என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்
என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து அழுதார் மரணதண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தனின் தாயார்.மரண வாசலில் இருந்து மீண்டு நிற்கும் மூவரில், சற்று வித்தியாசமானவர் சாந்தன். சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பக்தர்கள் குழாம் ஒன்றையே சிறையில் உருவாக்கிவிட்டார்.
சாந்த சொரூபியாக வலம் வரும் சாந்தன் பேசுவது ரொம்பவும் குறைவு. பெயர் மாற்றக் குழப்பத்தால் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் இவருக்கு, ‘ஈழத்தில் இருக்கும் தாய், தந்தையர் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் கதி என்ன?’ என்றே தெரியவில்லை.
அந்தத் துயரத்தை ஜூனியர் விகடன் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருந்தார்!
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம்.
‘தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்…’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ… திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
‘எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை… உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!” என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
ஐயா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு… வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம்.
ஆனா, ஐயா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது ஐயா…”
தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ”10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் ஐயா… 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)… வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார்.
தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்… தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்…
புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, ‘அம்மா பாவம்… நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார்.
அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்… எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது… எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, ஐயா…
எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை… ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது.
வறுமை இன்னொரு பக்கம்… வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்…
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது.
இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது…
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை… 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை… வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்… (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்)
என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…
எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
ஜூனியர் விகடன்
Short URL: http://meenakam.com/?p=34807
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக