இலங்கையை க் காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா சதி: இராமதாசு
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையைக்
காப்பாற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக சதிசெய்வதாக பாமக தலைவர்
ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான
முறையில் படுகொலை செய்யப்பட்டது, தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு
ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களுக்காக இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி
வருகின்றனர். ஆனாலும் சில வல்லரசுகளின் துணையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற
விசாரணையிலிருந்து தப்பி வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக்
கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை
நடத்தி தவறு செய்த ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்காத சிங்கள அரசு, ஒருபுறம் போர்
குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை
வழங்கிவருகிறது; மற்றொருபுறம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களை
அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுவருகிறது.
இதற்காக இலங்கை அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீது
போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற
வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இலங்கை அரசைக் காப்பாற்ற
இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும்
செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர் நலனை விட இலங்கையில் உள்ள இயற்கை வளங்கள் மீதும், அந்நாட்டு
கடற்பரப்பு மீதும் அதிக பாசம் வைத்துள்ள அமெரிக்கா, போர்
குற்றச்சாற்றுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன்,
அந்நாட்டிற்கு எதிராக, இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்
மென்மையான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில்
நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டிக்கும் வகையில் இத்தீர்மானம்
வடிவமைக்கப்படும் போதிலும், அதில், போர்க் குற்றச்சாற்றுகள் குறித்து
விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு மேலும் சில ஆண்டுகள் அவகாசம் கொடுக்க
வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் என்றும், இதன்மூலம் இலங்கை மீதான
போர்க்குற்றச்சாற்றுகளை நீர்த்துப் போகச் செய்வது தான் இந்தியா மற்றும்
அமஎரிக்காவின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் தில்லி வந்த
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீசிடம், போர்க்
குற்றச்சாற்றுகளிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதாக இந்திய அரசுத் தரப்பில்
உறுதி அளிக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கைப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும்
நிலையில், அந்நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு உண்மையான
முயற்சிகளை நடத்தாமல், சொந்த லாபத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகள் செயல்படுவதும், அதற்கு இந்தியா துணை போவதும் கண்டிக்கத் தக்கது.
இலங்கைக்கு எத்தனையோ வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அது திருந்துவதற்கோ
அல்லது வருந்துவதற்கோ அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, இனியும்
அந்நாட்டிற்கு அவகாசம் தராமல் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் , இலங்கை மீது உடனடியாக போர்க்குற்ற
விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவருவது தான் சரியானதாக
இருக்கும்.இதை செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வரும் பிப்ரவரி ஒன்றாம்
தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து,
அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்..
- என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக