electronic_museum02
  வலைத்தளத்தின் மூலம் பல செய்திகளை, ஒலியிழைகளை, காணொளியிழைகளைப் பரிமாறிக்கொள்கிறோம். இதன் படிமுறை வளர்ச்சியாக மின்வழி அருங்காட்சியகம் உருவமைக்கப்பட்டுச் செயற்பட்டுவருவது இணையத்தளத்தின் மற்றொரு திருப்புமையமாகும்.
  அருங்காட்சியகத்தில் அரிய செய்திகளையும் காட்சிகளையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உருமாதிரிகளையும் பார்வையிடுகிறோம். விளக்கங்களை வழிகாட்டுநரோ அல்லது ஒலிபெருக்கியோ வழங்கும். இதுபோன்றே மின்வழி அருங்காட்சியகத்தில் காட்சிகளையும் ஒலியிழைகளையும் காணொளியிழைகளையும் சேமித்துத் தொகுத்து முறைமைப்படுத்தித் திட்டமிட்டு ஒரு நிகர்நிலைக் காட்சிக்கூடம் அமைக்கலாம் என்னும் கோட்பாடே மின்வழி அருங்காட்சியகத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. வரலாற்று நிகழ்ச்சிகளை, நம் கடந்தகாலத்தில் ஏற்பட்ட திருப்புமையங்களை இத்தகைய வகையில் திட்டமிட்டுத் தொகுத்து மின்வழி அருங்காட்சியகமாக நடத்தலாம். சான்றோர்களை, கவிஞர்களை, விடுதலை இயக்கப் போராளிகளை, எழுத்தாளர்களைப் பற்றிய அருங்காட்சியகங்கள் பலவற்றை இவ்வாறு நடத்தமுடியும்.
  எடுத்துக்காட்டாக, பாரதியாரைப் பற்றி ஒரு மின்வழி அருங்காட்சியகம் நடத்தத் திட்டமிட்டால், அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் திரைப்பட நறுக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிப்பதிவுகள், கல்விநிறுவனங்களில் நடத்தப்பட்ட நாடகங்களின் காணொளிச் சுருள்கள், இசைக் கலைஞர்களால் பல்வேறு பண்களில் பாடப்பட்ட அவரது பாடல்களின் ஒலியிழைகள், இவற்றோடு அவர் பற்றிய வலைப்பதிவுகள், வலைப்பூக்கள், இணையதள இணைப்புகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து நமது விளக்கத்துடனும் வழிகாட்டுதலுடனும் தொடுத்து வழங்கவேண்டும். நம் அருங்காட்சியகம் வருவோர் நம் படவிளக்கத்துடன் கூடிய இணைப்புகளைக் கண்டு தேவைப்பட்டவற்றைச் சுட்டியைக்கொண்டு சொடுக்கிக் காண்பர். இங்கே பலரது உழைப்பையும் ஒருங்கு திரட்டி ஒருமுகப்படுத்தி நாம் தொகுத்துவழங்குவதால் நமது ஒரு மடங்கு உழைப்பில் நூறு மடங்கு விளைவினை உருவாக்கமுடிகிறது.
  வரலாற்றுநிகழ்ச்சிகளையும் மீட்டுருவாக்கம் செய்யலாம். தண்டி உப்பு அறப்போர், ஆகத்துப் புரட்சி போன்று நிறைய நிகழ்ச்சிகளை இன்றைய தலைமுறையினர்க்குச் சுவைபடத் தெரிவிக்க இத்தகைய மின்வழி அருங்காட்சியகங்கள் உறுதுணையாக விளங்கும்.
  இவை தவிர ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் உள்ள அத்துணை அருங்காட்சியகங்களைப் பற்றிய தகவல்களையும் திரட்டி ஒரே மின்காட்சியகத்தில் அமைத்து, அந் நாட்டில்/மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்வோர்க்கு வழிகாட்டியாகவும் ஒரு மின்வழி அருங்காட்சியகத்தை உருவாக்கலாம். அருகிவரும் நாட்டுப்புறக்கலைகளைப் பற்றியோ மக்கள் மறந்துவிட்ட தலைவர்களை, சான்றோர்களை நினைவுகூரும் வகையிலோ மின்வழி அருங்காட்சியகங்கள் நடத்தலாம். சுருக்க்கமாகச் சொன்னால், ஒரு நாட்டு அரசு செய்யவேண்டிய பணியை அந்நாட்டுக் குடிமக்கள் மிகக் குறைந்த பொருட்செலவில் அமைக்கலாம். உலகெங்கும் பார்வையிடுவதனால் இதன் பயன் மிக மிகப் பெரியது. இங்ஙனம் சிறப்புற நடந்துவரும் மின்வழி அருங்காட்சியகங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துத் தமிழ்நாட்டில் தகவல் புரட்சியை மேலும் விரிவுபடுத்தத் தூண்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
– முனைவர் மறைமலை இலக்குவனார்vizhaa-caldwell200-12
– தமிழ் இணைய மாநாடு 2010