திங்கள், 12 செப்டம்பர், 2011

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

தினமலர் நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 8, 2011



ஜெனீவா: “இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் நம்பகத் தன்மை இருக்கும் என, எதிர்பார்க்க முடியாது. அதனால், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, மற்றொரு சர்வதேச விசாரணையை ஐ.நா., மேற்கொள்ள வேண்டும்’ என, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில், 2009 மே மாதத்தில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரின் போது, பாதுகாப்பு வளையங்களில் இருந்த மக்கள் மீது, ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசி கொலை செய்தது. இதுகுறித்து இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, “கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுவாழ்வு’ குழு, போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து, அறிக்கை தயார் செய்துள்ளது. வரும் நவம்பர் மாதம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பில், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு (ஏ.ஐ.,) நேற்று வெளியிட்ட 70 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இறுதிக் கட்ட போரில், இருதரப்பாலும் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழு நடத்திய விசாரணையின் விளைவாக நீதி நிலைநாட்டப்படும்; உண்மை வெளிவரும் என, சர்வதேச சமூகம் ஏமாந்து விட வேண்டாம். இறுதிப் போரில் மக்கள் அதிகளவில் பலியானதற்கு, ராணுவத்தின் கொத்துக் குண்டு வீச்சுகள் தான் காரணம். இது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, அந்நாட்டில் உள்ள ஊடகங்களை அரசு மவுனப்படுத்தியுள்ளது. எதிர்ப்போரை வெள்ளை வேன்களில் கடத்தி காணாமல் போகச் செய்துள்ளது. அதனால், நம்பகத் தன்மையுள்ள மற்றொரு சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா., நடத்த வேண்டும். இவ்வாறு பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக