வெள்ளி, 20 நவம்பர், 2009

செம்மொழித் தகுதி ய‌ேற்பால் தமிழ் மீது
உலக அறிஞர்களின் பார்வை



திருச்சி, நவ. 18: செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு, உலக அறிஞர்களின் பார்வை தமிழ் மொழி மீது திரும்பியுள்ளது என்றார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க. ராமசாமி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அதன் தமிழியல் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கான 10 நாள் தொல்காப்பியப் பயிலரங்க நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது: "மிகவுன் தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு 150 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. காலம் தாழ்ந்து கிடைத்தாலும், சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. இதன் மூலம், உலகில் மிகவும் பழைமை வாய்ந்த மொழி தமிழ் என்பதை உலக அறிஞர்கள் அறிந்துள்ளனர். இதனால், தமிழ் மொழியின் மீது உலக அறிஞர்களின் பார்வை திரும்பத் தொடங்கியுள்ளது. தமிழ்ப் புலவர்கள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்பட்டுக் கிடந்தனர். தமிழ் மொழியின் தன்மை, தொன்மை, பண்பாடு, தங்களுடைய தனித்தன்மை ஆகியவற்றை அறியாதவர்களாக வாழ்ந்தனர். இந்தச் சூழ்நிலையில், தமிழ்ப் புலவர்களின் உணர்வைத் தட்டி எழுப்பியவர் பாவாணர். தமிழ் மொழியின் தனிப் பெரும் சொத்தாக , தமிழ் வரலாற்றின் மிகத் தொன்மையான சான்றாக தொல்காப்பியம் திகழ்கிறது. தொல்காப்பியம் போன்ற வோறொரு இலக்கண நூல் இதுவரை தமிழிலும் இல்லை; உலகில் வேறெந்த மொழியிலும் தோன்றவில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியம் பற்றிய உணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காகவே இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது' என்றார் ராமசாமி. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண்பேராய உறுப்பினர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேசியது: "தொல்காப்பியத்தில் தத்துவம், மொழி, இலக்கணம் என அனைத்துப் பண்புகளும் இருக்கின்றன. தமிழர்கள், தமிழ்ப் பண்பாடு பற்றிய மிகப் பெரிய ஆவணம் இது. உலகில் எந்த இலக்கியத்திலும் பண்பாடு புகுத்தப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் புகுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது. இதைச் சாதாரண புலவரால் எழுதியிருக்க முடியாது. அவர் தத்துவ ஞானியாகத்தான் இருக்க முடியும்' என்றார் அப்துல் ரஹ்மான். பல்கலைக்கழகப் பதிவாளர் த. ராமசாமி தலைமை வகித்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் ச. மோகன், நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான இ. சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழ்த் துறைப் பேராசிரியர் பா. மதிவாணன் வரவேற்றார். துறைத் தலைவர் அ. ஆலிஸ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக