vaanalai_valarthamizhmandram01

கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்: துபாயில் கண்ணதாசன் விழா- திருவாட்டி சுவேதா

         கலைமானிற்காக ஆராரோ பாடிவிட்டு அத்தாலாட்டிலேயே கண்ணயர்ந்துவிட்ட நம் கவியரசரின் 89வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழின் சூன் மாத நிகழ்ச்சி(ஆனி 01, 2046 / சூன் 12, 2015) “காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்” என்ற தலைப்பில் கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் ஒன்பான்மணிகளால் (மாணிக்கங்களால்) தொடுக்கப்பட்ட மாலையாக அமைந்தது.
        முதலாவது மணி,   இளம் அகவையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் நிறைந்த செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்து- நம் தமிழன்னைக்கிட்ட வைடூரிய அட்டிகையாய் மிளிர்ந்தது.
       இரண்டாவது மணி, திருமதி நர்கீசு பானு தனது மாணிக்கச் சொற்களால் வருகை தந்த அனைவரையும் அன்பான தொனியில் அழகோவியமாய் வருணித்த வரவேற்புரை.
மூன்றாவது மணி திரு.சியாவுதீன் பத்து ஆண்டுகளாய்த் தொடர்ந்து தன் அயராத உழைப்பினால் அச்சிட்டு வரும் பவளமாய் ஒளிரும் தமிழ்த்தேர் என்னும் திங்களிதழ் வெளியீடு.
    நான்காவது மணியாக, மசுகட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த மூவரணி.
     முதலாவதாக மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் இந்நாள் அறிவுரைஞர் திரு.சானகிராமன் அயல்நாட்டுவாழ் இன்றைய தலைமுறையினர் எளிதாய் தமிழ் பயில உதவும் இணையதளங்கள் பற்றி தேமதுரத் தமிழில் இனிதாய் உரைத்தார்.
   இரண்டாவதாகத் திருக்குறள் தென்றல் தங்கமணி திருக்குறளைக் காலத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும் என்றார்; அனைவர்க்கும் திருக்குறள் சென்றடைய வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்ட இவர் எளிமையானப் பொருளுரையுடன் அமைந்த திருக்குறள் நாள்காட்டியை மன்றத்தினர் அனைவர்க்கும் அன்பளிப்பாய் வழங்கினார்.
   அடுத்ததாக நான்கே அகவையான இளம்புயல், செல்வன் இரிசி பிரகாசு, தங்கு தடையின்றி குழல், யாழை விட இனிய மழலையில் பராசக்தியின் உணர்ச்சி உரையையும் கௌவரவர்கள் 100 பெயர்களையும் எளிதில் கூறி அனைவர் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.
  இவர்கள் மூவரும் மசுகட்டிலிருந்து துபாய் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததில் பெருமை தமிழுக்கும் கண்ணதாசனுக்கும் காவிரிமைந்தனுக்கும் மட்டுமல்ல   வானலை வளர்தமிழ் மன்றத்திற்குமாகும். இவர்கள் வருகை, இதன் வரலாற்றில் வைரக்கற்களால் பதிக்க வேண்டிய நிகழ்வாகும்.
    ஐந்தாவது மணியானது திரு.காவிரிமைந்தன் அவர்கள் தலைமையிலான கவியரங்கம்.
 ஒரு மெழுகுவத்தி தான் எரிவதைப் பொருட்படுத்தாமல் பிறருக்காக இருளகற்றி ஒளி வீசுமன்றோ..அது போலவே இவரும் தன்னைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் உயிரையும் உடலயைும் கண்ணதாசனுக்காகவும் தமிழுக்காகவும் ஒப்படைத்துத், திறமை நிறைந்தவர்களுக்கு ஊக்கமென்னும் ஒளியை அள்ளி வீசுபவர் ஆவார்.   கவியரங்கத்தில் பங்கேற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தும் சொற்றொடர்களால் அறிமுகம் தந்து அவர்கள் கருத்தைப் பதிவு செய்தபின் அவர்களை ஆக்கபூர்வமான பாராட்டு மழையில் நனைத்துவிட்டார். நீலவண்ணனுக்குத் தாசனாய் வாழ்ந்தவனுக்கே உயிராய் வாழ்பவர் தலைமையன்றோ??
 கவியரங்க எடுத்துக்காட்டிற்குத் – திருமதி.பிரியா கதிர்வேல் அவர்கள்,” யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே…” என்ற கவியரசரின் “பலே பாண்டியா” படப் பாடலுக்கு மிக அற்புதமாய் விளக்கமளித்ததைக் குறிப்பிடலாம்.
 “இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல..” என்ற வரியை அலசும் பொழுது, கேழ்வரகு, கம்பு போன்ற சத்து நிறைந்த நம்   பரம்பரை உணவு வகைகளை விட்டு (ஊதுபத்தி), மாகி, மைதா போன்ற உடல்நலக்கேடு விளைவிக்கும் உணவு வகைகளை (பீடிகளை)நாடுகின்றோம் என்ற அற்புதமானக் கோணத்தில் கவிஞரின் வரிகளை ஆராய்ந்துரைக்க அரங்கமே கட்டுண்டது.
 ஆறாவது மணியாய்த் திகழ்ந்தது திரு.சசிகுமார் அவர்களின் தொகுப்புரை. இவரது உறுதியான தமிழ்நடை, குளிர்வான் நிலவாய் கோமேதகமான வார்த்தைகளின் ஊர்வலம்.
  ஏழாவது மணியாய் அமைந்தது திருமதி சுவேதா மீரா கோபால் வழங்கிய நன்றியுரை. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபி என்பவர் தன் வீட்டிற்குச் சென்று அபி என்ற தன் தங்கயைிடம் நிகழ்ச்சி பற்றி விவரிப்பதாய் முத்து முத்தான கற்பனை நயத்துடன் அரங்கத்தினருக்கு நன்றியுரை அளித்தார். அரங்கமே இப்பாங்கினைக் கண்டு வியந்தது.
 எட்டாவது மணியோ மஞ்சள்ஒண்மணியாய் மின்னும் சிவ ஃச்டார் பவன் திரு.கோவிந்தராசனின் விருந்தோம்பல். பத்து ஆண்டுகளாய்த் தமிழ்த் தொண்டு புரியும் புரவலர். அனைவர்க்கும் உணவு ஏற்பாடு செய்து தரும் பெரும்தகையாளர்.
  ஒன்பதாவது மணி மரகத வடிவாய் பசுமை நிறைந்த மனநிலையோடு நிகழ்ச்சியைக் கண்டுகளித்து ஆதரவளித்த கவிநேயர்கள்,, நல்லுள்ளம் படைத்த அன்பர்கள், தமிழ் நண்பர்கள் ஆகியோர்.
 இந்த ஒன்பான்மணி மாலை அணிந்த நம் கவியரசர் கண்ணதாசனோ பளபளக்கும் பேரொளியில் நிலையானவராய், அழிவில்லாதவராய் தனது சொற்களால் எந்த நிலையிலும் மரணமில்லாதவராய் மிதந்து வரும் காட்சியின் அற்புத அழகைச் சொற்களால் விவரிக்க இயலாது.
–  சுவேதா