திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம்
உலக மக்கள் அனைவர்க்கும் பொதுப்படையாக அமைந்த ‘பொதுநூல்’ என்று பெயர் பெற்றது. உலகோர் போற்றிப் புகழுவதற்குரிய ‘பொதுமறைநூல்‘ என்னும் பெருமையுடையது. மக்களின் வாழ்வியலைப் பற்றிக் கூறவந்த ‘வாழ்வியல் நூல்‘ என்னும் சிறப்புடையது. எல்லா மக்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகத் திகழக் கூடிய ‘வாழ்க்கை வழிகாட்டி நூல்’ என்னும் பெருமை பெற்றது. மக்கள் அனைவர்க்கும் அறநெறி கூறவந்த ‘அறநெறி நூல்’ என்னும் புகழ் பெற்றது. எல்லார்க்கும் அன்புநெறியை அறிவுறுத்த வந்த ‘அன்புநெறி நூல்’ என்னும் சிறப்பு பெற்றது. மக்கள் பலர்க்கும் நீதி நெறிமுறைகளைத் தெளிவுபடுத்த வந்த ‘நீதிநூல்’ என்னும் பெருமைக்குரியது. உலகோர்க்குப் பண்பாடுகளைப் புகட்ட வந்த ‘பண்பாட்டு நூல்’ என்னும் பெயர் பெற்றது. அனைவர்க்கும் பொருளியல் விளக்கம் தரவந்த ‘பொருளியல்நெறி நூல்’ என்னும் சிறப்புக்குரியது. நாட்டு மக்கள் அனைவர்க்கும் அரசியல் நெறிமுறைகளை அறிவுறுத்தவந்த ‘அரசியல் நெறி நூல்’ என்னும் பெருமை வாய்ந்தது. உலகோர்க்கு ஒழுக்க மேம்பாடுகளைக் கற்பிக்க வந்த ‘ஒழுக்க நூல்’ என்னும் புகழ் வாய்ந்தது. மக்களுக்கு இன்பவியலைப் பற்றிக் கூறவந்த ‘இன்பவியல் நெறி நூல்’ என்னும் சிறப்புப் பெற்றது. அறிஞர் பெருமக்களால், என்றும் அழியாச் சிறந்த இலக்கியமாகப் புகழுவதற்குரிய ‘பேரிலக்கிய நூல்’ என்னும் பெருமை வாய்ந்தது.
– நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக