65manjalaaru-fishselling

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி

மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு ஒரு பங்கும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மீன்வளத்துறைக்குக் கொடுக்கப்படும் மீன்கள் புதுக்கல்(கிலோ) 120 உரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
  இந்த மீன்களை வாங்குவதற்கு அதிகாலையில் இப்பகுதி மக்கள் வில்லை வாங்கவேண்டும். வில்லை மூலம் வரிசைப்படி மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு விற்கப்படும் பதிவுவில்லைகளை வணிகர்கள் மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.
  வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு மீன்களை வணிகர்கள் மொத்தமாக வாங்குவதால் பொதுமக்கள் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும் நல்ல சாதியுள்ள மீன்களையும், விலை உயர்ந்த மீன்களையும் மீன்வளத்துறையினரும், மீன்வளத்துறை கூட்டுறவுச் சங்கத்தைச்சேர்ந்தவர்களும் கூட்டு சேர்ந்து கூடுதலான விலையில் வணிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
  இவ்வாறு விற்கப்படும் மீன்களை அரசின் கணக்கில் காட்டாமல் போலியான கணக்கைக் காட்டி அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கண்மாய்களில் தனியார்கள் குத்தகைக்கு எடுக்கப்படும் மீன்கள் வருடத்திற்கு 10 முதல் 20 இலட்சம் வரை ஆதாயத்தில் இயங்கும்போது மஞ்சளாறு அணையில் மட்டும் ஒவ்வொர் ஆண்டும் விற்பனை விகிதம் சரிந்தே உள்ளது எனக் கணக்கு காண்பிக்கிறார்கள்.
  எனவே மாவட்ட நிருவாகம் மஞ்சளாறு அணையில் மீன் விற்பனை முறைகேட்டை கண்டறிந்து மீன்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
vaigai-aneesu65