சனி, 17 செப்டம்பர், 2011

வீட்டில் விளக்கேற்றாமல் வங்கதேசிகள் போராட்டம்

வீட்டில் விளக்கேற்றாமல் வங்கதேசிகள் போராட்டம்

தினமணி நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 12, 2011


டாக்கா,செப்.11: வங்கதேசத்தில் இந்திய நிலப்பகுதிகள் என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை வசித்து வந்த தங்களுக்கு வங்கதேசக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கானோர் சனிக்கிழமை இரவு வீட்டில் விளக்கேற்றாமல் இருட்டிலேயே வசித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவும் இந்த எதிர்ப்பு தொடரும் என்று அறிவித்தனர்.  நாடு சுதந்திரம் அடைந்தபோது (1947) இந்தியாவுக்கும் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலத்தைப் பிரிப்பதில் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேண்டும் என்றே சில குளறுபடிகளைச் செய்துவிட்டனர்.  அதன்படி இந்திய நிலப்பகுதி தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளைப் போல நிலப்பகுதியிலேயே பிரிக்கப்பட்டன. இதனால் வங்கதேசிகளும் இந்தியர்களும் மற்றவர் நிலப்பகுதியைக் கட்டாயம் கடந்தாக வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான சமயங்களில் மக்கள் தங்களுக்குள் அனுசரித்துப் போனாலும் ஏதேனும் முரண்பாடுகள் அரசுகளுக்குள் ஏற்படும்போது இந்த மக்களின்பாடு திண்டாட்டமாகிவருகிறது.  எல்லை காப்புப் படையினர் இவர்களைத் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யும் அவலம் அரங்கேறியது. இதைத் தீர்க்கத்தான் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றபோது இருவருக்கும் நிலப்பரப்பு இழப்பு இல்லாமல் எல்லைகளைப் பிரிக்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அப்படி வங்கதேசத்தில் சேர்க்கப்பட்ட தங்களுக்கு வங்கதேசக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி, வங்கதேசிகள் விளக்கை ஏற்று மறுத்து கிளர்ச்சி செய்தனர். இவர்கள் இதுவரை நாடற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக