ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தன்னம்பிக்கையின் அடையாளம்!


சொல்கிறார்கள்

விசைப்படகில்  கதிரொளி  மின்னாற்றல்!


தூத்தூர், ஆழ்கடல் மீன்பிடிப்பாளர் சங்க நிர்வாகி வின்சன்ட் ஜெயின்: என் ஊர், கன்னியாகுமரி மாவட்டத்தின், தூத்தூர் மீனவ பகுதி. தினமும், 580 விசைப் படகுகளில், மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்குச் செல்வர். விசைப்படகுகளுக்கு டீசல் தான் முக்கிய எரிபொருள்.விசைப்படகில், 16 மின் விளக்குகள் இருக்கும். இரவு நேரங்களில், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது, மின் விளக்குகள் இருந்தால் மட்டுமே, எளிதாக இருக்கும். இரவில் மின் விளக்குகளின் தேவை அதிகரிப்பதால், விளக்குகள் எரிவதற்கான பேட்டரியை, சார்ஜ் செய்ய, எப்போதும், இன்ஜினை இயக்கியபடி இருக்க வேண்டும்.படகு ஓடாத நிலையில், டீசல் அதிகமாக செலவானது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, நாள் ஒன்றுக்கு, 100 லிட்டர் டீசல் செலவானது. தினமும் டீசல் விலை உயர்வதாலும், நஷ்டம் ஏற்பட்டது. இதற்கான மாற்று சிந்தனையில் ஏற்பட்டதே, "சோலார்' மின் சக்தி.சோலார் பேனல்களை, சோதனை முறையில் பொருத்திப் பார்க்க, முடிவு செய்தோம். ஒரு மீனவரின் விசைப்படகில், 1000 வாட் மின் திறன் கொண்ட, சோலார் தகட்டைப் பொருத்த, சோலார் எனர்ஜி கம்பெனியும், தொண்டு நிறுவனமும் உதவின.கடந்த நவம்பரில், சோதனை முறையில் முதன் முறையாக, மீன் பிடிக்க சென்றனர். இரவு நேரங்களில் இன்ஜினை இயக்காமல், சோலார் மூலம், பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை, விளக்குகள், ஜி.பி.எஸ்., கருவி, ஒயர்லஸ் என, மின் சாதனங்களை இயக்க பயன்படுத்தினர். இந்த விசைப்படகிற்கு, நாள் ஒன்றுக்கு, 70 லிட்டர் டீசல் மட்டுமே செலவானது. டீசல் பயன்படுத்துவதால் வெளியாகும், கார்பன் -டை- ஆக்சைடு நச்சு வாயு, படகில், "சோலார் பேனல்' பயன்படுத்தியதால் வெளியாகவில்லை.அனைத்து படகிலும் சோலார் தகட்டை பயன்படுத்தி, டீசலை செலவைக் குறைப்பதன் மூலம், தினமும் பல லட்சம் கிலோ கார்பன் -டை- ஆக்சைடு நச்சு வாயு வெளியேறுவதை தடுத்து, புவி வெப்பமடையும் ஆபத்தை குறைக்கும். விசைப்படகின் அனைத்துச் செயல்பாடுகளையும், சோலார் மின் சக்தி மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தினால், டீசலை முற்றிலும் ஒழித்து, அதிக லாபம் ஈட்டலாம்.

தன்னம்பிக்கையின் அடையாளம்!

உணவிற்காக சதுரங்க விளையாட்டை கற்று, சர்வதேச சாம்பியனான, ஆப்ரிக்க கண்டத்தின், உகாண்டா நாட்டைச் சேர்ந்த சிறுமி பியோனா முட்டேசி: எல்லா வளங்கள் இருந்தும் நோய், வறுமை, அறியாமை நீங்காத ஆப்ரிக்காவிலேயே, மிகவும் பின்தங்கியது, என் தாய் நாடான உகாண்டா. தெருக்களில் சாக்கடை ஓடும், காத்வே என்ற ஊரில் வளர்ந்தேன்.தந்தை, எய்ட்ஸ் நோயில் இறந்த போது, எனக்கு, 3 வயது. சிறு குடிசை வீட்டில், அம்மா, தங்கையோடு பல நாட்கள், பட்டினியோடு வாழ்ந்தேன். 2005ம் ஆண்டு, உணவிற்காக தெருவோரம் சுற்றியதில், சில குழந்தைகள், கறுப்பு வெள்ளை கட்டங்களில், ஏதோ விளையாடுவதை பார்த்தேன்.அங்கு, ராபர்ட் கடேன்டா என்பவர், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உணவளித்து, செஸ் மூலம் கல்வி கற்று தரும், தொண்டு நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு வேளை உணவுக்காக அங்கு சேர்ந்து, ஆர்வமுடன் செஸ் கற்றேன். ஒரே ஆண்டில், செக்மேட் வைத்து, பயிற்சியாளரை வென்றேன்.திறமையை அறிந்து, போட்டிகளில் விளையாட உதவினார். அழுக்கு உடையும், பரட்டை தலையுமாக இருந்ததால், என்னுடன் விளையாட அனைவரும் மறுத்தனர். எப்படியோ, ராபர்ட் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். அதிரடியான காய் நகர்த்தலின் மூலம், அனைவரின் கவனத்தை ஈர்த்து, இரண்டே ஆண்டுகளில், உகாண்டாவின் ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றேன்.கல்வி அறிவு இல்லாதலால், லீக் சுற்று, இறுதிப் போட்டி, ரஷ்யாவில் நடைபெற்ற, சர்வதேச ஒலிம்பியாட் போட்டி என, பயிற்சியாளர் சொல்லும் போது மட்டும் விளையாடுவேன். பிரபல டிஸ்னி நிறுவனம், என் வாழ்க்கையை திரைப்படமாக்க, ஒப்பந்தம் செய்து ள்ளது. என்னைப் பற்றிய, "குயின் ஆப் காத்வே' புத்தகம், உகாண்டாவின் ஒடுக்கப்பட்ட ஏழைப் பெண்களுக்கு, தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளது.தற்போது, பல நாட்டு தொண்டு நிறுவனங்கள், என் செஸ் திறமையை கண்டு, கல்வி கற்றுதர முன் வந்துள்ளனர். நன்கு படித்து மருத்துவராவதே என் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக