குமரி முத்து சிரிப்பை நிறுத்தினார்!
1,000 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர்
குமரிமுத்து, நேற்று (மாசி 17, 2047 / பிப். 29, 2016) மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் அடக்கம், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
1964- ஆம் ஆண்டு வெளிவந்த ‘பொய் சொல்லாதே’ என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக
அறிமுகமானவர், குமரிமுத்து. ‘அவள் ஒரு சீதை,’ ‘நண்டு,’ ‘கோழி கூவுது,’ ‘மதுரை சூரன்,’ ‘கை கொடுக்கும் கை,’ ‘ஊமை விழிகள்,’ ‘அறுவடை நாள்,’ ‘சின்னப்பூவே மெல்ல பேசு,’ ‘மனசுக்குள் மத்தாப்பு,’ ‘இது நம்ம ஆளு,’
‘புது வசந்தம்,’ ‘சேரன் பாண்டியன்,’ ‘நண்பர்கள்,’ ‘எங்க வீட்டு வேலன்,’ இராசாவின் பார்வையிலே,’ ‘வில்லு,’ ‘ஆணழகன்’ முதலான பல படங்களில் நடித்து
இருந்தார்.
எம்ஞ்சியார், சிவாசிகணேசன், இரசினிகாந்து, கமல்ஃகாசன், விசய், அசித்து போன்ற புகழுறு
கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வந்த படங்களையும் சேர்த்து 1,000 படங்களுக்கு மேல் நடித்தவர், இவர்.
மாரடைப்பால் மரணம்
இவருக்கு இதயக் கோளாறு இருந்து வந்தது; கடந்த 27- ஆம்நாளன்று திடீர் என்று
மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நேற்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிரப் பண்டுவம் அளித்தும் பலன்
அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல், சென்னை நந்தனம்
புதுக்கோபுரத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது
உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர்
பொன்வண்ணன் மற்றும் நடிகர் சங்கப் பொறுப்பாளர்கள் குமரிமுத்துவின் உடலுக்கு மாலை
வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
உடல் அடக்கம்
அவருடைய உடல்
அடக்கம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை மந்தவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நடக்கிறது.
மரணம் அடைந்த நடிகர் குமரிமுத்துவுக்கு அகவை 78. அவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள
காட்டுப்புதூர். தொடக்கக்காலத்தில்,
சின்ன சின்ன மேடை நாடகங்களில் நடித்தார்.
பின்னர், எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில்
சேர்ந்தார். திரைப்படங்களில், இவருடைய சிரிப்பு புகழ்வாய்ந்தது. தனது சிரிப்பினாலேயே
மற்றவர்களைச் சிரிக்க வைத்தார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற இவர், தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளராக
இருந்து வந்தார். கிறித்தவ ஊழியமும் செய்து வந்தார்.
குமரிமுத்துவின் மனைவி பெயர், புண்ணியவதி. இவர்களுக்கு செல்வ புட்பா, எலிசபெத்து மேரி, கவிதா என்ற 3 பெண்மக்களும், ஐசக்கு மாதவராசன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள்.
நடிகர் சங்கம் இரங்கல்
குமரிமுத்துவின் மறைவுக்குத் தென்னிந்திய
நடிகர் சங்கம் இரங்கல் செய்தி விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
‘‘தன்னுடைய
நடிப்பாலும், மறக்க முடியாத தனிப்பட்ட சிரிப்பாலும்,
எங்களுடன் பயணித்த அண்ணன் குமரிமுத்து எங்களை
விட்டு பிரிந்தமைக்காக மனம் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும்,
சுற்றத்தாருக்கும் எங்கள் ஆறுதலைத்
தெரிவிக்கின்றோம்.
இந்த நேரத்தில் அவர் சங்கத்துக்கு ஆற்றிய அரும்பணிகளையும், சங்க நலத்துக்காகக் குரல் கொடுத்துப் போராடியதையும், நியமனச் செயற்குழு உறுப்பினராக எங்களோடு செயல்பட்டு
முன்னேற்றத்திற்கான பல்வேறு அறிவுரைகளை
வழங்கியதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
நிறைவு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர்
சங்கத்துக்காகக் கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவருக்குச் செலுத்துகின்ற
மலர்வளையமாகும்.’’
குமரிமுத்து மறைவுக்கு இரங்கல்
தெரிவித்து தி.மு.க. தலைவர் கலைஞர்
கருணாநிதி கூறியிருப்பதாவது:–
தி.மு.க.வின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத்
தலைவரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்,
குணச்சித்திர நடிகருமான குமரிமுத்து இன்று
காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன்.
சில நாட்களுக்கு முன்புதான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து,
மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் பெற்று வீடு
திரும்பி விட்டதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற
உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார்.
2014– ஆம் ஆண்டு
செட்டம்பர் திங்களில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், என் பெயரால் வழங்கப்படும், கலைஞர் விருது
குமரிமுத்துவுக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணாவின்
சொற்பொழிவினைக் கேட்டு, கழகத்தின் அன்பராக மாறியவர் இவர். திரைத்துறையில் புகழ்
பெற்று விளங்கிய நடிகர் நம்பிராசனின் உடன்பிறந்த தம்பி என்பதால் நடிகவேள்
எம்.ஆர்.ராதா தனது நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார்.
இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப் படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் “கலைமாமணி”, “கலைச் செல்வம்”, ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்குப் “பெரியார் விருது” வழங்கிச் சிறப்பித்துள்ளது.
குமரி முத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும்,
நண்பர்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி :
தினத்தந்தி
[மிகச்சில முறை நான் கலைமாமணி குமரிமுத்துவைச் சந்தித்துள்ளேன். ஒரு
முறை நிகழ்ச்சி ஒன்றில் என்னருகே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது மதுரையில் தமிழீழக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாகப் பேச்சு வந்தது.
தமிழ்ஈழம்பால் தான் கொண்டிருந்த நல்லுணர்வை வெளிப்படுத்தினார்.
நான் பொங்கல் விழா நடத்திய ஒரு முறை, பெரிய பதாகையில் 'தமிழில் கையொப்பமிடுவோம்' என எழுதி வைத்து ஆர்வலர்களை
ஒப்பமிடுமாறு வேண்டியிருந்தேன். இதில் கையொப்பம் இடவே நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகக்
கூறிக் கையொப்பமிட்டார். நல்ல
தமிழுணர்வாளர் நம்மை விட்டு நீங்கியது பெரிதும் வருத்தத்திற்குரியதே!
இப்பொழுதும் தலைமைச்செயலகத்தில்
பணியாற்றிக் கொண்டே திரைப்படங்களில்
நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் ஒருவர், நாடகம் ஒன்றில், தான் சிரித்ததைப் பார்த்து, "இதை நான் பயன்படுத்திக் கொள்ளட்டுமா" எனக் கேட்டு மெருகேற்றித் தன்
முத்திரையாக அச்சிரிப்பை மாற்றிக்கொண்டார் எனச் சொல்லியுள்ளார். சிரிப்பின் மூலம்
யாராக இருந்தாலும் அச்சிரிப்பிற்கான முத்திரை பதித்த வித்தகர் குமரி முத்து, தன் சிரிப்பை நிறுத்திக்கொண்டாரே! - இலக்குவனார் திருவள்ளுவன்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக