சென்னை, நவ. 19: இலங்கை பிரச்னையில் பிரபாகரன் மீது பழியை சுமத்தி, தான் செய்த தவறுகளை முதல்வர் கருணாநிதி மறைக்கப் பார்க்கிறார் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். ""நம் மெüன வலி யாருக்குத் தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு, தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். தனது அறிக்கையில், எம்.எல்.ஏ. பதவிகளை தூக்கி எறிந்ததாக அவர் கூறியிருக்கிறார். சட்டப்பேரவை தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக எனக் கூறி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் 1984-ம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். தோல்வியிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது. 1991 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. அப்போது ஒரே இடத்தில் வெற்றி பெற்று, படுதோல்வியை தழுவிய கருணாநிதி, எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். தனி நபராக ஆளும் கட்சியை எதிர்க்க துணிவில்லாமல்தான் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தாரே தவிர, எந்த லட்சியத்துக்காகவும் தியாகம் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்ததாகக் கூறியிருக்கிறார் கருணாநிதி. 1976-ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும்தான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு பேசும் கருணாநிதி, 2008-ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருந்த மத்திய அரசு உதவியுடன், இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களைக் கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்? அதுபற்றி ஒரு வரி கூட தெரிவிக்கவில்லையே. கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருந்தால், அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். இதைச் செய்யாததன் மூலம், தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை கருணாநிதி செய்துவிட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கியக் காரணமாகிவிட்டார். தன்னலம் காரணமாக, தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில், ""பிரபாகரன் தீவிரவாதி அல்ல; எனது நண்பன்'' என்று கூறினார் கருணாநிதி. ""நாங்களே அடிமைகளாக இருக்கிறோம்'' என்று கூறி தன் இயலாமையை தெரிவித்தார். அதையெல்லாம் மறந்து, இப்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி, தான் செய்த தவறுகளை மூடி மறைக்கப் பார்க்கிறார் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
11/20/2009 2:20:00 AM
By Ravi
11/20/2009 1:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*