குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும்
மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்!
பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04
(வேலூர்
சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது
வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது மட்டுமே, குறையற்றது எனக் கொள்ள முடியாது. இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையைக் குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர்.
இந்தக் கருத்தைப் பதிவு செய்தவர் ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி திரு. ஒய்.கே.சபர்வால்.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்த மூத்த வழக்குரைஞர் திரு.சோலி சோரப்சி அவர்களும் பல்வேறு கட்டுரைகள் வாயிலாக இதையே வலியுறுத்தி வருகிறார்.
இதையெல்லாம் விடுங்கள். எங்கள் வழக்கில்
என்ன நடந்தது? எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை உறுதி
செய்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை வகித்த நீதியரசர் திரு.கே.டி.தாமசு மாசி 13, 2047 / 25-02-2013 அன்று இந்து இதழுக்கு அளித்த பேட்டியில், இராசுவு கொலை வழக்கின் தீர்ப்பு குறையுடையது, மறு ஆய்வுக்கு உட்பட வேண்டியது என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இது சட்டப்படி பயனற்ற, காலம் கடந்த
ஒப்புதல் வாக்குமூலமாக இருப்பினும் நமது நீதி வழங்கல் முறையை
அம்பலப்படுத்தியிருக்கிறது. இது எங்கள் வழக்கில் மட்டுமே நிகழ்ந்து விட்ட
நீதிப் பிழையன்று.
காவல், சிறை, அரசியல், அரசு என அனைத்து
அமைப்புகளாலும் பாதிக்கப்பட்டு நிற்கும் நாட்டின் கடைக்கோடி மனிதனின்
இறுதிப் புகலிடம் உச்ச நீதிமன்றம் மட்டுமே!
அதிலும் கீழமை நீதிமன்றங்களால்
பாதிக்கப்பட்டு விட்டால் இறுதியில் நீதிபெற உச்ச நீதிமன்றம் உள்ளது என்ற
நப்பாசையாவது பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
எதார்த்தத்தில் நீதி என்னவாக இருக்கிறது
என்பதைப் பெரும்பாலும் யாரும் உய்த்துணர முற்படுவதில்லை. நிறுவப்பட்டு
விட்ட ஓர் அமைப்பு முறையைக் கேள்வி எழுப்ப எவருக்கும் அச்சம் கலந்த தயக்கம்
இருக்கவே செய்கிறது.
ஆவணி 09, 2042 / 26.08.2011 அன்று
எம்மூவர் மரணத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட செய்தி வெளியான பின்பு ஆவணி
16, 2042 / 02-09-2011 அன்று தெ ஏசியன் காலம் (The Asian Age) இதழில்,
திரு.கே.டி.தாமசு ஒரு கட்டுரை எழுதினார்.
அந்தக் கட்டுரையின் இறுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் உணர்ச்சி கொண்ட மக்களை நிறைவுபடுத்த குற்றமற்றவரான ‘ஏசு கிறித்து’ கொல்லப்பட்டார் எனவும் அவருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பெயர் ‘பிலாத்து’ எனவும் சொல்லி முடித்திருந்தார்.
இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் ஆவணி 23, 2042 / 07-09-2011 அன்று அவருக்கு ஒரு விடை மடல் எழுதினேன்.
அதில், உளச்சான்றோடு அவர் எழுதிய
கட்டுரைக்கு நன்றி தெரிவித்து விட்டு, ‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பே
இறுதியானது என அறிவுரை கூறும் பலருக்கும் தாங்கள் இந்தக் கட்டுரையின் மூலம்
மிகச் சரியான மறுமொழி தந்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டு விட்டு,
இறுதியில் மடலை இவ்வாறு முடித்தேன்.
ஐயா, தூக்குமேடை மீது நான்
நிறுத்தப்படும் அந்த நேரத்தில், தூக்கிலிடுபவர் எனது கழுத்தில் சுருக்குக்
கயிற்றினை இறுக்கும் அந்தச் சமயத்தில் இயற்கை அன்னையிடம் வேண்டுவேன்:
ஓ… இயற்கையே! குற்றமற்ற இந்த மனிதனைக் கொல்லத் துடிக்கும் அத்தனை மனிதர்களையும் வரலாறு மன்னிக்கட்டும். இதைக் குறிப்பிடக் காரணமிருக்கிறது.
நீதிப் படுகொலை என உச்ச நீதிமன்றத்தால்
கருத்துரைக்கப்பட்ட எமது வழக்கின் மேல்முறையீட்டு உசாவலை எப்படி உசாவி
முடித்தனர் என அறிய வேண்டாவா?
ப.சீ.த.(தடா) சட்டப்படி உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்புப் பறிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் திரு.கே.டி.தாமசு, திரு.வாத்வா, திரு.காத்திரி ஆகிய மூவர் அடங்கிய அமர்வின் உசாவலே எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு.
குற்றவாளிகள் 25 பேரின் சார்பிலும் மூத்த வழக்குரைஞர் திரு.என்.நடராசன், இராசீவு கொலை வழக்கு ப.சீ.த.(தடா) சட்டப் பிரிவுகளின் கீழ்த் தண்டிக்கத்தக்க தீவிரவாதக் குற்றமல்ல. இது ஒரு கொலை வழக்கு மட்டுமே என வாதிட்டார்.
எதிர்வாதம் செய்ய முடியாத சூழலில் நீதிபதிகள் இதனை அப்படியே ஏற்றனர்.
பின்னர் நீதிமன்றத்துக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகச் சட்ட உறுப்பினர்கள் கருதினர்.
முதலாவது வாய்ப்பு – மீண்டும் கீழமை
அல்லது உயர் நீதிமன்றத்துக்கு வழக்கை அனுப்பி குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின் கீழ் உசாவ உத்தரவிடுவது.
இரண்டாவது வாய்ப்பு – ‘ப.சீ.த.(தடா) சட்டம் ஒரு வழக்கில் பொருந்தாது என முடிவுக்கு வந்துவிட்டால் ப.சீ.த.(தடா)
ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்
ஒருவரை தண்டிக்க முடியாது என பிரிவு 7 / 431 வழக்கில் உச்ச நீதிமன்றத்
தீர்ப்பு உள்ளதால் எங்கள் அனைவரையும் விடுதலை செய்வது.
ஆனால், முற்றிலும் எதிர்பாராத நிலைப்பாட்டினை நீதிமன்றம் எடுத்தது. அதாவது, ப.சீ.த.(தடா) சட்டம் எங்கள் வழக்குக்குப் பொருந்தாது என்றாலும், ப.சீ.த.(தடா) வாக்குமூலத்தை முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்தித் தண்டிக்கலாம் எனக் கூறி முந்தைய தீர்ப்பை மாற்றி அமைத்தனர்.
அத்தோடு நிற்கவில்லை. ஏற்கெனவே கல்பனாத்துஇராய் என்ற அரசியல் தலைவர் ப.சீ.த.(தடா) சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது மேல் முறையீட்டை உசாவிய உச்ச நீதிமன்றம், ஒருவரது ப.சீ.த.(தடா)
வாக்குமூலத்தை அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவருக்கு எதிரான
ஆதாரமாகக் கொண்டு தண்டிக்கக் கூடாது எனக் கூறி அவரை விடுதலை செய்து
உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பும் எங்கள் வழக்கில் மாற்றி அமைக்கப்பட்டது – திருத்தப்பட்டது.
எங்கள் வழக்கில் மாற்றியமைக்கப்பட்ட
புதிய இரண்டு சட்ட நிலைப்பாடுகள்தான் எங்கள் வழக்கை – வாழ்க்கையைத்
தீர்மானித்தது – சின்னாபின்னமாக்கியது.
உலகமே உற்று நோக்கும் வழக்கில் 26 பேரையும் விடுதலை செய்து விடுவதில் நீதிமன்றம் சிந்தித்திருக்கும் போலும்.
ப.சீ.த.(தடா) ஒப்புதல்
வாக்குமூலம் என்ற ஆவணத்தின் ஆபத்து குறித்து அறிந்த நிலையில் அதனை
எதிர்த்தும், அவற்றில் எவ்வாறு துன்புறுத்திக் கையொப்பம் பெற்றனர் என்பது
குறித்தும் விளக்கி வழக்கின் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் எழுத்துபூர்வமாக
பதிவுசெய்த முறையீடுகள் நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்
கொள்ளப்படவில்லை.
தமது தீர்ப்புப் பத்தி 405- இல் கீழ் வருமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது
எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையைப் பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின்
உளவியலைப் பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று
வழக்கை உசாவிய நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.
நாங்கள் நால்வரும் தூக்குப்பிரிவில்
இருந்த 1999-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எம்மை நேர்கண்டு பேச வந்த
மறைந்த குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின் மருமகள் திருமதி.மோகினி கிரி அவர்களிடம் ஆதாரங்களுடன் இதனை எடுத்துக் காட்டிய போது அதிர்ந்து போனார்.
எங்கள் வழக்கில் எப்படியெல்லாம் மூன்றாம்
தரமுறை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தப் புலனாய்வில் அங்கமாக அன்று
இருந்த ஆய்வாளர் திரு.மோகன்ராசு இன்று ஊடகங்கள் வழியே அம்பலப்படுத்தி வருவதை அனைவரும் அறிவோம்.
அம்மா, “உங்கள் மகன் கடைகளில் எளிதில் கிடைக்கும் மின்கலன்(9 வோல்ட் பேட்டரி)
வாங்கிக் கொடுத்தான் என்பதற்காகவெல்லாம் தூக்குத் தண்டனையா எனக் கூறி
நீதிபதிகள் வழக்கைத் தூக்கி எறிந்து விடுவார்கள். பாருங்கள்” என்றார் உச்ச
நீதிமன்றத்தில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர் ஒருவர்.
அன்று அவர் சொன்னது என்னமோ உண்மைதான்.
மிகப் பெரும் கொடூரக் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றம் கண்டிருப்பதால் இது
ஒப்பீட்டளவில் ஒன்றுமில்லைதான்.
எங்கள் வழக்கில் மறைந்து போனஆளின் பேருருவம் நீதியின் கண்களைக் குருடாக்கி விடும் என நாங்கள் எவருமே கற்பனை செய்திராத தருணம் அது.
ஆனால் அனைவரின் நம்பிக்கையையும்
பொய்யாக்கி, அதற்குப் பின்னர் எடுத்துக் காட்டாகக் கொண்டு எந்த நீதிபதியும்
தீர்ப்புக் கூற முன்வராத, முரண்பாடுகளின் மொத்த உருவமாக, நேர்மையற்ற
தீர்ப்பு ஒன்று ஏழு நபர்களை மட்டும் சதிக் குற்றவாளிகள் என அறிவித்து
11-05-1999 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட போது அன்த்தோல் பிரான்சு என்பவரின் கீழ்வரும் வரியே என் நினைவில் வந்தது.
“நீதி என்பதே நிறுவப்பெற்ற அநீதியை நியாயப்படுத்துவதுதான்!”
(வலிகள் தொடரும்)
–பேரறிவாளன்
இளைய விகடன் 06.07.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக