வியாழன், 31 ஜனவரி, 2013

பசுமைப் புரட்சி செய்யலாம்!

பசுமைப் புரட்சி செய்யலாம்!
 

புதிய நீர்ப்பாசன த் திட்டத்தை ச் செயல்படுத்திய, ஓய்வு பெற்ற பொறியாளர் பெரியண்ணன்: நான், சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி கிராமத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர்.
கடும் வறட்சியால், விவசாயிகளின் வேளாண் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. மின்சார மோட்டார் மூலம், நிலத்தடி நீரை பயன்படுத்தலாம் என்றால், 1,500 அடிக்கு கீழேயும் நீர் கிடைக்கவில்லை. பொறியாளர் என்பதால், வறட்சியை நீக்க என் கிராம விவசாயிகளை திரட்டி, புதிய நீர்பாசன திட்டத்தை ஏற்படுத்த முயற்சித்தேன். கிராமத்திலிருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள காவிரி கிழக்குக் கால்வாயில், தண்ணீரை பம்ப் செய்து, விவசாயிகள் பயன்படுத்தும் திட்டத்திற்கு, பொதுப்பணித்துறை அனுமதி அளிக்கவில்லை. அதனால், அருகேயுள்ள கிராமங்களில், கிணறு வெட்டுவதற்கு முடிவு செய்தோம். இயற்கையான ஊற்றுகள் அதிகம் இருந்ததால், கிணறு வெட்டுவது எளிதாக அமைந்தது.

திட்டமிட்டபடி மிகப்பெரிய ஊற்று கிணறு வெட்டினோம். 480 மி.மீ., விட்ட அளவுள்ள பைப் லைன் மூலம், எங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க முடிவெடுத்தோம். எங்கள் வெள்ளரிவெள்ளி கிராமத்தில்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒன்றே கால் அங்குலம் விட்டம் கொண்ட, 150 பைப்களில், 150 ஏக்கர் நிலத்திற்கு, நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. யாருக்கும் கூடுதல் குறைவின்றி, 1 கி.மீ., தொலைவில் உள்ளவருக்கும், நவீன தொழில் நுட்பத்தில் நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கேழ்வரகு, கம்பு என, மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தவர்கள், தற்போது கரும்பு, கடலை, வாழை என, பணப்பயிர்களை சாகுபடி செய்து, லாபம் ஈட்டுகின்றனர். 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தை, நபார்டு வங்கி அகில இந்திய அளவில், இரண்டாவது சிறந்த பாசன திட்டமாக தேர்ந்தெடுத்து, 5 லட்ச ரூபாய் பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினர். தமிழகத்தின் மற்ற விவசாயிகளும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் பசுமைப் புரட்சி செய்ய முடியும். தொடர்புக்கு: 99945 66600

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக