திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில்
சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்
தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கச்
சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி
பேரூராட்சிப்பகுதி, பனங்குடி ஊராட்சி, வாழ்மங்கலம் முதலான பகுதிகளில்
சுற்றுப்புறச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்
தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கவேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள்
வேண்டுகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம்
தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழ்நிலை
பாதுகாப்பு -மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு சட்டங்கள்
இயற்றப்பட்டுள்ளன. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசின்
சார்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சுற்றுப்புறச்சூழலுக்குப் பாதிப்பை
ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்குப் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. நீர்,
காற்று, நிலத்தடி நீர் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
தொழிற்சாலைகளை முறைப்படுத்த பல்வேறு சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
வேதியியல் துயர்நேர்ச்சி(விபத்து)கள்,
நெகிழிப்பொருள் உற்பத்தி – விற்பனை தொடர்பாகவும் சட்டங்கள் உள்ளன.
இவற்றுள், இந்திய வனச்சட்டம்(1927), நீர்(மாசுத் தடுப்பு-கட்டுப்பாடு)ச்
சட்டம் (1974), நீர்பாதுகாப்புச்சட்டம்(1978), காற்று (மாசுத் தடுப்பு
-கட்டுப்பாடு)ச் சட்டம் (1981),
சுற்றுப்புறச்சூழல்(பாதுகாப்புச்)சட்டம்(1986), வனப்பாதுகாப்புச் சட்டம்
(1986), பெருங்கேட்டுக்கழிவுகள் கையாளுதல்-மேலாண்மைச்சட்டம்(1989)(
Hazardous waste Handling and management act of 1989), உயிரியல்
பன்முகத்தன்மைச் சட்டம்(2002), வன உயிரிகள்
(பாதுகாப்புத்)திருத்தச்சட்டம்(2002), தேசியப்பசுமைத் தீர்ப்பாயச்
சட்டம்(2010), ஒலி மாசுச்சட்டம், மின்னணு கழிவு பற்றிய சட்டம் முதலானவை
குறிப்பிடத்தக்கனவாகும்.
இச்சட்டங்கள், தமிழகத்தில் குறிப்பாக
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் நிலம், நீர்,
காற்று ஆகியவை மாசுபட்டு பொதுமக்களுக்கும், உயிரினங்களும் நாளுக்கு நாள்
பாதிப்பு ஏற்படுகிறது.
இவற்றைத்தவிர தொழிற்சாலைகளில் பணிபுரியும்
தொழிலாளர்களின் உயிர்களுக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும்
என்றும், தொழிற்சாலைகளின் இருந்து கழிவுகளை வெளியேற்ற போதிய வடிகால்கள்
அமைக்கப்படவேண்டும் எனவும் பொதுமக்களைக் காப்பாற்றும் வண்ணம்
காப்பீட்டுத்திட்டம் எனவும் பல விதிகள் உள்ளன. மேலும் தொழிற்சாலைகளில்
இருந்து வெளியேற்றப்படும் மாசடைந்த காற்று, தொழிற்சாலைகளில் இருந்து
வெளியேறும் நுண்துகள்களால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில்
பட்டு அவர்கள் கண்கள் பாதிப்படைவதோடு மட்டும் இல்லாமல் எதிரே வரும்
வாகனத்தின் மீது மோதி உயிரிழக்கின்றனர்.
இவ்விதிகளைப் பயன்படுத்தாமல்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரைப் பொதுமக்கள் பயன்படுத்தும்
ஆறுகளில் இரவோடு இரவாக விட்டுவிடுகின்றனர். இதனால் வேதியியல் பொருட்கள்,
நெகிழிக் கழிவுகள் போன்ற இன்னும் பல கழிவுகளால் நீரில் வாழ்கின்ற
உயிரினங்கள் பாதிப்படைகின்றன.
எனவே சுற்றுப்புறச்சூழலுக்குக் குந்தகம்
விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும்
அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை வழியிலான நடவடிக்கை
மேற்கொள்ளவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அகரமுதல 84, ஆனி 06,2046/ சூன் 21, 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக