ஞாயிறு, 17 ஜூலை, 2016

மறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு

  வந்தவாசி-கவிஞர் முருகேசு : vandavasi_piranthanaalvizhaa01
மறைந்த தலைவர்களின்  ஈகங்களை
இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது

நம் கடமை – கவிஞர் முருகேசு
 காமராசர், மறைமலையடிகள்

பிறந்த நாள் விழாவில்
                   நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு

வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில்  ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.
இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் மு.சண்முகம், நூலக உதவியாளர்கள் மு.இராசேந்திரன், கு.சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வந்தவாசி கரூர் வைசுயா வங்கியின் மேலாளர் இரா.சீனிவாசன், வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் ஏ.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசுதமிழ், தமிழர்கள் வளர்ச்சி பாடுபட்ட முன்னோடிகள்…’ எனும் தலைப்பில் பேசியதாவது:
“தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அத்தகைய தமிழ்ச் சான்றோர்களின் பெருமையையும், சிறப்பையும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறியாமல் இருக்கிறார்கள். ஆறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த பெருந்தலைவர் காமராசர் தனது ஆட்சிகாலத்தில் தமிழகத்திலிருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கினார். ஏழை வீட்டுப் பிள்ளைகள் பசியாறிப் படித்திட வேண்டுமென்பதற்காக மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். தமிழகத்தின் குடிநீர்ச் சிக்கல், தொழில் வளர்ச்சிக்கு அடிகோலிடும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்தார். இன்றைக்குத் தமிழகத்தின் நீர்வரத்திற்கு பெரும்துணையாக இருக்கும் அணைகள் காமராசரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
தனித்தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெருமகனார் மறைமலை அடிகள். தமிழில் பிறமொழிகள் கலப்பதால், தமிழின் தனித்துவம் காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதற்காகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தமிழ்மொழியின் சிறப்பைப் பலரும் அறிந்திட வேண்டுமென்கிற நோக்கில் நூல்கள் பல படைத்திட்டார். தமிழர் வீட்டுக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்டவேண்டுமென்று கூறினார். இப்படியான சான்றோர்களின் கருத்தினைக் கேட்காததால்தான் இன்றைக்குத் தமிழ்மொழி காலப்போக்கில் ஊடகங்கள் வழியே சிதைக்கப்படும் போக்கினைக் கண்டு வருகிறோம்.
தமிழ் நாட்டின் பெருமைமிகு வளர்ச்சிக்கும், நம் தாய்மொழியாம் தமிழின் ஏற்றமிகு சிறப்பிற்கும் பாடுபட்ட பெருமக்களின் சிறப்புகளை அவர்களது பிறந்த நாள்களில் மட்டுமல்ல, ஏனைய நாட்களிலும் பேசுவதும் பரப்புவதும் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்”  என்றார்.
நிறைவாக,  மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.
வந்தவாசி-வாசகர்வட்டவிழா03 : vandavasi_piranthanaalvizhaa03 வந்தவாசி-வாசகர்வட்டவிழா02 : vandavasi_piranthanaalvizhaa02 வந்தவாசி-வாசகர்வட்டவிழா04 : vandavasi_piranthanaalvizhaa04 வந்தவாசி-வாசகர்வட்டவிழா05 : vandavasi_piranthanaalvizhaa05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக