திங்கள், 28 ஜனவரி, 2013

நேதாசி மறைவில் மருமம்: உண்மையை அறிய அரசு முயலவில்லை

நேதாசி மறைவில் மருமம்: உண்மையை அறிய அரசு முயலவில்லை



சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திபபோஸ் மறைவின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள அரசு முழுமையாக முயற்சிக்கவில்லை என்று அவரது மகள் அனிதா போஸ் கூறியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து தீவிரமாகப் போராடிய நேதாஜி, 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஜப்பான் செல்லும்போது தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உயிரிழக்கவில்லை என்ற வாதமும் உள்ளது. இதனால் அவரது மறைவு குறித்து இப்போது வரை மர்மம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவரது மகள் அனிதா போஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: நேதாஜி மாயமானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன்களுக்கு மத்திய அரசு எந்த அளவு ஆதரவு அளித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. 1947ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் விசாரணைக் கமிஷனை தைவானுக்கு சென்று விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
3ஆவதாகவும், இறுதியாகவும் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனுக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை அரசு அளிக்கவில்லை. இந்தியாவில் தொடர்ந்து அமைந்த பல்வேறு அரசுகளும் இதேபோன்று முழுமையாக முயற்சி எடுக்காத போக்கினையே கையாண்டன என்றார்.
நேதாஜி விமான விபத்தில் பலியானார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, "நேதாஜி கடைசியாக விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் போது நேரில் கண்ட சாட்சியாக இருந்த பலரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன். முக்கியமாக ஜப்பானைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தேன். விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி பயணம் செய்தார் என்று அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர். எது எப்படி இருந்தாலும் அவர் இனியும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை' என்று அனிதா போஸ் கூறினார்.
நேதாஜி கடைசியாக விமானப் பயணம் மேற்கொண்டபோது அவருக்கு 48 வயது. நேதாஜி மறைவு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட முதல் இரு கமிஷன்களும் விமான விபத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்தையே தெரிவித்தன. ஆனால் 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முகர்ஜி விசாரணைக் கமிஷன், நேதாஜி இறந்ததாகக் கூறப்படும் அன்றைய தினம் தைவானில் விமான விபத்து ஏதும் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை என்று கூறியது. இந்த கமிஷனின் இறுதி அறிக்கை 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிராகரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக