நீண்ட காலமாக தமிழர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்:
பெ. மணியரசன்
First Published : 30 May 2011 01:34:51 PM IST
திருச்சி, மே 29: நீண்ட காலமாகவே தமிழர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்றார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் பெ. மணியரசன். திருச்சியில் பாவலர் முவ. பரணர் எழுதிய "ஆண்டகை' பாட்டிலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் "முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: "மேடையில் நடித்தவர்களை ஏற்றுக் கொண்ட நாம் படிப்படியாக நடிகர்களையே தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் உளவியல் போக்குக்கு அடிமையாகிவிட்டோம். எழுத்தும் வாழ்க்கையும், பேச்சும் வாழ்க்கையும் வெவ்வேறாகிவிட்டது. எழுதுபவர்கள் எழுதுவதைப் போல வாழ்வதில்லை. தங்களின் தவறுகளை தனிமனித அந்தரங்கம் என்று கூறிவிடுகின்றனர். சங்க காலத்துக்குப் பிறகு, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், களப்பிரர் காலத்துக்குப் பிறகு, சோழர்களின் காலம் கொஞ்சம்தான். அதைத் தொடர்ந்து மாலிக்காபூர், நவாப்புகள், நாயக்கர்கள், மராட்டியர்கள், வெள்ளையர்கள் தமிழர்களை ஆண்டார்கள். நீண்ட காலமாக நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். இன்றுவரை நாம் விடுவிக்கப்படவே இல்லை. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவம் நமக்கு பாடம். எந்த இனத்துக்கும் இப்படியொரு படிப்பினை கிடைக்காது. இன்னமும் மத்திய அரசுக்கு மனு எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறோமா? துணிவின்மை, சந்தர்ப்பவாதம் இவற்றால் படித்தவர்கள்தான் மக்களிடத்தில் தவறான கருத்துகளை விதைத்துவிடுகின்றனர். எழுத்தாளர்கள் பதவி அரசியலை அண்டிப்பிழைக்கும் நிலையைத் தொடரக் கூடாது. எழுத்துரிமைக்காக உயிரையும் கொடுக்கலாம்; ஆனால், உயிருக்காக எழுத்துரிமையை சாகடித்துவிடக் கூடாது. உண்மையை எழுத முடிந்தால் எழுதுங்கள், இல்லாவிட்டால் தாள் வெள்ளையாகவே இருக்கட்டும், பின்னாளில் வருபவர்களாவது எழுதிக் கொள்வார்கள்; கிறுக்கி வைத்துவிட வேண்டாம் என்றார் மாசேதுங். முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு இதைத்தான் சொல்கிறது. அதில் விளைந்த ஒரு நெருப்புக் கீற்றுதான் இந்த ஆண்டகை பாட்டிலக்கிய நூல்' என்றார் மணியரசன். நூலை வெளியிட்டு முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பேசியது: "பழங்காலத்தில் நடைபெற்ற அறப்போரா இலங்கையில் நடைபெற்றது? இல்லை. எந்த அறமும் அங்கே கடைப்பிடிக்கப்படவில்லை. சிறார்களை படையில் பயன்படுத்தினார்கள், மக்களை அரணாகப் பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. வீடுகளில் சமைக்கும்போது குழந்தைகளும் பணியாற்றுவதில்லையா? அதைப் போலத்தான் இதுவும். உலக மொழியாக தமிழ் இருந்தும், உலகம் முழுவதும் தமிழர்கள் இருந்தும் சொந்தமாக கையளவு நிலம்கூட தமிழனுக்கு இல்லை. ஆளில் மட்டுமல்ல தீண்டாமை, மொழியிலும்தான் தீண்டாமை இருக்கிறது. ராஜராஜ சோழனின் உத்தரவில் கோயில்களில் 48 ஓதுவார்கள், இரு இசைக் கலைஞர்கள், ஒரு அர்ச்சகர் இருந்தார். இப்போது ஓதுவார்களே இல்லை. அர்ச்சகர்கள் மிகுந்திருக்கிறார்கள். ஏன் இப்படி நடந்தது? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் நெட்டை மரமாக இருந்துவிடாமல், களப்பணியாற்றுவதுதான் தீர்வைத் தமிழ் இன உணர்வை, மொழி வளர்ச்சியைத் தரும்' என்றார் இளங்குமரனார். விழாவுக்கு பாவாணர் தமிழியக்க அமைப்பாளர் முனைவர் கு. திருமாறன் தலைமை வகித்தார். முனைவர் இளமுருகன் பேசினார். நூலாசிரியர் பரணர் ஏற்புரை வழங்கினார். புலவர் குறளன்பன் வரவேற்றார். முகில் இனியன் நன்றி கூறினார். ராசா ரகுநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.
கருத்துகள்
கொள்கைபிடிப்பு என்பது கேலி கூத்தான காலத்தில் வாழ்க்கையை தேடி இளைய தலைமுறை போவதில் வியப்பில்லை. வள்ளுவம் கூறாத பொதுஉடமையை சீனாவிடம் கற்கவேண்டும? இப்படி தான் சினிமாவை நம்பி நல்ல தலைவர்களை உருவாக்க தவறினோம். எனினும் உங்கள் கருத்து சிந்தனைக்கு உரியது. இளைய சமுதாயம் கவனிக்க.
By Gangadharan
5/30/2011 3:49:00 PM
5/30/2011 3:49:00 PM
கருணாநிதி போன்றோர் தமிழில் நாட்டில் இருக்கும்வரை தமிழருக்கு எந்த நாடோ உரிமையோ கிடையாது. இதுமாறவேண்டும். உண்மையான தமிழர் ஆட்சியில் அமரவேண்டும் .தமிழகம் தனி தமிழ் சுதந்திர நாடாகவேண்டும் இது நடக்குமா .தமிழ்நாட்டு மக்கள் தனி தமிழ் சுதந்திர நாடு பெற தயாராகவேண்டும் .அப்போதான் தமிழன் தலை நிமிர முடியும் இல்லவிடல் எப்போதும் நாம் தமிழர் அடிமைதான் .
By காஞ்சிஅண்ணல் -பாலக்காடு.
5/30/2011 3:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/30/2011 3:16:00 PM