நல்வாழ்வுத்திட்டச் செயற்பாட்டில் தமிழகம் முன்னோடி – தெலங்கானா குழு பாராட்டு
நலவாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும், முதலமைச்சர் செல்வி செயலலிதா நிறைவேற்றி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம், மகப்பேறு உதவித் திட்டம் முதலான நல்வாழ்வுத் திட்டங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் தெலங்கானா மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் மரு. கே. லட்சுமி தலைமையிலான 18 பேர் அடங்கிய குழுவினர், (26.02.16 அன்று) சென்னை வந்தனர். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர்கள் பார்வையிட்டனர். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம், பொது நலவாழ்வுத் திட்டங்கள், தாய்சேய் நல திட்டங்கள், மகப்பேறு உதவித் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் செல்வி செயலலிதா, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதாக இக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மரு. சி. விசயபாசுகர், நலவாழ்வுத்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி செயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்து, தெலங்கானா குழுவினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்குழுவினர், சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு மாநில மருந்துக்கிடங்கு, மேடவாக்கம் தொடக்க நல்வாழ்வு நிலையம், பெருங்களத்தூர் நலவாழ்வு மையம், தாம்பரம் அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மறுநாள் சனியன்று, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைப் பிரிவு, 104, 108 தலைமை கட்டுப்பாட்டு அறை, கிண்டியில் உள்ள அரசு(கிங்கு) ஆய்வகம் ஆகிய இடங்களைத் தெலங்கானா மாநில நல்வாழ்வு குழுவினர் பார்வையிட்டனர்.
[குறிப்பு : கூட்டப்பின்புலத்தில் தமிழ்ப்பதாகை இல்லையே!]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக