வெள்ளி, 3 ஜூன், 2011

From delhi also: dinamani editorial about delhi edition: இனித் தில்லியிலிருந்தும்...

அருமையான நோக்கங்கள். சிறப்பாக  இவற்றை நிறைவேற்ற வாழ்த்துகள். நல்ல தமிழில் தில்லிப் பதிப்பு வெளி வரவேண்டும்; அங்குள்ளவர்களின் செய்திகளுக்கும் படைப்புகளுக்கும் முதன்மை அளிக்க வேண்டும்.  இணையப் பதிப்பிலும் இடம்பெற வேண்டும். 
பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும் அன்புடனும் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இனி தில்லியிலிருந்தும்...

First Published : 03 Jun 2011 12:40:33 AM IST

Last Updated : 03 Jun 2011 05:20:36 AM IST

தலைநகர் தில்லியிலிருந்து "தினமணி'யின் எட்டாவது பதிப்பு இன்று வெளியாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கனவாக இருந்த முயற்சி இன்று நனவாகி இருக்கிறது.தலைநகர் புது தில்லியில் பத்திரிகை அலுவலகங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட பகதூர் ஷா சஃபர் மார்க் சாலையில், தமிழில் தினமணியின் பெயர்ப் பலகையுடன் ஓர் அலுவலகம் இயங்குவதை, சாலையில் வாகனங்களில் போவோரும் வருவோரும் அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அவர்களது விழிகளில் தெரியும் வியப்பு, நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது.தலைநகர் புது தில்லியில் தமிழில் பெயர்ப் பலகையுடன் தனது அலுவலகத்தை நிறுவியிருக்கும் முதல் தமிழ் நாளிதழ் என்கிற பெருமையையும் உங்கள் தினமணி அடைந்திருக்கிறது. அந்தப் பெயர்ப் பலகையைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஏற்படும் பூரிப்புக்கு அளவே இல்லை.தினமணி தனது தில்லி பதிப்பைத் தொடங்க இருக்கிறது என்கிற செய்தியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமிடம் தெரிவித்தபோது, அவர் கேட்ட கேள்வி இதுதான்- ""தில்லியில் "தினமணி' நாளிதழின் பதிப்பை வெளிக்கொணர்வதன் நோக்கம் என்ன? இதன் மூலம் நீங்கள் அடைய இருக்கும் குறிக்கோள்தான் என்ன?''அந்தக் கேள்விக்கு பதில் தயாராகவே இருந்தது. தில்லி பதிப்பைத் தொடங்குவதற்கு எங்களுக்கு நான்கு காரணங்கள் இருந்தன. தில்லியில் தினமணியின் பதிப்பைத் தொடங்குவதன் நோக்கம் நிச்சயமாக விளம்பரங்களை வாங்கிக் குவித்து வருமானத்தைப் பெருக்குவதற்காக அல்ல என்பதில் ஆசிரியர் குழு மட்டுமல்ல, நிர்வாகமும் தெளிவான கருத்துடன்தான் இருந்து வந்தது. தில்லியில் மட்டும் ஏறத்தாழ 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், இந்தத் தமிழ்க் குடும்பங்களில் பல தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசும் வழக்கத்தையே கைவிட்டு விட்டனர். பெருவாரியான குடும்பங்களில், பள்ளியில் இந்தியையோ, ஆங்கிலத்தையோ பாடமொழியாக எடுத்துக் குழந்தைகள் படிப்பதால் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதைக்கூட விட்டுவிட்ட நிலைமை.ஆரம்பத்தில், தமது குழந்தைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதையும் படிப்பதையும் பெருமையாகக் கருதும் பல பெற்றோர்கள், அவர்கள் பெரியவர்களான பிறகுதான் தாங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழியாம் தமிழில் பயிற்சி அளிக்காமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்துகிறார்கள். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி தில்லிவாழ் தமிழர்களின் இல்லங்களில் "தினமணி' போன்ற தரமான தமிழ் நாளிதழ் ஒன்று இருப்பதுதான் என்று நாங்கள் கருதினோம்."தினமணி' நாளிதழை தினந்தோறும் பார்க்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் இது என்ன மொழி என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாதா, எழுத்துக் கூட்டித் தமிழ் படிக்கக் கற்றுக் கொள்ளாதா, தேமதுரத் தமிழில் பேசும், படிக்கும் இன்பத்தை அனுபவிக்காதா எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிடாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. "தினமணி'யின் தில்லி பதிப்பு வெளிக்கொணர்வதற்கான முதல் காரணம் இதுதான்.இரண்டாவதாக, தில்லிவாழ் தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கிறார்கள். தில்லியில் மட்டும் ஏறத்தாழ 14 தமிழ்ச் சங்கங்கள் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த தில்லிவாழ் தமிழர்களின் பிரச்னைகளை முன்னிறுத்த, இவர்களுக்காகக் குரல் கொடுக்க நிச்சயமாக தேசிய நாளிதழ்களோ, தொலைக்காட்சிச் சேனல்களோ முன்வரப் போவதில்லை. அந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர் தம் பிரச்னைகளை முன்னிறுத்தித் தீர்வு காண, தில்லிவாழ் தமிழர்களை இணைக்கும் ஒரு பாலமாக, இவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது நிகழ்வுகளை, தனிப்பட்ட சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக "தினமணி' பணியாற்ற வேண்டும் என்பதுதான் தில்லி பதிப்புக்கான இரண்டாவது காரணம்.தமிழகத்தின் குரலை தலைநகர் தில்லியில் எதிரொலிக்கவும்,தமிழர்தம் உணர்வுகளை தேசியத் தலைநகரில் பிரதிபலிக்கவும் புது தில்லி அரசியல் நிகழ்வுகளை மட்டுமல்லாமல், மத்திய அரசிடமிருந்து பெறக்கூடிய சலுகைகளையும், வாய்ப்புகளையும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வழிகோலுவதும்தான் "தினமணி' நாளிதழின் தில்லி பதிப்புக்கான மூன்றாவது நோக்கம்.செய்தி ஆசிரியர், தலைமை நிருபர் உள்ளிட்ட ஒரு முழுநேர ஆசிரியர் குழுவே "தினமணி'யின் தில்லி பதிப்பு அலுவலகத்திலிருந்து செயல்படுவதால், தேசிய ஆங்கில நாளிதழ்களுக்கு இணையாகத் தலைநகர் நிகழ்வுகள் தினமணியின் எல்லா பதிப்புகளிலும் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் இனிமேல் தலைநகரில் பிரதிபலிக்கும். பொறுப்பான பதவிகளில் இருக்கும் தலைநகர்த் தமிழர்கள் நமது பிரச்னைகளுக்குத் தீர்வு காண "தினமணி' நாளிதழின் செய்திகள் காரணமாக இருக்கும்.நாடாளுமன்றம் செயல்படும் நாள்களில், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுக்கு "தினமணி' தில்லி பதிப்பு முன்னுரிமை கொடுத்து வெளியிடும்போது, நமது மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் அந்தப் பிரச்னைகளுக்காகக் குரலெழுப்ப வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளும், மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழக அமைச்சர்களும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து, நல்லது செய்தால் அதைப் பாராட்டி மகிழ்ந்து, தவறுகள் செய்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டி தனது கடமையைச் செய்து, தமிழ்ப் பணியுடன் சமுதாயப் பணியையும் "தினமணி' இந்தப் பதிப்பின் மூலம் தமிழகத்திற்குச் செய்யும் என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். இதுதான் தில்லி பதிப்புக்கான நான்காவது காரணம்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் பத்திரிகைப் பணியில் தனது 80-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் "தினமணி' இன்று தனது 8-வது பதிப்பைத் தொடங்குகிறது. அன்றும் இன்றும் என்றும் "தினமணி' என்பது வாசகர்களின் நாளேடாகத்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் உங்களுடன் "தினமணி' ஆசிரியர் குழுவும் "தினமணி' நாளிதழின் அடுத்த கட்ட வளர்ச்சியில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது.மகாகவி பாரதி கூறுவார், "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்... வாழிய பாரத மணித்திரு நாடு'' என்று. பாரதியின் 13-வது நினைவு நாளன்று அந்த மகாகவியின் சுதந்திர தாகத்தையும் சமத்துவக் கொள்கைகளையும் பரப்பும் நோக்கத்துடன் பிறந்த நாளிதழ் "தினமணி'. அந்தப் பாதையில் பீடு நடை போட்டு இந்தியத் தலைநகரில் தடம் பதிக்கும் இந்த வேளையில், "தினமணி' நாளிதழுக்கு அடித்தளமிட்ட நிறுவன ஆசிரியர் "பேனா மன்னன்' டி.எஸ். சொக்கலிங்கத்தையும், நீண்டநாள் ஆசிரியர் - 44 ஆண்டுகள் - ஏ.என். சிவராமனையும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.மகாகவி பாரதி வகுத்த பாதையில், அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டையொட்டி தேசியச் சிந்தனையுடனும், தமிழின உணர்வுடனும் "தினமணி' நாளிதழின் அடுத்த கட்டப் பயணம் உங்கள் வாழ்த்துகளுடனும் நல்லாதரவுடனும் தொடர்கிறது...

2 கருத்துகள்:

  1. <என்னும் கருத்திற்கு உடன்பாடில்லை போலும் கருத்தினைத் தினமணி வெளியிடவில்லை.

    பதிலளிநீக்கு
  2. மீள்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு