புதன், 1 ஜூன், 2011

free supply of rice shceme: இலவச அரிசி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

மத்திய அரசு எல்லாத்திட்டங்களுக்கும் இந்திப் பெயர்களைச் சூட்டுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயரிலேயே அதனை அழைக்க வேண்டும். சில திட்டங்களுக்கான தமிழ்ப்பெயரை மத்திய அரசு ஏற்று இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும். இதில் குறிப்பிட்டுள்ள அந்தியோதயா, அன்னயோசனா என்பவை தனித்தனித்திட்டங்கள். ஏழையர் திட்டம் என்றும்   எளியோர் திட்டம் என்றும் தமிழில் குறிப்பிட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

First Published : 01 Jun 2011 11:21:59 AM IST

Last Updated : 01 Jun 2011 12:44:11 PM IST

சென்னை, ஜூன்.1: குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.அரிசி பெறத் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே இலவச அரிசித் திட்டத்துக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்துக்கான உத்தரவினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இலவச அரிசித் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். நியாயவிலைக் கடையில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கி அவர் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 32 ஆயிரத்து 571 நியாயவிலைக் கடைகளில் அரிசி பெற்றுவரும் 1 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 482 குடும்ப அட்டைதாரர்களும் ஒவ்வொரு மாதமும் அவரவர்களுக்குரிய அரிசி முழுவதையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரத்து 268 அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.இலவச அரிசி வழங்கும் திட்டத் தொடக்க விழாவில் உணவுத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக