சனி, 17 செப்டம்பர், 2011

நிலநடுக்கத்தை சரியாகப் பதிவு செய்தும் பயனில்லை!

நிலநடுக்கத்தை சரியாக பதிவு செய்தும் பயனில்லை!

தினமணி நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 12, 2011


டோக்கியோ, செப்.11: ஜப்பானை மார்ச் 11-ம் தேதி உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கத்தை அரசின் வானிலை மையத்தைவிட தனியார் அமைப்பு சரியாக அளவிட்டது. ஆனால் அது தகவல் தெரிவிக்கத் தாமதம் செய்ததால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுவிட்டது.  நகாணோ என்ற இடத்தில் மட்சுஷிரோ நிலநடுக்க கண்காணிப்பு மையம் இருக்கிறது. மார்ச் 11-ல் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நிமிஷங்களுக்குப் பிறகு அங்கே அது 9.1 அலகாக ரிக்டர் அளவுமானியில் காட்டியது.  அந்த மையம் வெளிநாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பதிவு செய்வதற்கானது.  ஆனால் ஜப்பானிலேயே ஏற்பட்ட நிலநடுக்கம் அதில் பதிவான நிலையில்கூட அதை ஜப்பானிய அரசு நிறுவனங்களுக்கு சொல்லவில்லை.  அதற்கு 2 காரணங்கள். வெளிநாடுகளில் நடைபெறும் நிலநடுக்கங்களைத்தான் தங்கள் அமைப்பு பதிவு செய்ய வேண்டும் என்பதால் இதை ஜப்பானிய நிலநடுக்கத்தைப் பதிவு செய்வதற்கான அலுவலகத்தார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தது.  9.1 அலகு என்றால் மிகப்பெரிய நில நடுக்கம் என்பதால் தங்கள் கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நிலைய அதிகாரி தவறாக நினைத்துவிட்டார். மிகச் சரியாகப் பதிவு செய்திருந்தும் அவருக்கு தன்னம்பிக்கை இல்லாததால் முக்கியமான இந்தத் தகவல் அரசை எட்டவில்லை.  அதே வேளையில் அரசு நியமித்துள்ள மற்றொரு மையத்தில் இந்த நிலநடுக்கம் சரியாகப் பதிவாகவில்லை. எனவே அவர்கள் அதன் தன்மையை முதலில் குறைத்து மதிப்பிட்டு 7.9 அலகுதான் என்று அறிவித்தனர். கடலில் அலைகள் 3 மீட்டர் முதல் 6 மீட்டர் வரையில் அதாவது சுமார் 10 அடி முதல் 18 அடி வரை மட்டுமே எழும்பும் என்று எச்சரித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் சரியாக மீண்டும் கணக்கிட்டு கடலில் அலைகள் 30 அடி உயரத்துக்கு மேல் எழும்பும் என்று எச்சரித்தனர். அதற்குள் விபரீதம் நேர்ந்துவிட்டது.  ஜப்பானில் உள்ள நிலநடுக்கப் பதிவு கருவிகளின் தரம், மிகக்குறைந்த நடுக்கங்களைப் பதிவு செய்யத்தான் ஏற்றவை என்றும் மிகப்பெரிய நில நடுக்கங்கள் என்றால் கணக்கிட்டுத்தான் சொல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  வாரம் ஒரு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் நாட்டிலேயே இந்தக் குறை என்றால் நம்மைப்போன்ற நாட்டில் என்ன நடக்குமோ?  இனி தலையணை இல்லாமல் வெறும் தரையில் காதை வைத்துத் தூங்க வேண்டியதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக