தமிழில் முதல் இடை, கடை, என
முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி பஃறுளி
நாடுகளிலமைந்த தென்மதுரையிலும், இடையது அதே இடத்தில் கவாடபுரத்திலும்,
மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு
பெற்றிருந்தன என்பதும் நெடுநாளைய தமிழ்நூல் மரபு.
ஒரு சாய்பின்றி ஆய்பவர்கட்குச் சங்ககால
வாழ்வின் தன்மை மலைமேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில்
இயற்றப்பட்ட கடைச் சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு,
பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை
குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில் ஒரு சிறு செய்யுள் நூறு பெரிய
புராணத்துக்கும் ஆயிரம் கம்ப இராமாயணத்துக்கும் மேம்பட்டது என்பது யாவரும்
அறிந்ததே.
கடைச்சங்க இலக்கியத்தில் காணப்படும்
வரலாற்றுச் செய்திகள், இலக்கிய முறை, மொழிநிலை, பண்பாடு, கலைவளம் ஆகிய
அனைத்தும் பிற்காலத் தமிழிலக்கியம் எதனினும் காணப்படாத புதிய உலகம் ஆகும்.
இதனை இன்று மறுப்பவர்களும் மிகக் குறைவு. கடைச் சங்கக்காலத்ததாயினும்,
கடைச் சங்க நூல்களுள் சேராத சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் மூலமும்
இடைச் சங்க நூல் எனப்படும் தொல்காப்பிய மூலமும் புறநானூறு, முத்தொள்ளாயிரம்
முதலியவற்றின் மூலமும் நாம் அறியும் மொழி, கலைப்பண்பாடுகள் கடைச் சங்க
நூல்களில் காணாப் புது உலகமேயாகும். எனவே, இடைச்சங்க வாழ்விருந்ததும்
மெய்ம்மையே என்னலாம். மேலும், அடியார்க்கு நல்லார், பெருங்கதை எழுதிய
கொங்குவேள் ஆகியவர் காலம்வரை இடைச் சங்க நூல்களான குருகும் பெருநாரையும்
வெண்டாளியும் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவற்றைக் கற்றே கொங்குவேள்
பெருங்கதை யாத்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். பெருங்கதை மொழி
வழக்கும் செய்யுள் வழக்கும் கடைச்சங்கத்தின் வழக்கின் வேறாயிருப்பதை
முனைவர் உ.வே.சா.அவர்கள் எடுத்துக்காட்டி இக்கருத்தை வலியுறுத்துகிறார்.
உயர்திரு வையாபுரி அவர்கள் வெளியிட்டுள்ள புறத்திரட்டிலும் உரைகளின்
மேற்கோள்களிலும் வரும் இறந்துபட்ட நூல்களில் பெயர்களும் செய்யுள்களும் தலை
இடைச்சங்க நூல்களை முடிவுக்கும் பிற நூல்கள் முடிவுக்கும் சான்று பகரும்.
– பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக