திங்கள், 12 செப்டம்பர், 2011

இலங்கையில் பொதுநல மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்பு

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்பு

First Published : 11 Sep 2011 01:13:45 PM IST

Last Updated : 11 Sep 2011 01:56:30 PM IST

கொழும்பு, செப்.11: இறுதிக்கட்ட போரில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் வருகிற 2013-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ளது.இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை 2013-ம் ஆண்டு இலங்கையில் நடத்துவது தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் காரணமாக 2011-ம் ஆண்டு கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு தள்ளி வைக்கப்பட்டது.போர்க்காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், இலங்கையில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான ஒடுக்குமுறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இவ்வாறான பின்னணியில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை இலங்கையில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கி விடும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப்போகின்றது என்ற நிலையில், கூட்டம் இலங்கையில் நடத்தப்படுவது கவலை தருவதாகும்.காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதாக இருந்தால் அதற்கு முன்பு வன்னியில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உள்ளூர் மற்றும் அனைத்துலக விசாரணை நடத்த இலங்கை அரசை காமன்வெல்த் நாடுகள் கட்டாயப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக