்கையின் ஒரு பகுதியை எரியூட்டிவிட்டு – இராமனைச் சென்றடைந்து “கண்டேன் சீதையை” எனக் கூறி இராமனுக்குப் புத்துணர்வு அளிக்கின்றார்.
  எனவே, சுந்தரக்காண்டத்தில் அனுமனே நிறைந்திருப்பதாலும் அனுமனுக்குச் ‘சுந்தரன்’ என ஒரு பெயரும் இருப்பதால் சுந்தரக்காண்டமெனப் பெயரிடப்பட்டுள்ளது என்பார்கள். அப்படியில்லை – சீதை ஓர் ஆண்டுக் காலம் சிறையுற்றுப் பட்ட துன்பம் இந்தக் காண்டத்தில் நீங்குவதால் அதை சுந்தரமாகக் கருதி சுந்தரக்காண்டமெனக் கம்பர் பெயரிட்டுள்ளார் என்பாரும் உளர்.
  இராமாயணம் மனிதக் குலத்துக்குக் கிடைத்த ஒரு பெரும் கருவூலம் என்றால், அதில் சுந்தரக்காண்டம் விலைமதிப்பற்ற வைடூரியம் எனலாம். சுந்தரக்காண்டத்தை முறைப்படி ஓதுபவர்களுக்குத் தீங்குகள் அண்ட மாட்டா; துயரங்கள் தீண்ட மாட்டா; எல்லா வளங்களும் வந்தடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அழகான சுந்தரக்காண்டத்தில் அன்னை சீதை அழகு, கதையும் அழகு, அதை மொழியும் சொற்களும் அழகு, காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயன் அழகு, நற்பலன் கொடுக்கும் அதன் மந்திரங்கள் அழகு, அது சொல்லும் அசோகவனம் அழகு, அது அமையப் பெற்றிருக்கும் இலங்காபுரி அழகு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
  இவ்வாறு நான் சுந்தரக்காண்டத்தின் சிறப்பைச் சொல்வது இராமாயணத்தை முற்றும் கற்றுத் தெளிந்தவன் என்கிற அடிப்படையில் இல்லை. அப்படிச் செய்தால் இங்கு இராமாயணத்தில் துறை போனவர்கள் இருக்கும் அவையில் கொல்லன் தெருவில் ஊசி விற்பவன் போலாவேன். சுந்தரக்காண்டம் நான் வாழும், குமுகப் (சமுக) பணியில் இயங்கும் பகுதியான நுவரெலியாவைக் களமாகக் கொண்டிருப்பதாலே அதன் பெருமையைச் சொல்கின்றேன். நான் கம்பன் குடும்பத்தின் உறுப்பினராக நுவரெலியிலிருந்து சீதையம்மன் சார்பாக, பெண் வீட்டில் இருந்து வந்துள்ளேன்.
  நுவரெலியா மாவட்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் இராமாயணத் தடங்கள் பல இருக்கின்றன. அங்கெல்லாம் அடிக்கடி சென்று மக்களை – அதாவது இன்றும் மார்கழி மாதத்தில் கூட்டிசை(பசனை) பாடி ஊர்வலம் வரும் வழக்கத்தைக் கைவிடாத தோட்டத் தொழிலாளர்களைச் – சந்திக்கும்பொழுதெல்லாம் என்னை அறியாமலே எனக்குள் சுந்தரக்காண்டம் ஓதப்படுவதாலேயேதான் இன்று இலங்கை மக்களுக்குச் – குறிப்பாகத், தமிழ் பேசும் மக்களுக்குச்- சேவையாற்ற பேறு கிடைத்ததாகக் கருதுகின்றேன். அதன் ஒரு பேறாக இன்று இந்தக் கம்பன் விழாவிலே தலைமையுரை ஆற்றும் வாய்ப்பு அமைந்துள்ளது.
  உண்மையிலே சொல்லப் போனால், சீதை சிறையிருந்த  அசோக வனம் நுவரெலியாவை ஒட்டிய அக்கலவில் இருக்கின்றது. அந்த அசோக வன எழிலை இன்றும் அங்குள்ள பூங்காவின் சுற்றயலில் காணலாம். அங்கேதான் சீதா பிராட்டி நீராடிய சீதா எலிய நீரோடை அமைந்திருக்கின்றது. அனுமனின் காலடிச்சுவடுகள் காணப்படும் அப்பகுதியில் பழமை வாய்ந்த சீதை அம்மன் ஆலயம் எழுந்துள்ளது.
  சீதை, இராமன், இலக்குவன், ஆஞ்சநேயன் எழுந்தருளியிருக்கும் அந்த ஆலயத்தின் அறங்காவல் அவையின் தலைமை உறுப்பினனான நான் இராமாயணத்தின் இலக்கியச் செழுமைபற்றிப் புகழுரைக்கும் இம்மண்டபத்தில் அதன் இறையியல்(ஆன்மிக) கூறு தொடர்பில் முதன்மையானவன் என்கிற வகையில் கிடைத்த உரையாற்றும் வாய்ப்புக்குக் கம்பன் கழகத்துக்கு நன்றியையும் இராமனுக்கும் ஆஞ்சநேயனுக்கும் என் பணிவையும் தெரிவித்துக் கொள்ள வேண்டியது என் கடமை.
  சீதாக்கொட்டுவ எனத் தற்பொழுதும் சிங்களத்தில் அழைக்கப்படும் சீதை முதலில் சிறை வைக்கப்பட்ட இடத்திலிருந்து இராவணன் பின் அவளைத் தன் தேரிலேற்றி, அசோக வனத்துக்கு அழைத்துச் செல்கின்றான். இலங்கையின் வனப்பான பகுதிகளைச் சீதைக்குக் காட்ட வேண்டும் என்ற ஆவலோடு காடுகளடங்கிய பகுதியில் சென்ற வழியில் இன்றும் மரங்கள் முளைக்காமல் புல் பூண்டுகள் மட்டுமே காணப்படுவதாகக் கூறுகிறார்கள். அவ்வாறு செல்லும்பொழுது இராவணன் சீதைக்கு ஊட்டம் மிக்க சோற்றுக் கவளங்களை அல்லது உருண்டைகளை வழங்கியதாகவும் இராவணன் கைகளால் வழங்கிய எதனையும் சீதை உண்ண மறுத்து வாங்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு வீசிய உருண்டைப் பகுதிகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. சிங்கள மக்கள் அதனைச் சீதாக் குலிய என்றும் தமிழர்கள் ‘இராவணன் கொழுக்கட்டை’ எனவும் அழைப்பதோடு அதனை மருந்தாகவும் பேறு(அதிருட்டம்) தரும் பொருளாகவும் பேணுகின்றார்கள. இந்த உருண்டைத் துகள்களை ஆய்வு செய்த தோக்கியோ, தில்லி அறிவியல் நிறுவனங்கள் இவை ௫௦௦௦ (5000) ஆண்டுப் பழமை வாய்ந்தவை என்கின்றார்கள்.
  சீதையைத் தேடி வந்து அனுமன் முதலில் கால் வைத்த பவளமலை, புசெல்லவா பகுதியிலுள்ள புரட்டோப்பு தோட்டத்தில் காணப்படுகின்றது. சீதையின் சூடாமணியைப் பெற்றுக்கொண்ட அனுமன் இராமனைக் காணச் செல்லும் முன் ஓய்வெடுத்த மலையுச்சி இலபுகலைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. மணி கட்டுதர் என்ற பெயரால் அழைக்கப்படும் அங்கு இராமர் கோவில் அமைத்துத் தோட்ட மக்கள் வழிபாடு செய்கின்றார்கள்.
  அதற்கு அண்மித்த பகுதியில் கொண்டகலை எனும் ஊர் இருக்கின்றது. அதற்கு அப்பெயர் வரக் காரணத்தை அப்பகுதி மக்கள் பின்வருமாறு கூறுவார்கள்.
  அசோக வனத்துக்குச் சீதையை இராவணன் தேரில் அழைத்து வந்தபொழுது இப்பகுதியை மிக வேகமாகக் கடந்தமையால் சீதையின் கூந்தல் – அதாவது கொண்டை – கலைந்ததாகவும் ஆகவே அது கொண்டை களை என அழைக்கப்படுவதாகவும் கூறுவார்கள்.
  அனுமனின் கண்களுக்குத் தெரியாமல் பின் சீதையை மறைத்து வைக்க அசோக வனத்திலிருந்து அழைத்துச் சென்ற இடமாக இருப்பது கொத்(து)மலை பகுதியிலுள்ள இராவணாகொட என்று இன்றும் அழைக்கப்படும் இடமாகும். நெடிய மலைகளும் வளைவுகளும்  கால்வாய்களும் கொண்ட இப்பகுதி இராவண ஆட்சியின் முதன்மையான பகுதி எனலாம்.
  போருக்கு முன் சிவனை வணங்கிப் பேராற்றல் பெற இராவணன் மைந்தன் மேகநாதன் இலிங்க வழிபாடு செய்த இடமே தற்போது காயத்திரிப் பீடமாக நுவரெலியாவில் விளங்குகின்றது. இராமாயணப் போரின் உச்சக்கட்டத்தில் இராவணனின் மூத்த மகன் மேகநாதன் அனுமனின் பலத்தைச் சிதறடிக்க சீதை போன்று தோற்றம் காட்டிய இடம் சீதாவாக்கை என அழைக்கப்படுகின்றது. இது நான் அடிக்கடி பயணம் செய்யும் அவிசாவளை பகுதியில் இருக்கின்றது.
  இவை எல்லாவற்றையும் தவிர முதன்மையான இடம் நுவரெலியா வெளிமடை வழியில் அமைந்துள்ள திவுறும்பொல ஆகும். அதைத் தமிழ்ப்படுத்தினால் உறுதிமொழி கூறும் இடம் எனலாம். இங்குதான் இலக்குவனைக் கொண்டு தீயெழுப்பச் செய்து அதற்குள் நுழைந்து நெருப்புச் சோதனை மூலம் தன் தூய்மையை இராமனுக்கும் முழுவுலகுக்கும் சீதை காட்டினாள்.
  இன்று இந்த இடம் பௌத்தர்களின் பேணுகையில் இருப்பதும் அனுராதபுர போதி மரத்தின் கிளையிலிருந்து வளர்ந்த அரசமரமும் விகாரையும் அங்கிருப்பதும் அதன் புனிதம் பேணப்படுவதற்குச் சான்றாக உள்ளது. மேலும் இரம்பொட பகுதி, அனுமன் சீதையைத் தேடிய பகுதியாகவும் இராமர் படை இருந்த பகுதியாகவும் கருதப்படுவதால் இங்கு சின்மயா அறக்கட்டளையால் அருள்மிகு இறையன்பன்(பக்த) அனுமன் ஆலயம் எழுப்பப்பட்டு உலகெங்கும் உள்ள இராம இறையன்பர்கள் மலையகத்துக்கு வந்து வழிபாடு செய்வது மலையகத்துக்கும் இராமாயணத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைத் தொடர்ந்தும் வலுப்பெறச் செய்கின்றது.
  இலங்கை மக்களின் செவிவழிக் கதைகள் ஊடாகவும் சூழுலகுசார்(global) அமைப்புகள் ஊடாகவும் கம்ப இராமாயணம் ஊடாகவும் இன்னும் பல ஆய்வுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் இலங்கையை இராமாயண பூமியென ஏற்புச் செய்யவும் இங்குள்ள அறிஞர்கள் ஊக்கமும் ஆக்கமும் காட்டுவார்களென நம்புகிறேன்.
– இலங்கைக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்

[பி.கு. : இராமாயணக் கற்பகைக் கதைகளின் அடிப்படையில் பேசியுள்ளார். சிங்களப்பகுதிகளிலேயே நூற்றுக்கணக்கில்  கண்ணகிக் கோயில்கள் உள்ளன. அதுபற்றி யாரும் எழுதினால் நன்று.
 இதில் குறிப்பிட்டுள்ள சீதா எலிய நீரோடைபற்றி அறிய விரும்புவோர் கோவில் வலைப்பூவைக் காண்க. -அகரமுதல]