சங்கத்தில் மிகப்பல பெண்பாற்புலவர்கள்
இருந்திருக்கிறார்கள் என்பது மிக்க வியப்பிற்குரியது. இவர்கள் பல்வேறு
குலத்தொழில் உடையவர்களாகவும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில்
இருந்தவர்களாகவும் இருப்பது அதனிலும் அதிசயத்திற்குரியது. அக்காலத்தில்
தொழிலையொட்டியே சமுதாயம் வகுக்கப்பட்டிருந்தது. என்றும், பிற்காலத்தில்
சாதி வேறுபாடுகள் தோன்றின என்றும் தோன்றுகிறது. இயற் புலவர்கள்
இசைப்புலவர்கள், நடனப் பெண்கள் ஆகியோர் அரசு குடும்பத்திலும் இருந்தனர்.
எளிய தொழிலாளிகள் இல்லத்திலும் தோன்றினர். பூதப்பாண்டியன் தேவி
பெருங்கோப்புக்கொண்டு என்ற சங்க காலப் பெண்புலவர் பாண்டியனின் அரசமாதேவி;
ஆதிமந்தி என்பாள் சோழ மன்னனின் திருமகள்; நடனத்தில் வல்லவளாக அவள் தன்னை
“ஆடுமகள்’ எனத் தன் பாடலில் குறிப்பிடுகிறார். பாரி மகளிர், பாரி என்ற
சிற்றரசனின் செல்வ மக்கள்; குறமகள் இளவெயினி, குறமகள் குறியெயினி என்னும்
பெண்பாற் புலவர்கள் வேட்டுவக் குலத்தில் தோன்றியவர்கள்.
வெண்ணிக்குயத்தியார் என்பவர் குயவர் காலத்தில் பிறந்தவர். பிற்காலத்தில்
இக்குலத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த குலத்தவர் என்று சமயம் இழிக்க
நேர்ந்தது. நம் நாடு செய்த தவக்குறைவேயாம். இக்காலத்தில், இந்நிலை
மாறும்பொருட்டு அரசாங்கம் பெருமுயற்சி எடுத்து அக்குலத்துவர்களுக்குச்
சிறப்புச் சலுகைகள் கொடுத்து ஊக்கி வருதல் பாராட்டுக்குரியதாகும். காக்கைப்
பாடினியார், ஒளவையார் ஆகியோர் இயற்றமிழில் மிக்க புகழ் வாய்ந்தவர்களாக
இருந்தனர். இயலும், இசையும் ஒன்றோடொன்று இணைந்து விளங்கியதாகத் தெரிகிறது.
– முனைவர் சேலம் செயலட்சுமி: சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக