Last Updated :
சென்னை, நவ. 18: ""இலங்கை விவகாரத்தில் பிரச்னையைத் திசை திருப்பத் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் கருணாநிதியைத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது'' என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து முதல்வர் கருணாநிதி கொஞ்சமும் கவலைப்படவில்லை. ரணில் கூறிய செய்திகளை வைத்துக் கொண்டு, புலிகள் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசி இருக்கிறார் அவர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலையில் தாற்காலிக நிர்வாக அமைப்புத் திட்டத்தை அறிவித்தது. அதில், நிலம், காவல் துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் போன்றவை தொடர்பான எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டத்தை அளித்தனர். இதை ஏற்பது குறித்து பேச்சு நடத்த சிங்கள அரசு மறுத்தது. இதனால், பேச்சுவார்த்தை முறிந்தது. சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையில் இருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணமே தவிர பிரபாகரன் அல்ல. முற்றிலும் தவறு... கடந்த 2005-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. அந்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படவே இல்லை. இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றை முதல்வர் கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும். அதிபர் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதற்கு புலிகள் தவறி விட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டு. போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும், பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால், அந்த உடன்பாட்டில் உள்ள அம்சங்களை நிறைவேற்ற பிரதமர் ரணில் காலம் கடத்தினார். இந்தக் காலத்தில் சிங்கள ராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கச் செய்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதி செய்தார். இந்த நிலையில், தேர்தலால் தங்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். அவர்களது விருப்பத்துக்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. பிரச்னையைத் திசை திருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயன் அளிக்கப் போவதில்லை. தமிழனம் அவரை மன்னிக்கப் போவதும் இல்லை'' என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக